Fact Checking : பிரிட்ஜில் வைத்த காய்கறிகள், வெங்காயம் கருப்பு பூஞ்சையை பரப்புமா..?

கருப்பு பூஞ்சை

கருப்பு பூஞ்சைக்கும், வெங்காய தோல்கள் மற்றும் பிரிட்ஜில் உருவாகும் பூஞ்சைகளுக்கும் தொடர்புகள் இல்லை

  • Share this:
கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்த முடியாத நிலையில், கருப்பு பூஞ்சை தொற்று மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருப்பது கவலையளிக்கிறது. இதுகூடவே, சில போலித் தகவல்களும் சமூக வலைதளங்கள் மூலம் பரவி மக்களை அச்சப்படுத்துகின்றன. பிரிட்ஜில் வைத்த காய்கறிகள் கருப்பு பூஞ்சையை பரப்புவதாகவும், குறிப்பாக வெங்காயத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் கருப்பு நிறத்திலான பூஞ்சையே பாதிப்பு காரணம் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

தகவல்

முகநூலில் பரவும் அந்த தகவலில், காய்கறிகள் மற்றும் பழங்களை பயன்படுத்தும்போது மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, வெங்காயத்தின் வெளிப்புறத் தோலில் இருக்கும் கருப்பு நிறத்திலான பூஞ்சையே, மியூக்கோமைகோசிஸ் நோயை ஏற்படுத்துகிறது. மக்கள் கவனமாக இருக்காவிட்டால், பிரிட்ஜில் வைக்கப்படும் காய்கறிகளில் இருக்கும் கருப்பு பூஞ்சை, பிரிட்ஜில் பரவி, அதன்வழியாக பயன்படுத்துபவர்களை தொற்றிக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன என அந்த தகவல் எச்சரிக்கிறது. இந்த மெசேஜை படித்த பலரும், வேகமாக மற்றவர்களுக்கு பரப்ப தொடங்கினர்.



உண்மை

மேற்கூறிய தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் மூலம் கருப்பு பூஞ்சை பரவுகிறது என்பதற்கான அடிப்படை ஆதாரங்கள் இல்லை. கருப்பு பூஞ்சைக்கும், வெங்காய தோல்கள் மற்றும் பிரிட்ஜ்-இல் உருவாகும் பூஞ்சைகளுக்கும் தொடர்புகள் இல்லை. வெங்காய ஓடுகளில் காணப்படும் பூஞ்சையானது, இயற்கையாக மண்ணில் இருக்கும் ஒரு பூஞ்சை. பழம் மற்றும் காய்கறிகளை சமைப்பதற்கு முன்பு நன்கு கழுவினாலே இந்த பூஞ்சை பாதிப்பு இருக்காது. அரிதான சில சமயங்களில் மட்டுமே பூஞ்சையின் பாதிப்பு இருக்கும்.

இதய நோயாளிகள் கொரோனா தடுப்பூசி போடுவது அவசியம்..! ஏன் தெரியுமா..?

கருப்பு பூஞ்சையின் அறிகுறி உடனடியாக வெளிப்படுவதுடன், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் 50 விழுக்காடு மரணத்தை தழுவுகின்றனர். பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களில் இவை இருக்காது என்றாலும் சுற்றுப்புறத்தில் இருப்பவை. அசுத்தமான மேற்பரப்பு, பூஞ்சை இருக்கும் பகுதியில் சுவாசிக்கும்போது கருப்பு பூஞ்சை தொற்றுகிறது. அசுத்தமான ஆக்சிஜன் செலுத்தப்படுவதும் கருப்பு பூஞ்சைக்கு காரணம் என ஆய்வுகள் கூறுகின்றன. கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருந்தாலும், அனைவரையும் பாதிக்காது. ஸ்டீராய்டு தெரபி, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு தொற்றும். விரைவாக கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் கருப்பு பூஞ்சை தொற்றில் இருந்து விடுபடலாம்.



மேலும், கருப்பு பூஞ்சை தொடர்பான தெளிவான விளக்கங்களும், வழிகாட்டு நெறிமுறைகளும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலால் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தீர்வு

பிரிட்ஜில் உருவாகும் பூஞ்சை அல்லது வெங்காயத்தின் மேற்பரப்பில் இருக்கக்கூடிய கருப்பு நிற பூஞ்சைகள் மூலம் கருப்பு பூஞ்சை ஏற்படுவதில்லை. கருப்பு பூஞ்சை தொடர்பான அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், தொடக்கத்திலேயே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்வது சிறந்தது. கொரோனா வைரஸில் இருந்து மீண்டபிறகு மூக்கு பகுதி கருப்பு நிறமாக மாறுதல், தலைவலி, முக வீக்கம், சிவந்துபோதல் ஆகியவை முக்கிய அறிகுறிகள்.

 
Published by:Sivaranjani E
First published: