கொரோனா வைரஸின் வாய் பகுதி அறிகுறிகள் எப்படி இருக்கும்..? தெரிந்துகொள்ளுங்கள்

கொரோனா வைரஸின் வாய் பகுதி அறிகுறிகள் எப்படி இருக்கும்..? தெரிந்துகொள்ளுங்கள்

கொரோனா இரண்டாம் அலை | corona second wave

SARS-COV-2 வைரஸ் பாதிப்புக்குள்ளான 60 விழுக்காடு நோயாளிகளுக்கு இந்த அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

  • Share this:
கோவிட் வைரஸின் 2-வது அலை உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், நோய் பாதிப்பின் அறிகுறிகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். சுவை இழப்பு மற்றும் வாசனையை அறிந்து கொள்ள முடியாதது என்பது கோவிட் வைரஸ் பாதிப்புக்கான முக்கிய அறிகுறி. SARS-COV-2 வைரஸ் பாதிப்புக்குள்ளான 60 விழுக்காடு நோயாளிகளுக்கு இந்த அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ஒரு அறிகுறியை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு நோய் பாதிப்பு இல்லை என்ற முடிவுக்கு வர முடியாது. கொரோனா வைரஸ் உடலில் தொற்றியவுடன், பல்வேறு புலன்களையும் பாதிப்பதாக தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், மற்ற அறிகுறிகளையும் வைத்து கொரோனா பாதிப்பு இருப்பதை உணர்ந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

ஆய்வுகள் கூறுவது என்ன?

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் இதழில் வெளியாகியுள்ள ஆய்வில், கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நோய் தீவிரத் தன்மை வெளிப்படுவதற்கு ஒருவாரத்துக்கு முன்பே வாய்வழி அறிகுறிகள் தென்படுவதாக தெரிவித்துள்ளது. இந்த பாதிப்பு சுமார் 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்களுக்கு இருப்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ள நிபுணர்கள், வாய் பகுதியில் ஏற்படும் அசாதாரண மாற்றங்களை புறந்தள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.



கோவிட் எப்படி பரவுகிறது?

கோவிட் வைரஸ் எப்படி பரவுகிறது என்பது இதுவரை முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. இருமல், சுவாசித்தல் வழியாக பரவுகிறது என்பதை உறுதி செய்துள்ள ஆய்வாளர்கள், உடலின் மற்ற பகுதிகளை வைரஸ் தாக்கும் தன்மை குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர். குறிப்பாக, இருமல் மற்றும் சுவாசித்தல், பேசும்போது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் கொரோனா, வாய் பகுதிகளில் உள்ள பற்குழிகள், உமிழ்நீர் ஆகியவற்றில் தஞ்சமடைந்து கொள்வதாக கூறுகின்றனர். தொடர்ந்து, வைரஸின் பாதிப்பு அதிகரிக்கும்போது வாய் பகுதிகளில் அதன் பாதிப்பு மெதுவாக தெரியத் தொடங்குவதாக கூறியுள்ளனர். வைரஸ் பாதிப்பு அறிகுறி இருப்பவர்கள் அல்லது இல்லாமல் இருப்பவர்கள் என அனைவருக்கும் வாய் பகுதியில் அறிகுறி இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர். அறிகுறி அற்றவர்கள் பேசும்போது அல்லது காற்றை வெளியிடும்போது மற்றவர்களுக்கும் பரவுதாகவும் இன்ஸ்டிடியூட் ஆப் ஹூமன்ஸ் ஹெல்த் கூறியுள்ளது. சுவை இழப்பைத் தவிர மற்ற அறிகுறிகள் என்ன என்பதை இங்கே காணலாம்.

உலர்ந்த வாய்

நோய் எதிர்ப்பு சக்தி மாறுபாடு, வைரஸ் தொற்று ஆகியவை ஏற்படும்போது வாய் பகுதியில் வறட்சி ஏற்படும் நிலையில், கோவிட் தொற்று பாதிப்பு இருந்தாலும் இந்த அறிகுறி தென்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். வாயில் உற்பத்தியாகும் உமிழ்நீர், செரிமானத்தை ஊக்குவிப்பதுடன் பாக்டீரியா போன்ற தொற்றுகளில் இருந்தும் பாதுகாக்கிறது. கொரோனா பாதிப்பு ஏற்படும்போது உமிழ்நீர் சுரப்பி கடினமாகிறது. இதனால், வாய் பகுதியில் வறட்சி ஏற்படுவதுடன், துர்நாற்றமும் சில நேரங்களில் வீசுகிறது. வாயில் எரிச்சல் உணர்வும் ஏற்படும்.



வாய் புண்கள்

கோவிட் வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளானவர்கள் பரவலாக அனுபவிக்கும் தசை பகுதிகளில் ஒருவிதமான அழற்சியை உணர்வார்கள். தசைப் பகுதிகளை வைரஸ் தாக்கும்போது வீக்கமும் ஏற்படும். வாய் பகுதியில் வைரஸின் தாக்கம் இருந்தால் நாக்கு, ஈறு மற்றும் உதடுகளில் புண்கள் உருவாகும். சில இடங்களில் திடீர் வீக்கமும் உண்டாகும். ஒவ்வாமை காரணமாகவும் சிலருக்கு வாய் பகுதியில் புண்கள் மற்றும் எரிச்சல் வரக்கூடும்.

கோவிட் நாக்கு

கோவிட் வைரஸ் நாக்கு பகுதியை பாதிப்பது குறித்து மருத்துவர்கள் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். எதனால் நாக்கு பகுதி பாதிக்கப்படுகிறது என்பது குறித்து தெளிவான முடிவு எட்டப்படவில்லை என்றாலும், கோவிட் பாதிப்பு உள்ள பெரும்பாலானவர்களுக்கு நாக்குப் பகுதியில் புண்கள், வீக்கம் மற்றும் அசாதாரண எரிச்சல் ஏற்படுவதை கண்டுபிடித்துள்ளனர். தோல் பிரச்சனையாலும் நாக்குப் பகுதியில் பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.



நாக்கில் ஏற்படும் மாற்றம்

கோவிட் வைரஸ் பாதிப்பு இருந்தால், நாவின் நிறம் மற்றும் அமைப்பில் மாற்றம் உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். வைரஸின் பெருக்கம் காரணமாக திடீர் வலி, எரிச்சல், புண் ஆகியவை எற்படும் என்றும், உதடுகள் மற்றும் நாக்கில் ஒருவிதமான அசாதாரணமாக கூச்சம் உண்டாகும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும், இளஞ்சிவப்பு நாக்கைப் போலன்றி அசாதாரணமாக சிவத்தல், வெள்ளைத் திட்டுக்கள், நாக்கில் கருமை ஆகியவையும் ஏற்படும் எனக் கூறியுள்ளனர்.

அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்

கோவிட் வைரஸ் பாதிப்புக்கு இதுவரை தெளிவான அறிகுறிகள் என திட்டவட்டமாக கூற முடியவில்லை. உங்கள் உடம்பில் ஏதேனும் அசாதாரண மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது. தேவைப்பட்டால், உங்களை தனிமைப்படுத்திக்கொண்டு, குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்களை கோவிட் பாதிப்பில் இருந்து பாதுகாக்க முயற்சி செய்யுங்கள்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sivaranjani E
First published: