கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியான வயது உடைய பெரியவர்கள் பலரும் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு தொற்று ஏற்பட்டாலும் கூட, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு மிக மோசமான பாதிப்புகள் ஏற்படுவதில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், தடுப்பூசி செலுத்தும் வயது வரம்பில் இல்லாத சிறுவர்கள், குறிப்பாக பச்சிளம் குழந்தைகளை இந்த கொடிய நோய் தாக்காமல் பாதுகாப்பதே இன்றைய சவாலாக உள்ளது. அதிலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள், தங்கள் குழந்தைகளுக்கு பலூட்டினால் அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் நம்மில் பலரிடம் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் பாலூட்டுவதால் குழந்தைக்கு தொற்று ஏற்பட்டது என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பீடியாட்ரிக் ரிசர்ச்’ என்ற இதழில் இந்த ஆய்வு குறித்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பாலூட்டும் தாய்மார்கள் 110 பேரிடம் இருந்து தாய்ப்பாலை சேகரித்து ஆய்வு மேற்கொண்டனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் இந்த ஆய்வு நடைபெற்றது.
மொத்தமுள்ள 110 தாய்மார்களில் 65 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் ஆவர். மேலும், 9 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்த போதிலும், அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை. எஞ்சியுள்ள 36 தாய்மார்களுக்கு அறிகுறிகள் இருந்தபோதிலும், அவர்களிடம் கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை.
தொற்று உறுதியான அல்லது அறிகுறிகள் கொண்ட தாய்மார்கள் 7 பேரின் தாய்ப்பாலில் கொரோனா மரபுக் கூறுகள் (RNA) இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அதேசமயம், இதே தாய்மார்களிடம் ஒன்று முதல் 97 நாட்கள் இடைவெளியில் எடுக்கப்பட்ட தாய்ப்பாலில் கொரோனா மரபுக் கூறுகள் இல்லை என்பது உறுதியானது.
கோவிட்-19 காலத்தில் கர்ப்பமடைவது குறித்த கட்டுக்கதைகளும், உண்மைகளும்!
மேலும், இந்த 97 தாய்மார்களும் அவர்களது குழந்தைகளுக்கு பாலூட்டியபோது, குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டதற்கான மருத்துவ ரீதியான ஆதாரங்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதையும், கொரோனா மரபுக் கூறுகள் உள்ளதை கண்டறிவதற்கான மிக முக்கியமான காரணங்கள் ஆய்வின்போது கண்டறியப்படாமல் இருந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனாலும், இன்றைய நாள் வரையிலும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களிடம் இருந்து குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பரவுகிறதா என உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இதுவே பெரியது என்பதும், தாய்மார்களுக்கு தொற்று உள்ள போதிலும், அவர்களிடம் இருந்து குழந்தைகளுக்கு அது பரவுவதில்லை என்பதை உறுதி செய்யப்பட்ட ஆய்வு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வுக் குழுவுக்கு தலைமை வகித்த பௌல் க்ரோஸ்டட் கூறியதாவது ”தாய்ப்பால் என்பது குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துகளில் மிக முக்கியமானது. தாய்ப்பாலில் இருக்கும் கொரோனா மூலக் கூறுகள் எதுவும் குழந்தைகளுக்கு பரவுகிறது என்பதற்கான ஆதாரம் எதையும் நாங்கள் கண்டறியவில்லை. அதாவது, தாய்ப்பால் ஆபத்தானது இல்லை என்பதேயே எங்களது ஆய்வு காட்டுகிறது’’ என்று தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.