கனடாவை சேர்ந்த பாடகியான செலின் டியான் தான் ஸ்டிஃப் பர்சன் சிண்ட்ரோம் என்ற நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது 54 வயதாக இருக்கும் செலின் டியான், தன்னுடைய இந்த நோய் பாதிப்பை பற்றி இன்ஸ்டாகிராம் வாயிலாக தன் ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார்.
ஐரோப்பாவிற்கு சுற்று பயணம் செய்ய திட்டமிட்டிருந்த இந்நிலையில் அவரின் இந்த அறிவிப்பானது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. தனது 2023-2024 நடக்கவிருந்த இசை நிகழ்ச்சிகளை கேன்சல் ரத்து செய்வதாகவும் அறிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு கோடை காலத்தில் மட்டும் 8 இசை நிகழ்ச்சிகளை நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
“நான் நீண்ட நாட்களாக உடல் நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வருகிறேன், இதனை சமாளிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. பிப்ரவரி மாதம் நடக்கவிருந்த ஐரோப்பா சுற்றுப்பயணத்தை என்னால் மேற்கொள்ள முடியாது என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் வீடியோவின் கேப்ஷனில் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
அவர் பதிவேற்றம் செய்த அந்த வீடியோவில், இந்த கடுமையான நாட்களை சந்திக்க மிகவும் சிரமப்படுவதாகவும் சவால்கள் நிறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி மிகவும் அபூர்வமாக ஏற்படக்கூடிய நரம்பியல் கோளாறான ஸ்டிஃப் பர்சன் சிண்ட்ரோம் என்ற நோயினால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நோயானது மில்லியனில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படும் என்றும், இன்னும் இதனைப் பற்றி முழுமையான தகவல்கள் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த நோயின் காரணமாக நடப்பதற்கு கூட சிரமப்படுவதாகவும், முன்பு போல அதே குரலில் பாடுவதற்கும் மிகவும் சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேற்கண்ட காரணங்களினால் தன்னுடைய ஐரோப்பா சுற்று பயணத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளார்.
ஸ்டிஃப் பர்சன் சிண்ட்ரோம் என்றால் என்ன?
எஸ்பிஸ் (SPS) எனப்படும் அந்த ஸ்டிஃப் பர்சன் சிண்ட்ரோம் ஆனது மிகவும் அபூர்வமாக ஏற்படும் ஒரு நோயாகும். யூ எஸ் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நியூராலஜிக்கல் டிசார்டரின் அறிக்கையின் படி இந்த எஸ் பி எஸ் ஆனது நோய் எதிர்ப்பு சக்தியில் ஏற்படும் கோளாறால் ஏற்படும் நோயின் தன்மைகளை ஒத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நோய் ஏற்பட்டால் சிறு சத்தம், தொடுதல் மற்றும் மன அழுத்தத்தின் போது கூட தசைகளில் விறைப்பு ஏற்பட்டு தசைகளை அசைக்க முடியாத நிலை ஏற்படும்.
நோய் அறிகுறிகள்:
உடல் ஆரோக்கியம் :
சீரற்ற உடல் தோரணை, கூன் விழுந்த உடல் அமைப்பு மற்றும் வளைந்து கொடுக்கும் தன்மையற்ற உடல் அமைப்பு ஆகியவை ஏற்பட்டால் இந்த நோய்க்கான அறிகுறிகளாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
இந்த நோய் மிகவும் அபூர்வமானதாகும். இது ஒருவரை தாக்கினால் அவர்களால் நடப்பதற்கும் அசைவதற்கும் கூட முடியாமல் போகும் வாய்ப்புகள் அதிகம். மேலும் சிறிய சத்தம் கேட்டால் கூட இவர்களின் தசை தானாகவே இறுகி வலியை ஏற்படுத்துவதோடு அந்த நபரையும் செயலிழக்க செய்து விடும்.
நோய்க்கான காரணம் :
இந்த நோய் ஏன் ஏற்படுகிறது என்பதை நிபுணர்களால் கூட தற்போது வரை முழுமையாக கண்டறிய முடியவில்லை. ஒருவேளை நோய் எதிர்ப்பு திறனை இயக்கி மூளை மற்றும் முதுகு தண்டுவடத்தில் ஏற்படும் மாற்றங்களினால் இந்த நோய் ஏற்படலாம் என எச்சரித்துள்ளனர்.
ஆனாலும் சரியான புரிதல் இல்லாத காரணத்தினால் இந்த நோயானது பார்கின்சன் நோய் போன்ற நோய் வகைகளோடு சேர்த்து தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. ஏனெனில் இந்த இரண்டு நோய்களுக்கும் திட்டத்தட்ட ஒரே விதமான அறிகுறிகள் தான் தென்படுகின்றன.
Also Read : மெனோபாஸ் அறிகுறிகளை சமாளிக்க ஹார்மோன் மாற்று தெரஃபி செய்துகொள்வது சரியா..? மருத்துவர் விளக்கம்..!
நோயை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் :
தற்போது வரை இந்த நோயை 100% குணப்படுத்துவதற்கு சரியான சிகிச்சை முறைகள் எதுவும் கண்டறியப்படவில்லை. ஆனால் GABAergia (காமா – அமினோபியூட்டிரிக் அமிலம்) மற்றும் இம்மியூனோதெரப்பி எனும் சிகிச்சை முறைகள் பெருமளவில் இந்த நோயை குணப்படுத்த உதவுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.