ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மனிதர்களுக்கு பரவும் கொடிய "சப்பரே வைரஸ்"..... காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி!

மனிதர்களுக்கு பரவும் கொடிய "சப்பரே வைரஸ்"..... காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி!

கோப்பு படம்

கோப்பு படம்

2004 ஆம் ஆண்டில் பொலிவியாவின் கிராமப்புறங்களில் முதன்முதலில் தோன்றியதாக நம்பப்படும் ஒரு அரிய எபோலா போன்ற வைரஸ் தொற்றுநோய் போல் பரவக்கூடும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

யுனைடெட் ஸ்டேட்ஸின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) ஆராய்ச்சியாளர்கள், சப்பரே எனப்படும் எபோலா போன்ற கொடிய வைரஸ் ஒரு மனிதனிலிருந்து மற்றொருவருக்கு பரவும் என கண்டறிந்துள்ளனர். 2004 ஆம் ஆண்டில் பொலிவியாவின் கிராமப்புறங்களில் முதன்முதலில் தோன்றியதாக நம்பப்படும் ஒரு அரிய எபோலா போன்ற வைரஸ் தொற்றுநோய் போல் பரவக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ள நிலையில், சி.டி.சி ஆராய்ச்சியாளர்கள் இப்போது சப்பரே வைரஸைப் பற்றி ஆய்வு செய்துக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும், கிராமப்புற பொலிவியாவில் தோன்றிய இந்த அரிய வைரஸ் ஒரு பெரிய ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

சப்பரே வைரஸ் என்றால் என்ன?

சப்பரே வைரஸ், அரினாவிரிடே வைரஸ் குடும்பத்திலிருந்து தோன்றியது. இவையே எபோலா வைரஸ் நோய்க்கும் (ஈ.வி.டி) காரணமாக உள்ளன. இந்த வைரஸ் சப்பரே ரத்தக்கசிவு காய்ச்சலை (சி.எச்.எச்.எஃப்) ஏற்படுத்துகிறது. இது பொதுவாக பாதிக்கப்பட்ட எலிகளில் இருந்து நேரடி அல்லது மறைமுக தொடர்பு மூலம் பரவுகிறது. இது ஒரு அரிய நோய் என்றாலும், மிகவும் ஆபத்தான ஒன்றாகும். கடந்த காலங்களில் சில உயிர்களைக் இந்த வைரஸ் கொன்றுள்ளது. இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்படும் வரை பல ஆண்டுகளாக பொலிவியாவில் பரவி இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். முதன்முதலில் இது கண்டறியப்பட்ட மாகாணத்தின் பெயரை இந்த வைரசுக்கு சூட்டப்பட்டுள்ளது.

சப்பரே வைரஸ் எவ்வாறு பரவுகிறது?

சப்பரே வைரஸ் பொதுவாக எலிகள் மூலம் பரவுகின்றன என்று சி.டி.சி தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட ஒரு எலி வெளியிடும் சிறுநீர், நீர்த்துளிகள் மலம் வழியாக நேரடி தொடர்பு மூலமோ அல்லது மறைமுகமாகவோ இந்த கொடிய வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது. அதனால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் மூலம் மற்ற நபர்களுக்கு இந்த வைரஸ் பரவுகிறது என தெரிவித்துள்ளனர். சப்பரே வைரஸ் காற்று வழியாக பரவுவதில்லை. அவை உடல் திரவங்களுடனான தொடர்பு மூலம் மட்டுமே பரவுகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார வல்லுநர்களுக்கும் நோய் பரவும் பாதிப்பு அதிகம் உள்ளது. எனவே அவதிப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சப்பரே ரத்தக்கசிவு காய்ச்சலின் அறிகுறிகள் யாவை?

காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி, மூட்டு மற்றும் தசை வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, ஈறுகளில் இரத்தப்போக்கு, தடிப்புகள் மற்றும் எரிச்சல் ஆகியவை சப்பரே வைரஸின் அறிகுறிகளாகும்.

சப்பரே காய்ச்சலுக்கான சிகிச்சை:

இந்த நோய்க்கு சிகிச்சையளிக்கக் கூடிய மருந்துகள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, சி.எச்.எச்.எஃப் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பொதுவாக நீரேற்றம், வலி நிவாரணம், மயக்கம் மற்றும் இரத்தமாற்றம் போன்ற துணை சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

சப்பரே வைரஸ் பாதிப்பின் கடந்த கால நிகழ்வுகள்:

சி.டி.சி ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சப்பரே வைரஸ் பரவிய இரண்டு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2003ம் ஆண்டின் முற்பகுதியில் பொலிவியாவின் சப்பரே மாகாணத்தில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நிகழ்வின் போது இந்த வைரசால் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக பொலிவியாவின் தலைநகரான லா பாஸில் கடந்த ஆண்டு இதன் பாதிப்பு மிகப்பெரிய அளவில் பதிவு செய்யப்பட்டது. ஐந்து பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டது. அதில் இரண்டு மருத்துவ வல்லுநர்களும் ஒரு நோயாளியும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Chapare virus, Ebola virus