திவ்யா தன் தோழியோடு மருத்துவமனைக்கு வந்திருந்தார்.
அலுவலகத்திலிருந்து பணி முடிந்து வந்து இருந்ததால் சோர்வாக இருந்தார்.
"சில சமயங்களில் சிறிய பிரச்சனை கூட பூதாகரமாக தெரிகிறது" என்ற பீடிகையுடன் திவ்யா தொடங்கினார்.
எனக்கு இன்னும் மூன்று மாதத்தில் திருமணம், டாக்டர்.! 3-4வருடங்களாகவே அடிக்கடி தலைவலி வருகிறது . தலைவலி வந்த சமயங்களில் எதுவுமே செய்ய முடியவில்லை. எதுவும் சாப்பிட முடியவில்லை. அத்தோடு வாந்தியும் வந்துவிடுகிறது. சில சமயங்களில் சாதாரண தலைவலி மாத்திரைகளை எடுக்கும் பொழுது சரியாகிறது . சில சமயங்களில் மிகவும் அதிகமாகும் போது டாக்டரை பார்த்து ஊசி போடும் அளவுக்கு தீவிரமாக இருக்கும். இத்தனை நாட்கள் இது ஒரு பெரிய பிரச்சினையாக எனக்கு தெரியவில்லை.
தலை வலிக்கும் பொழுது மாத்திரையைப் போட்டுக்கொண்டு ஓய்வெடுத்துக் கொள்வேன். பிறகு என்னுடைய வேலைகளை பார்க்க தொடங்குவேன். ஆனால் இப்பொழுது ஏதேனும் எனக்கு பிரச்சனை இருக்கிறதோ ?என்று தோன்றுகிறது. ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நினைக்கிறேன். மூளையில் கட்டி இருந்தாலும் இப்படி அடிக்கடி தலைவலி வரும் என்று இணையத்தில் படித்தேன். அதை பார்த்ததிலிருந்து ரொம்பவும் பயமாகி விட்டது. அப்படி ஏதாவது இருக்குமா டாக்டர்!?"
என்னுடைய தலைவலி மைக்ரேன் தலைவலியா அல்லது சாதாரண தலைவலியா? அதை எப்படி கண்டுபிடிப்பது?
என் ஆலோசனை:
"எனக்கு தலை வலியே வந்ததில்லை," என்று இந்த உலகத்தில் யாருமே சொல்ல முடியாது .அப்படி ஒரு மிக மிக பொதுவான பிரச்சினை.
தலையில் உள்ள ரத்தக் குழாய்கள் மற்றும் நரம்புகளில் ஏற்படும் மாற்றங்களால் தலைவலி ஏற்படுகிறது. தலைவலிக்கான காரணங்களை பார்த்தால் அந்தப் பட்டியல் முடிவில்லாதது. அதிகமான மன அழுத்தம், வேலைப்பளு, உடலில் தண்ணீர் சத்து குறைபாடு , குளுக்கோஸ் குறைவு, தூக்கமின்மை போன்றவை சாதாரண காரணங்கள் . காய்ச்சல் இருக்கும் பொழுது சிலருக்கு அது தலைவலியாக தான் வெளியே தெரியும். பிரச்சினை உள்ள தலைவலியை பொருத்தவரை கண்களில் பாதிப்பு இருந்தால் தலைவலியாக வெளிப்படலாம்.
பெண்குயின் கார்னர் 24 : வெள்ளைப்படுதல் பிரச்சனையை சமாளிப்பது எப்படி? மருத்துவர் ஆலோசனை
அதுபோல சைனஸ் எனப்படும் முகத்தில் நீர் ,சளி கட்டிக்கொள்ளும் பிரச்சனை இருந்தாலும் அது தலைவலியாக வெளிப்படலாம். ரத்த அழுத்தம் அதிகமானாலும் தலைவலி உண்டாகும். வெகு அரிதாக மட்டுமே தலைவலிக்கான காரணமாக மூளையில் கட்டிகள் இருக்கும். தலைவலியில் ஒரு தனிப்பட்ட தலைவலி மைக்ரேன் எனப்படும். இதுவும் தலையில் செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் உண்டாவதே. இந்த தலைவலி மிகவும் கடுமையாகவும் ,தலைவலி வருவதற்கு முன்பே சில அறிகுறிகளுடன் ,வாந்தியுடனும் இருக்கும்.
இந்த மைக்ரேன் தலைவலி தூக்கமின்மை, மன அழுத்தம், வேலைப்பளு ,பெண்களுக்கு சில சமயம் மாதவிடாய் சமயத்தில் வருவதற்கு வாய்ப்பு அதிகம். மைக்ரேனுக்கு என்று தனிப்பட்ட மருந்துகள் உள்ளன. அதை எடுக்கும் பொழுது இந்த தலைவலி கட்டுக்குள் வரும். சாதாரண தலைவலிக்கு பாரசிட்டமால் மாத்திரைகள் போதுமானது.
பாராசிட்டமால் 500 மில்லி கிராம் அல்லது 650 மில்லி கிராம் மாத்திரைகளோடு, உணவும் எடுத்துக் நல்ல ஓய்வும் எடுக்கும்பொழுது தலைவலி சரியாகிறது.
அதிகமான வேலைப்பளு இருப்பவர்கள் அதற்கு ஏற்றார் போல பழச்சாறுகள், சூப் மற்றும் புரோட்டீன் கஞ்சிகள்(Nutrimix hp), புரோட்டின் பிஸ்கட்டுகள் போன்றவற்றை எடுத்தால் வேலைப்பளு காரணமாக வரும் தலைவலியை தவிர்க்கலாம்.
புரோட்டின் கஞ்சி மற்றும் பிஸ்கட்டுகளை அடிக்கடி எடுத்தால், எடை கூடும் என்ற பயம் வேண்டாம். . எனவே அலுவலகத்தில் உட்கார்ந்து வெகு நேரம் வேலை செய்பவர்கள் கணினியில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களும் இதை எடுத்துக்கொள்ளலாம்.
திவ்யாவுக்கு பல நாட்களாக தலைவலி இருப்பதால் அடிப்படை ரத்தப் பரிசோதனைகளுடன் (Hb%, Rbs, Tft,sr.urea creatinine ) தலைக்கு CT ஸ்கேன் எடுத்தும் சோதித்தேன். மூளையில் கட்டி இல்லை என்று தெரிந்ததுமே திவ்யாவுக்கு மனம் தெளிந்தது. வேறு பிரச்சினைகளும் இல்லை .
இப்போது திவ்யா புரோட்டின் கஞ்சி எடுக்க ஆரம்பித்துவிட்டார். குறிப்பாக அலுவலகத்தில் இருந்து கிளம்பும் முன்பு கஞ்சியை குடித்துவிட்டு தான் வீட்டிற்கு செல்கிறார் . நிறைய தண்ணீரும் இடையிடையே குடிக்கிறார். இப்போது தலைவலி அடிக்கடி வருவதில்லை, வெகு வெகு அரிதாகவே வருகிறது என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.
மனதிற்கு நிறைவாக இருந்தது.
மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Headache, Marriage Life, பெண்குயின் கார்னர்