Home /News /lifestyle /

மாதவிடாய் சமயத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா..? இந்த சமயத்தில் குழந்தை நிற்காதா..?

மாதவிடாய் சமயத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா..? இந்த சமயத்தில் குழந்தை நிற்காதா..?

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர் 44 : தம்பதிகளுக்குள் நல்ல ஒரு புரிதல் இருந்து அவர்களுக்கு எந்த விதமான அசௌவுகரியமும் இல்லை என்றால் தடை இல்லை. ஆனால் பொதுவாக ஒரு மகப்பேறு மருத்துவராக நான் இதை ஆதரிப்பதில்லை. இதையேதான் நிகிராவுக்கும் கூறினேன்.

நிகிரா 27 வயது, வங்கியில் பணிபுரியும் அழகுப்பெண். திருமணம் ஆகி சில மாதங்களே ஆகிறது.

மகளிர் தினமான, மார்ச் 8 அன்று, அவருடைய வங்கியில் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிக்கு என்னை பேச அழைத்திருந்தார். அங்கு சென்று, திரும்பி வரும் பொழுது 'பூங்கொத்துகளும், பரிசு பொருட்களும் ,இனிப்புகளும் 'என்று காரை நிறைத்து விட்டார். நிகிராவை என்னால் மறக்க முடியாது.
அன்று மருத்துவமனையில் சந்தித்தபோது "ஹாய் நிகிரா!!! ,எவ்வாறு இருக்கிறீர்கள்.?? திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது, என்று நினைக்கிறேன். முகத்தில் சிவப்பு இன்னும் கொஞ்சம் கூடி இருக்கிறதே!, எடையை மட்டும் கூடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் "என்று கூறி சிரித்தேன்.

நிகிராகவும் வெட்கப்பட்டு ஒரு நிமிடம் சிரித்தார். பிறகு "டாக்டர் ! ரொம்ப வும் பெர்சனல் ஆன விஷயம் கேக்கணும். நீங்க வேற யார்கிட்டயும் இதை பத்தி சொல்ல மாட்டீங்கங்கற தைரியத்தோடு தான் பேசுறேன்" என்று பெரிய பீடிகையோடு துவங்கினார்.

டாக்டர் உங்களுக்கு தெரியும் எனக்கு திருமணம் ஆகி 6 மாசம் ஆகுது. என்னோட கணவர் என் மேல ரொம்ப பிரியமா தான் இருக்காரு!.

திருமணம் ஆகி முதல் ஒரு மாசம் ரெண்டு பேருமே நிறைய லீவு எடுத்திருந்தோம். அப்ப தினமும் உடலுறவு வெச்சுக்கிட்டோம் ஹேப்பியா தான் இருந்தது.

ரெண்டு பேருமே வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டோம். இப்பயும் தினமும் செக்ஸ் வச்சிக்கனும்னு விரும்புகிறார். சில நாட்களில் எனக்கு ரொம்ப வேலைப்பளு அதிகமாக இருந்தால் சாப்பிட்டு, பேசாம தூங்கலாம் போல இருக்கு .ஆனா அப்ப கூட அவர் கட்டாயப்படுத்தராரு.

எனக்கு மறுக்கவும் தயக்கமா இருக்கு. திருமணத்திற்கு முன்னாடி என்னுடைய அம்மா சொன்னாங்க!, அவர் விரும்பறப்ப எல்லாம் o.k. சொல்லு. இல்லாட்டி, வெளியில போயிடுவாங்க. அதனால கேர்ஃபுல்லா இருன்னு!" சொன்னாங்க . . அது வேற யோசனையா இருக்கு.இதெல்லாம் கூட பரவாயில்லை... இப்ப எல்லாத்துக்கும் மேல பீரியட்ஸ் டைம்லயும் உறவு வச்சுக்கணும்னு சொல்றாரு. ஆனா அது மாதிரி பீரியட் டேஸ்ல வச்சுகிட்டா குழந்தை பிறக்கிறதுல ஏதாவது பிரச்சினை வருமா? என்னோட கர்ப்பப்பையில் ஏதாவது பாதிப்பு வந்துடுமா? ரொம்ப பயமா இருக்கு, டாக்டர்? இது மாதிரி செக்ஸில் அதிகமான விருப்பம் இருக்கிறது நார்மல் தானா! எல்லாரும் இப்படித்தான் இருப்பாங்களா?! உங்க கிட்ட நிறைய பேர் வருகிறார்களே!. சொல்லுங்க! " என்றார்.

நிகராவின் பிரச்சனையில் இரண்டு கேள்விகள் உள்ளன.

மாதவிடாய் கப் பயன்படுத்துவது கர்ப்பம் தரித்தலை பாதிக்குமா..? மருத்துவர் விளக்கம்

முதல் கேள்வி:

மாதவிலக்கான சமயத்தில் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளலாமா? என்பது.

மாதவிடாய் சமயத்தில் கருப்பை, முட்டை பை ,கருக்குழாய்கள் எல்லாவற்றிலும் ஏராளமான மாறுதல்கள் ஏற்பட்டு கொண்டிருக்கும். கருப்பை சுருங்கி விரிந்து உள்ளே இருக்கும் சவ்வுகளை வெளியே தள்ளிக் கொண்டிருக்கும். அத்துடன் உதிரப்போக்கும் இருக்கும். 98%  பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் கை கால் வலி, உடல் வலி, இடுப்பு வலி ,வயிற்று வலி, தலைவலி ,வாந்தி, சோர்வு, மயக்கம் என்று ஏதாவது ஒரு பிரச்சனையால் அவதிப்படுவார்கள் .அதையும் சமாளித்துக் கொண்டுதான் எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருப்பார்கள். அதனால் பெரும்பாலான பெண்களும் அந்த சமயத்தில் உறவு வைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள் .ஆனால் மாதவிலக்கான சமயத்தில் உறவு வைத்துக் கொண்டால் குழந்தை பிறக்காது, அதனால் வைத்துக் கொள்ளலாம் என்று ஒரு சிலர் நிகிராவைப் போலவே, என்னிடம் கேட்கிறார்கள். 99% வரை மாதவிலக்கு சமயத்தில் உறவு வைத்துக் கொண்டால் ,குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு இல்லை. ஆனால் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சிறுநீர் பாதைத்தொற்று. கணவன் மனைவி இருவருக்கும் ஏற்படலாம்.

கருத்தடை மாத்திரை உபயோகிப்பது சரியா..? காப்பர் டி பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை...

ஒரு சிலர் மாதவிடாய் சமயத்தில் உறவு வைத்துக் கொள்வது அன்னியோன்யத்தை அதிகரிக்கும் வலியை குறைக்கும் என்றும் கூறுகின்றனர். மாதவிடாய் சமயத்தில் ஆதரவான வார்த்தைகளும், அன்பான அணுகுமுறையும் ,வீட்டு வேலைகளில் இருந்து அவர்களுக்கு சிறிது ஓய்வும் , முடிந்தால் குழந்தைகளை கவனிப்பது போன்ற மற்ற வேலைகளை தானாக முன்வந்து அவர்கள் பளுவை குறைப்பதும், அன்னியோன்யத்தை கட்டாயம் அதிகரிக்கும்.

தம்பதிகளுக்குள் நல்ல ஒரு புரிதல் இருந்து அவர்களுக்கு எந்த விதமான அசௌவுகரியமும் இல்லை என்றால் தடை இல்லை. ஆனால் பொதுவாக ஒரு மகப்பேறு மருத்துவராக நான் இதை ஆதரிப்பதில்லை. இதையேதான் நிகிராவுக்கும் கூறினேன்.

இரண்டாவது கேள்விக்கான பதில் அடுத்த வாரம் தொடரும்....

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Periods, Pregnancy, Sex, பெண்குயின் கார்னர்

அடுத்த செய்தி