கொரோனா பாதித்தவர்களுக்கு ஆண்டிபாடி பரிசோதனை செய்வது ஏன் ? அதன் பயன் என்ன?

ஆண்டிபாடி பரிசோதனை

மக்களிடையே இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்றே சொல்ல வேண்டும்

  • Share this:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலையின்போது வயதானவர்களையும், இணை ஏற்கனவே உள்ளவர்களுக்கு மட்டுமே அதிக பாதிப்பு ஏற்படுத்திய நிலையில், இரண்டாவது அலையில் இளைஞர்கள், பிற நோய் பாதிப்பு இல்லாதவர்களையும் தாக்கி வருகிறது.

இரண்டாவது அலையில் இளைஞர்களும் கொரோனாவால் உயிரிழந்து வருகின்றனர். இதனையடுத்து சிறிதளவு அறிகுறிகள் தென்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை எடுத்துக்கொண்டால் அதிக பாதிப்பு ஏற்படுத்தாமல் தடுக்க முடியும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்திவருகின்றனர். இருப்பினும் மக்களிடையே இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்றே சொல்ல வேண்டும். பலரும் ஆபத்தான நிலையிலேயே மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

கொரோனாவுக்கான அறிகுறிகளாகக் காய்ச்சல், வறட்டு இருமல், மூச்சுத்திணறல், தொண்டைப்புண், சுவை மற்றும் வாசனை இழப்பு போன்றவை கூறப்படுகிறது. சிலருக்கு வாந்தி, கண் எரிச்சல், தலைவலி போன்றவையும் கொரோனா அறிகுறிகளாக உணரப்படுகிறது. ஒருவருக்கு மேற்சொன்ன அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாகத் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டால் நோயின் தாக்கத்தைக் குறைக்க முடியும்.கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு முதலில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பின்னர் அவர்களின் நுரையீரலில் நோய் பாதிப்பை அறிய சிடி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்படுகிறது. சிலருக்கு ரேபிட் ஆண்டிஜென் டெஸ்ட் எனப்படும் துரித பரிசோதனை செய்யப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு ஆண்டிபாடி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நம் உடலில் நோய் பாதிப்பு ஏற்படும்போது , நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக ஆண்டிபாடி உருவாகும். இந்த ஆண்டிபாடியானது நமது உடலில் நோய் பாதிப்பு ஏற்படாத வண்ணம் பாதுகாக்கும். அதாவது நோயின் தாக்கம் உடலில் ஏற்படும்போது நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது பாதுகாப்பு புரோட்டின்களை உருவாக்கும். அதுவே ஆண்டிபாடியாகும். நோயின் தாக்கத்திற்கு ஏற்ப இந்த ஆண்டிபாடி உடலில் மாறுபடுமாம்.

உங்களுக்கு கொரோனா பாசிடிவா..? வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறீர்களா..? விரைவில் குணமடைய நீங்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்..!

இதனை அடிப்படையாகக் கொண்டு நம் உடலில் நோய் எந்த அளவு பாதித்துள்ளது என்பதை அறிய முடியும். இதில் பரிசோதனை முடிவுகள் உடனடியாகத் தெரிய வரும். மேலும் ஆண்டிபாடி பரிசோதனையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கொரோனாவுக்கு எதிராக சரியாக வேலை செய்கிறதா? இல்லையா? என்பதையும் அறிய முடியும். இந்த ஆண்டிபாடியை இம்யூனோகுளோபுளின் என்றும் சொல்லலாம். நோய் தொற்று ஏற்பட்ட தொடக்கத்தில் இம்யுனோகுளோபுளின் எம் (Immunoglobulin M) என்றும், நோய் எதிர்ப்பு சக்தி நோய் பாதித்த சிறிது நாளுக்குப் பின் உருவாக்கும் ஆண்டிபாடி இம்யுனோகுளோபுளின் ஜி (Immunoglobulin G) என்றும் அறியப்படுகிறது.இந்த ஆண்டிபாடி பரிசோதனையில் நமது ரத்தத்தில் உள்ள ஆண்டிபாடிஸ் அல்லது புரோட்டினை பற்றித் தெரிந்து கொள்ள முடியும். இதற்காக ஆய்வக பரிசோதகர் நமது உடலிலிருந்து சிறிதளவு ரத்தத்தை எடுத்துக்கொள்வார். பின்னர் ரத்தத்தில் உள்ள இம்யுனோகுளோபுளின் எம் மற்றும் இம்யூனோகுளோபுளின் ஜி குறித்து ஆய்வு செய்வார். இம்யூனோகுளோபுளின் எம் நோய் தொற்று ஏற்பட்ட 4,5 நாட்களில் உருவாகும்.

இம்யுனோகுளோபுளின் ஜி நோய் பாதிப்பு ஏற்பட்ட 14 நாட்களில் உருவாகும். இம்யூனோகுளோபுளின் ஜி நோய் பாதித்த சில மாதங்களுக்குப் பிறகும் நம் ரத்தத்தில் இருக்கும். அதனை அடிப்படையாகக் கொண்டு தடுப்பூசி எடுத்துக்கொண்டது போதுமா? அல்லது மீண்டும் போட வேண்டுமா ? என்பதை அறிய முடியும்.

 
Published by:Sivaranjani E
First published: