Home /News /lifestyle /

ஓமைக்ரான் தொற்றின் இரண்டு புதிய அறிகுறிகள் : உடனே நீங்கள் செய்ய வேண்டியவை என்ன..?

ஓமைக்ரான் தொற்றின் இரண்டு புதிய அறிகுறிகள் : உடனே நீங்கள் செய்ய வேண்டியவை என்ன..?

ஓமைக்ரான்

ஓமைக்ரான்

ரன்னிங் நோஸ் எனப்படும் மூக்கொழுகுதல் மற்றும் தலைவலி ஆகிய இரண்டும் ஓமைக்ரான் பாதிப்பின் இரண்டு புதிய அறிகுறிகளாகக் கூறப்படுகின்றன.

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் ஓமைக்ரான் பாதிப்புக்குள்ளான நபர்களின் எண்ணிக்கை எப்படியான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அச்சுறுத்தலை விதைத்துள்ளது. அதே நேரத்தில், பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும், இறப்பு மற்றும் தீவிர பாதிப்பின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது ஆறுதல் அளிக்கிறது.

SARs-COV-2, கோவிட் 19 தொற்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஜலதோஷம் போன்ற அறிகுறிகள் தோன்றும் போது, தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், கூடுதலாக இரண்டு அறிகுறிகள் கோவிட்19 தொற்றிலிருந்து, ஓமைக்ரான் பாதிப்பை வேறுபடுத்திக் காட்ட உதவுகிறது. அந்த அறிகுறிகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

ஓமைக்ரான் பாதிப்பின் அறிகுறிகள் என்ன?

ஓமைக்ரான் வைரஸ் மற்ற வைரஸ் வேரியன்ட்களை விட அதிக வேகத்தில் பரவும் ஆபத்தைக் கொண்டுள்ளது. ஓமைக்ரான் பாதிப்பின் அறிகுறிகளாக, காய்ச்சல், தொண்டை வலி, தீவிரமான உடல் வலி, தூங்கும் போது வியர்ப்பது, பசியின்மை மற்றும் வாந்தி ஆகியவை கூறப்படுகிறது.

தென்னாப்பிரிக்க மருத்துவ கவுன்சிலின் தலைவரான மருத்துவர் ஏஞ்சலிக் கோயட்ஜி தெரிவிக்கையில், ஓமைக்ரான் வேரியன்ட் தென்னாப்பிரிக்காவில் தான் முதல் முதலில் கண்டறியப்பட்டது. நோய் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்ட நோயாளிகளிடம் வாசனை மற்றும் சுவை ஆகிய உணர்வுகள் இழப்பு ஏற்படவில்லை. அதே போல, சளி, காய்ச்சல் அறிகுறிகளான மூக்கடைப்பு, அதிக காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளும் இல்லை. இதுவே, ஓமைக்ரான் மற்றும் டெல்டாவை வேறுபடுத்திக் காட்டுகின்றன.



 

ஓமைக்ரான் பாதிப்பின் இரண்டு புதிய அறிகுறிகள்

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளின் படி, ரன்னிங் நோஸ் எனப்படும் மூக்கொழுகுதல் மற்றும் தலைவலி ஆகிய இரண்டும் ஓமைக்ரான் பாதிப்பின் இரண்டு புதிய அறிகுறிகளாகக் கூறப்படுகின்றன.

கொரோனா தொற்றுக்கு பின் உங்கள் டூத்பிரஷை மாற்றுவது ஏன் மிகவும் முக்கியம்?

ஓமைக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் கிட்டத்தட்ட 20 அறிகுறிகள் வரை குறிப்பிட்டுள்ளனர். அதில், ரன்னிங் நோஸ் மற்றும் தலைவலி ஆகிய இரண்டுமே அனைவரையும் பாதித்துள்ளது என்று லண்டன் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த இரண்டு அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சாதாரண காய்ச்சல் அல்லது ஜலதோஷம் தானே என்று விடாமல், உடனடியாக சோதனை மேற்கொள்ளவேண்டும்.

ஓமைக்ரான் தொற்று பாதிப்பால் ஏற்படும் கூடுதல் அறிகுறிகள்

மேலே கூறப்பட்டுள்ள இரண்டு முக்கிய அறிகுறிகளுடன், ஓமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டால், தீவிரமான உடல் சோர்வு, தும்மல், தொண்டை கரகரப்பு, ஆகிய அறிகுறிகளுடன் வாந்தி, தூங்கும் போது வியர்த்தல் மற்றும் பசியின்மை ஆகியவை ஏற்படும் என்று கூறப்படுகிறது.



ஓமைக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..?

ஓமைக்ரான் தொற்று பாதிப்பு ஏற்படக்கூடிய அறிகுறிகள் தோன்றினால், முதலில் இந்த அறிகுறிகளை சளி அல்லது காய்ச்சலின் அறிகுறிகளாக அப்படியே விடக்கூடாது. கோவிட் 19 பரிசோதனை மேற்கொண்டு, உங்களுக்கு தொற்று பாதிப்பு இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், சோதனையின் முடிவு பாசிட்டிவ் என்று வந்தால், உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அறிகுறிகள் குறைகிறதா அல்லது அதிகரிக்கிறதா என்று கவனிக்க வேண்டும். அதிகமாகும் போது, மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Omicron, Omicron Symptoms

அடுத்த செய்தி