மனிதர்களின் இனப்பெருக்கம் என்பது இன்னும் சில ஆண்டுகளில் கேள்விக்குறியாக மாறும் என்று விஞ்ஞானிகள் பீதியை கிளப்புகின்றனர். கண் முன்னே ஊருக்கு, ஊர் நாம் பார்க்க கூடிய சில, பல கருத்தரிப்பு மையங்கள் கூட இதை உறுதி செய்வதாகத்தான் அமைகின்றன. இந்தியாவில் மட்டுமல்ல இந்தப் பிரச்சினை. உலகெங்கிலும் உள்ள ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது என்று எச்சரிக்கிறது இந்தப் புதிய ஆய்வு.
உயிரணுக்களின் எண்ணிக்கை துரிதமாக குறைவதால் கருத்தரிப்பு மற்றும் இனப்பெருக்கம் என்பதை தாண்டி சமூகத்தில் கடுமையான விளைவுகளும் ஏற்படக் கூடும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உயிரணு குறைவதற்கான காரணம் என்ன? அதன் தடுப்பு முறைகள் என்ன என்பது குறித்து கூடிய விரைவில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.
விந்து செறிவுறும் தன்மையானது கடந்த 40 ஆண்டுகளில் பாதிக்கும் கீழாக குறைந்துள்ளது என்று கடந்த 2017ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. எனினும், அந்த ஆய்வானது ஐரோப்பியா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து போன்ற பகுதிகளில் மட்டுமே நடத்தப்பட்டிருந்தது.
ஆய்வில் இதுகுறித்து குறிப்பிடப்பட்டுள்ள தகவலில், “சராசரியாக ஆண் ஒருவரின் விந்தணுவில் 104 மில்லியன் உயிரணுக்கள் இருக்கும். ஆனால், இப்போது இந்த எண்ணிக்கை 49 மில்லியனாக குறைந்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது. மேலும், உயிரணு செறிவுறுவதற்கும் கால தாமதம் ஏற்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அளவுக்கு எண்ணிக்கை குறைந்திருப்பதால், மனித இனத்தின் இனப்பெருக்க ஆற்றல் கேள்விக்குறியாக மாறி வருகிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கீடு செய்யப்படும் முறை :
பொதுவாக ஒரு மில்லி லிட்டர் விந்தணுவில் எவ்வளவு உயிரணு இருக்கிறது என்றும், ஒட்டுமொத்தமாக ஒருமுறை வெளியேற்றப்படும் விந்தணுவில் எவ்வளவு உயிரணு இருக்கிறது என்றும் கணக்கீடு செய்யப்படுகிறது. விந்து செறிவுறும் தன்மை மற்றும் மொத்த விந்தணு அளவு ஆகியவற்றை பெருக்குவதன் மூலமாக இது கணக்கிடப்படுகிறது.
கடந்த 1973ஆம் ஆண்டில் இருந்து 2018ஆம் ஆண்டு வரையில் கணக்கிடும்போது விந்து செறிவுறும் தன்மை 51.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஒரு மில்லி லிட்டர் விந்தணுவில் இருந்த 101.2 மில்லியன் உயிரணுக்கள் தற்போது 49 மில்லியனாக குறைந்துள்ளது. மேலும் இதே காலகட்டத்தில் மொத்த உயிரணு எண்ணிக்கை 62.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இதுகுறித்து ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், “உயிரணு எண்ணிக்கை குறைபாடு என்பது ஆணும், பெண்ணும் இணைந்து குழந்தை பெறுவதில் சிக்கல் ஏற்படுத்துவதோடு நின்றுவிடாது. அடுத்த 50 ஆண்டுகளில் அல்லது அதற்குள்ளாக, சமூகத்தில் பணி செய்வதற்கான இளம் தலைமுறையினரின் எண்ணிக்கை குறைந்துவிடும் மற்றும் முதியவர்களுக்கு தேவைப்படும் இவர்களது ஆதரவு அதிகரிக்கும்’’ என்று தெரிவிக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Men Health, Sperm