Childhood Obesity| குழந்தைப் பருவத்திலேயே அதிக உடல் பருமன் - காரணம் என்ன? தடுப்பது எப்படி?

டிவி பார்த்துக்கொண்டே ஜன்க் ஃபுட்- உடற்பருமனுக்கு வழிவகுக்கும்

டிவி பார்ப்பதை குழந்தைகள் குறைத்தால் குழந்தைப் பருவ உடற்பருமனிலிருந்து தப்பலாம் என்கிறது ஆய்வுகள். குறிப்பாக 4 வயதில் இந்த டிவி பார்த்துக் கொண்டே நொறுக்குத்தீனி சாப்பிடுவது உடற்பருமன் நோய்க்கு இட்டுச்செல்கிறது என்பதை அனைத்து ஆய்வுகளும் இதுவரை நிரூபித்துள்ளன.

  • Share this:
    குழந்தைகள் தங்கள் பொன்னான நேரத்தை பெரும்பாலும் தொலைக்காட்சி பார்ப்பதில்தான் செலவிட்டு வருகின்றனர். இதோடு கலோரி அதிகமுள்ள உருளைக்கிழங்கு சிப்ஸ், பாக்கெட்டுகளில் வரும் நவீன ரக உருளைக்கிழங்கு சிப்ஸ், உள்ளிட்ட தின்பண்டங்கள், உப்பு, காரம் அதிகமுள்ள தின்பண்டங்கள், டிவி பார்த்துக் கொண்டே ஐஸ்கிரீம் சாப்பிடுவது, டிவி விளம்பரங்களில் வரும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் போன்றவற்றால் குழந்தைப்பருவத்திலேயே உடல் அதிக பருமனாகி திண்டாடுகின்றனர்.

    முதலில் இதன் மூலம் உடல் பயிற்சி, உடல்ரீதியான வேலைகளை அவர்கள் தவிர்க்கின்றனர். டிவியில் வரும் ஜங்க் உணவுக்கான விளம்பரங்களில் பெரிதும் ஈர்க்கப்பட்டு உயர் கலோரி உணவுகளை டிவி பார்த்துக் கொண்டே சாப்பிடுவதும் வழக்கமாகி வருகிறது.



    எனவே டிவி பார்ப்பதை குழந்தைகள் குறைத்தால் குழந்தைப் பருவ உடற்பருமனிலிருந்து தப்பலாம் என்கிறது ஆய்வுகள். குறிப்பாக 4 வயதில் இந்த டிவி பார்த்துக் கொண்டே நொறுக்குத்தீனி சாப்பிடுவது உடற்பருமன் நோய்க்கு இட்டுச்செல்கிறது என்பதை அனைத்து ஆய்வுகளும் இதுவரை நிரூபித்துள்ளன.

    ஐரோப்பிய வளரும் நாடுகளில் 2000-ம் ஆண்டுக்குப் பிறகே உடற்பருமன் அதிகமுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 20% அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கேட்கவே வேண்டாம் 35% அதிகரித்துள்ளது. போலந்து நாட்டிலும் உடற்பருமன் அதிகம் காரணம் உடல்ரீதியான செயல்பாடுகள் குறைவு, உணவு எடுத்துக் கொள்ளும் பழக்கவழக்கங்கள் மோசமானவையாக இருந்து வந்துள்ளன.

    2 முதல் 14 வயதுடைய குழந்தைகள் நாளொன்றுக்கு சராசரியாக இரண்டரை மணி நேரம் தொலைக்காட்சி பார்ப்பதில் செலவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கணினி முன்னால் செலவிடுவதும் இத்தகைய உடற்பருமன் நோயை அதிகரித்துள்ளது.



    உலக மக்கள் தொகையில் 20% மக்கள் அதீத உடற்பருமன் கொண்டவர்களே. இதனை நாகரீகத்தின் நோய் என்றே அழைக்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் வளர்ந்த நாடுகளில் மொத்த மக்கள் தொகையில் 50-65% மக்கள் அதிக உடல் பருமனால் அவதிப்பட்டு வருகின்றனர். மரணங்கள் உடற்பருமனால் அதிகம் ஏற்படுவது என்பதில் உலகில் உடற்பருமன் 6வது ரிஸ்க் காரணியாக உள்ளது. உலகச் சுகாதார அமைப்பு அதீத உடற்பருமனை ஒரு நோய் என்றும் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டாக வேண்டும் என்று 1997ம் ஆண்டே அறிவித்தது.

    இப்படியே போய்க்கொண்டிருந்தால் அமெரிக்காவில் 78.9% வயது வந்த அமெரிக்கர்கள் குண்டாகவே இருப்பார்கள், குண்டு என்றால் சாதாரணமல்ல, அதீத உடற்பருமானகும் அது. உடற்பருமன் நோயை குழந்தைப்பருவத்தில் கட்டுப்படுத்தவில்லை எனில் பெற்றோர் உயிருடன் இருக்கும்போதே அவர்களது வாரிசுகள் முன்னாலேயே மரணம் தழுவும் துன்பம்தான் ஏற்படும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன.



    இதற்கான காரணங்கள்:

    1. கண்டதையும் தின்பது, மட்டற்ற நொறுக்குத்தீனி பழக்கம்.

    2. உருளைக்கிழங்கு சிப்ஸ், பாக்கெட்டில் வரும் நொறுக்குத்தீனிகள், பீட்சா ஆகியவற்றில் அதிக கலோரி உள்ளன.

    3. உடல் சார்ந்த வேலைகளைச் செய்யாமல் உடல் செயல்பாடுகளே இல்லாமல் உட்கார்ந்து கொண்டு தின்றுகொண்டே டிவி பார்ப்பது, கணினி விளையாட்டு, மொபைல் ஆன்லைன் கேம்களை ஆடுவது.

    4. உணவுத் தொழிற்துறை மிகவும் சீப்பான இடுபொருட்களுடன் தயாரிக்கும் மோசமான ஃபாஸ்ட் ஃபுட்கள்.

    மாஸ் மீடியா, மாஸ் உணவுத் தயாரிப்பு தொழிற்துறைகள் தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் நம்மை அதிகமாக திங்கவும் கண்டதைத் திங்கவும் பழக்குகின்றன. ஊட்டசத்துள்ள் உணவு வகைகள், புரோட்டீன் அதிகம் உள்ள உணவுவகைகள் ஆகியவற்றை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.



    இன்றைய நாட்களில் கொரோனா நோயினால் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் கிளாஸ் என்ற ஒன்று ஒருநாளைக்கு 4-5 மணி நேரம் நடத்தப்படுகிறது, இது குழந்தைகளை ஒரே இடத்தில் ஆணியடித்தாற்போல் ஆக்கி விடுகிறது, உடல் உழைப்பு, உடல் ரீதியான செயல்பாடுகளே இல்லாமல் அடிக்கப்படுகிறது.

    ஆன்லைன் கிளாஸ் முடிந்தவுடன் மொபைல் போனை எடுத்துக் கொண்டு ஆன்லைன் கேமில் மூழ்கி விடுகின்றனர், இடையிடையே ஜன்க் ஃபுட் சாப்பிடுகின்றனர், மிக மோசமான ஒரு கலாச்சாரத்தை ஏற்படுத்தி வருகின்றன இந்த ஆன்லைன் கேம்கள்.

    முதலில் மோசமான உணவு, இதனால் சமூகப் பொருளாதார தரநிலையில் பின்னடைவு ஏற்படுவது. மேலும் குழந்தைகள் இந்த டிவி வாட்சிங், ஆன்லைன் கேம்கள், கணினி விளையாட்டுக்கள் போன்றவற்றால் 40 வயதுக்குள்ளாகவே நீரிழிவு நோய், கட்டுக்கடங்கா உடற்பருமன் நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, சில வகையான புற்று நோய்கள், தூக்கமின்மை, தசை-எலும்பு சிக்கல்கள் ஏற்படுகின்றன.

    பழங்கள், பச்சைக்காய்கனிகள், அதிக தண்ணீர் குடிப்பது, பால், பழச்சாறுகள் ஆகியவற்றுக்கு குழந்தைகளை பெற்றோர் பழக்குவதோடு தினமும் 60 நிமிடங்களாவது உடல் உழைப்பில் ஈடுபடச் செய்ய வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் வைட்டமின் சி அடங்கிய உணவுப்பொருட்களை அதிகம் கொடுக்க வேண்டும் என்கின்றனர். ஏனெனில் உணவுப்பொருள் மூலம் நம் உடலுக்குள் செல்லும் இரும்புச் சத்தை உறிஞ்ச வைட்டமின் சி அவசியம் என்கின்றனர்.
    Published by:Muthukumar
    First published: