நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) என்பது இன்று சகஜமான நோயாக மாறிவிட்டது. வயதாகிவிட்டாலே இந்த நோயை அனுபவிக்க வேண்டும் என்பது எழுதப்படாத நியதி. வயதாகியும் ஒருவருக்கு நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் இல்லை எனில் அது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
நீரிழிவு நோய் என்பது சர்க்கரை இன்சுலின் அளவுடன் நிறுவிடாமல் அது நரம்புகளையும், இரத்த ஓட்டத்தையும் சேர்த்தே பாதிப்பை விரிவுபடுத்துகிறது. இந்த பாதிப்புகள் பாதங்களுக்கும், சருமத்திற்கும் கடுமையான சேதத்தை உண்டாக்குகின்றன.
ஆனால் இதில் மகிழ்ச்சியான செய்தி என்னவெனில் சர்க்கரை நோய்க்கான சிகிச்சைகளை முறையாக பின்பற்றினால் இந்த பாதிப்பை தவிர்க்கலாம். அப்படி முறையான சிகிச்சைகள் மற்றும் விழிப்புணர்வின் காரணமாக உறுப்பு துண்டிக்கும் அபாயம் 50 சதவீதமாக குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை கால்களில் புண்கள் உருவாகிவிட்டால் பாதுகாப்பு கூடுதலாக தேவைப்படுகிறது. அப்படி 80 சதவீத உறுப்பு துண்டிப்புகளுக்கு கால்களில் உருவாகும் புண்கள்தான் (foot ulcers) காரணம் என்கிறது ஆய்வு.
இதுபோன்ற சூழ்நிலையில் கால்களின் புண்களை சரி செய்ய முடியாத பட்சத்தில் அதன் தீவிரம் அதிகரித்துக்கொண்டே போனால் கால்களை துண்டிக்கும் நிலை ஏற்படுகிறது. அந்த புண்களின் தீவிரத்தை பொருத்து கால் விரல்கள் அல்லது முழு காலையும் எடுக்க நேரிடும்.
எந்த நிலையில் கால்களில் புண்கள் உருவாகின்றன..? என்ன காரணம்..?
நீரிழிவு நோயாளிகள் பொதுவாகவே உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அப்படி கட்டுப்பாடுகள் இல்லாமல் இருப்பதே தீவிர பாதிப்புகளுக்கு காரணமாக அமைகின்றன. அந்த வகையில் புகைப்பிடித்தல், மது, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் இதற்கு காரணமாக அமைகின்றன.
Type 2 Diabetes : டைப் 2 நீரிழிவு நோயால் யாருக்கு அதிக ஆபத்து..?
இவை தவிர அதிக இரத்த சர்க்கரை அளவு, உயர் இரத்த அழுத்தம், கால் நரம்புகளில் பாதிப்பு, மோசமான இரத்த ஓட்டம், காலில் புண் (foot ulcers)உருவாகுதல் குடும்ப வரலாறு, கடந்த கால உறுப்பு துண்டிப்பு சிகிச்சைகள், சிறுநீரகக் கோளாறு, கால்களில் குறைபாடு (Foot deformities ) போன்ற காரணங்களாலும் காலில் புண்களின் தீவிரம் அதிகரித்து உறுப்பு துண்டிப்பு அறுவை சிகிச்சை செய்ய நேரிடும். எனவே ஆரம்ப நிலையிலேயே மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவதும் அவசியம்.
காலில் புண் (foot ulcers)உருவாவதை தடுக்கும் வழிகள் :
* தினமும் கால்கள் , பாதங்கள் , நகங்களை அடிக்கடி கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். கீரல்கள், தடிப்பு, சிவந்து போதல் போன்ற அறிகுறிகள் இருக்கின்றனவா என்பதை தினமும் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்
* தினமும் கால்களை, பாதங்களை கழுவ வேண்டும். பின் அவற்றை ஈரப்பதமின்றி நன்கு உலர்த்த வேண்டும். உலர்த்திய பின் மாய்ஸ்சரைசர் தடவுங்கள். கால்களை வறட்சியின்றி பார்த்துக்கொள்ளுங்கள்.
* கால்களை சுத்தம் செய்ய கூர்மையான எந்த கருவிகளையும் பயன்படுத்தாதீர்கள். கால் நகங்களை சுத்தம் செய்யும்போதும் இரத்தம் வராதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். நகவெட்டிகளை பயன்படுத்தும்போதும் கவனம் அவசியம். குறிப்பாக கட்டைவிரலை பாதுகாப்பாக கையாள்வது அவசியம்.
* செருப்பு இல்லாமல் ஒருபோதும் வெளியே செல்லாதீர்கள். வீட்டிலும் செருப்பு பயன்படுத்துதல் நல்லது.
* நல்ல தரமான ஷூ வாங்கி பயன்படுத்துதல் நல்லது. சாக்ஸ் அணியும் போது அவை இறுக்கமாக எலாஸ்டிக் கொண்டதாக இல்லாமல் காட்டன் சாக்ஸாக வாங்குங்கள். கால் பாதங்கள் அதிக வியர்வையுடன் இருப்பதையும் தவிர்க்க வேண்டும்.
* புகைப்பிடிக்கும் பழக்கமும் கால்களின் ஆரோக்கியத்தை சேதப்படுத்தும். ஏனெனில் புகைப்பழக்கம் இரத்த ஓட்டத்தை பாதிப்பதால் கால்களில் அல்சர் உண்டாகலாம்.
* கால்கள், பாதங்களை பராமரிக்க அடிக்கடி மருத்துவரை அணுகுவது நல்லது. இதனால் எந்த பாதிப்பு வந்தாலும் அதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை தர முடியும். இதனால் தேவையற்ற பாதிப்புகளை தவிர்க்கலாம்.
கால்களின் அல்சர் பாதிப்பு : மருத்துவரை எப்போது அணுக வேண்டும்..?
கால் நகங்களுக்குள் நகம் வளர்தல்
கொப்புளங்கள்
உங்கள் கால்களின் அடிப்பகுதியில் சதை நிற புடைப்புகள்
ஒரு திறந்த புண் அல்லது இரத்தப்போக்கு
வீக்கம்
சிவத்தல்
ஒரு பகுதியில் வெப்பம்
வலி (உங்களுக்கு நரம்பு பாதிப்பு இருந்தால் எதையும் உணராமல் இருக்கலாம்)
நிறம் மாறிய தோல்
ஒரு வகையான துர்நாற்றம்
ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் புண் , அந்த புண் 3/4 அங்குலம் (2 சென்டிமீட்டர்) விட பெரிய புண்ணாக விரிவடைதல்
விரைவில் குணமடையாத புண்
மிகவும் ஆழமான புண்
பாதங்களின் கீழே உள்ள எலும்பு தெரிதல் போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
துண்டித்தல் மட்டுமே ஒரே வழி என்றால் என்ன செய்வது?
காயத்தின் தீவிரத்தைப் பொறுத்து கால் புண்களுக்கான சிகிச்சைகள் மாறுபடும். பொதுவாக, சிகிச்சையானது இறந்த திசுக்களை அகற்றுவதற்கும், காயத்தை சுத்தமாக வைத்திருப்பதற்கும் செய்யப்படுகின்றன. காயங்கள் அடிக்கடி கண்காணிக்கப்பட வேண்டும், குறைந்தது ஒவ்வொரு நான்கு வாரங்களுக்கும் ஒரு முறை கண்கானிக்கப்பட வேண்டும். இந்த நிலை கடுமையான திசுக்களின் இழப்பு அல்லது உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்றை ஏற்படுத்தும் போது, உறுப்பு துண்டித்தல் மட்டுமே ஒரே வழியாக உள்ளது.
சர்க்கரை நோயாளிகள் காலையில் சாப்பிட ஆரோக்கியமான காலை உணவுப் பட்டியல் இதோ...
அறுவை சிகிச்சை நிபுணர் சேதமடைந்த திசுக்களை அகற்றி, முடிந்தவரை ஆரோக்கியமான திசுக்களைப் பாதுகாக்க முயற்சி செய்வார்கள். அறுவைசிகிச்சைக்குப் பிறகு, நீங்கள் சில நாட்களுக்கு மருத்துவமனையில் கண்காணிக்கப்படுவீர்கள். உங்கள் காயம் முழுமையாக குணமடைய நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை ஆகலாம்.
உறுப்பு துண்டிக்கப்பட்ட பிறகும், உங்கள் நீரிழிவு சிகிச்சை பராமரிப்பை பின்பற்றுவது முக்கியம். ஏற்கெனவே உறுப்பு துண்டிப்பு செய்தவர்களுக்கு மீண்டும் அதுபோன்ற ஆபத்து உண்டாவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே ஆரோக்கியமான உணவுகளை உண்ணுதல், தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல் மற்றும் புகையிலையைத் தவிர்ப்பது ஆகியவை நீரிழிவு நோயின் கூடுதல் சிக்கல்களைத் தடுக்க உதவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.