ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கர்ப்பமாக இருக்கும் போது பார்ட்டிகளில் கலந்து கொள்ளலாமா..? மது அருந்தலாமா..?

கர்ப்பமாக இருக்கும் போது பார்ட்டிகளில் கலந்து கொள்ளலாமா..? மது அருந்தலாமா..?

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர் 65 : பொதுவாக கர்ப்பமாக இருக்கும் காலத்தில் கூட்டமாக இருக்கும் எந்த இடங்களுக்கும் செல்ல வேண்டாம் என்பதுதான் மருத்துவர்களுடைய அறிவுரையாகும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ராதிகா தன் தோழியோடு மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

ராதிகா பிரபல ஐடி நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் பணியாற்றுகிறார். தன்னுடைய இரண்டாவது குழந்தையை கர்ப்பத்தில் சுமந்திருக்கிறார் .மூன்று மாதங்கள் ஆகிறது.

ராதிகாவின் கேள்வி: "டாக்டர்! இப்ப நியூ இயர் பார்ட்டில கலந்துக்கலாமா?

அது பாதுகாப்பா? பிரக்னண்டா இருக்கும் போது ஸ்வீட்ஸ், கேக், கொஞ்சம் ஆல்கஹால் எடுத்துக்கலாமா? இத பத்தி டிஸ்கஸ் பண்ண தான் வந்தேன்" என்று கூறினார்.

பெண்கள் தைரியமாக வெளிப்படையாக பேசுவதில் உண்மையில் மகிழ்ச்சி. பொறுப்பான பதவியில் இருக்கும் பெண்களுக்கு இதுபோன்ற சிக்கல்கள் வருகிறது.

ராதிகாவிற்கு என்னுடைய பதில்:

பொதுவாக கர்ப்பமாக இருக்கும் காலத்தில் கூட்டமாக இருக்கும் எந்த இடங்களுக்கும் செல்ல வேண்டாம் என்பதுதான் மருத்துவர்களுடைய அறிவுரையாகும்.

கூட்டமான இடத்தில் இருந்து இருமல் சளி போன்ற ஃப்ளூ போன்ற காற்றில் எளிதாக பரவக்கூடிய நோய்கள் வருவதற்கு சாத்தியம் உண்டு. கர்ப்பிணி பெண்களுக்கு இயற்கையாகவே உடலில் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் அவர்களுக்கு எளிதாக அந்த தொற்று ஏற்பட்டுவிடும்.

அதுவும் தற்போது உள்ள நிலைமையில் கோவிட் நான்காவது அலை வந்து விடுமோ? என்ற ஒரு அச்சம் அனைவரிடத்திலும் இருக்கத்தான் செய்கிறது.

சைனாவிலும் அமெரிக்காவிலும் BF.7 கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள கடுமையான தொற்றும் இறப்புகளும் உண்மையில் நம்மை "இந்த கொண்டாட்டங்கள் தேவையா ?" என்று சிந்திக்க வைக்கின்றன.

"ராதிகா! நீங்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டீர்களா?"என்று கேட்டேன்.

ராதிகா, "ஆமாம் டாக்டர்! ரெண்டு ஊசி பிறகு பூஸ்டர் ஊசியும் எங்கள் அலுவலகத்திலேயே அனைவருக்கும் மூன்று தவணை தடுப்பூசியும் போட்டு விட்டனர்" என்று கூறினார்.

"அது உங்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு ,

இருப்பினும் நல்ல காற்றோட்டம் உள்ள இடத்தில் இந்த புது வருட கொண்டாட்டங்கள் இருந்தால் நல்லது.

Also Read :  கர்ப்ப காலத்தில் சுகர் வருமா? டெஸ்ட் தேவையா?

"மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள்!. சானிடைசர் வைத்துக் கொள்ளுங்கள்!. முடிந்த அளவு விரைவாக பார்ட்டியை முடித்துக்கொண்டு வெளியே வருவதற்கு பாருங்கள். "

"கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கவனமாக பின்பற்றுங்கள்" என்று கூறினேன்.

அடுத்தது ராதிகாவின் கேள்வி:

கேக் மற்றும் இனிப்புகள் சாப்பிடலாமா?

என்பதில்:

பொதுவாக ஓரளவு இனிப்புகளும் கேக்கும் உண்ணலாம். மிக அதிக அளவு உண்ண வேண்டாம். எடுத்துக்காட்டாக ஒரு சிறு பகுதி கேட்கும் ஒரு 100 கிராம் அளவுக்கான இனிப்புகளும் எடுத்துக் கொள்வதால் ஒன்றும் தவறில்லை. சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கு இனிப்புகளால் ஒன்றும் பெரிய பாதிப்புகள் வந்து விடாது என்றாலும் மிக அதிக அளவு கெமிக்கல் கலந்த கேக்குகளைஅளவாக உண்ணுவது நல்லது.

ராதிகாவின் அடுத்த கேள்வி :

ஆல்கஹால் எடுத்துக் கொள்ளலாமா?

கர்ப்ப காலத்தில் ஆல்கஹாலை முற்றிலும் தவிர்க்கும் படியே நாங்கள் அறிவுறுத்துவோம். ஆல்கஹால் எடுத்துக் கொள்வதால் வயிற்றில் ஏராளமான பிரச்சனைகள் கர்ப்ப காலத்தில் உண்டாவதற்கு சாத்தியம் உண்டு .அத்துடன் கர்ப்ப காலத்தில் ஆல்கஹால் எடுத்துக் கொள்ளும் போது அது குழந்தையை சென்று சேரும் . பலமுறை கர்ப்ப காலத்தில் தொடர்ந்து ஆல்கஹால் எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு பீட்டல் ஆல்கஹால் சின்றோம் (fetal alcohol syndrome)என்ற பிரச்சனைகளோடு கூடிய குழந்தைகள் பிறக்கலாம். குழந்தையின் முகம் சராசரி மனித முகத்தில் இருந்து வேறுபட்டிருக்கும்.

Also Read : கர்ப்பகாலத்தில் இரத்தப் பரிசோதனை ஏன் அவசியம்..? சிபிசி (CBC) என்றால் என்ன..?

இருதயத்தில் பிரச்சனைகள் வரலாம். நரம்புத் தண்டு மற்றும் மூளை வளர்ச்சி பாதிப்புகள் உண்டாக்கலாம். எலும்பு வளர்ச்சியும் பாதிக்கலாம். குழந்தையின் வருங்காலத்தில் கற்றல் திறன் குறைபாடு ,பார்வை குறைபாடு ,கேட்கும் சக்தி குறைபாடு, போன்றவையும் ஏற்படும். எனவே கர்ப்ப காலத்தில் ஆல்கஹாலை தவிர்ப்பது நல்லது.

வேறு வழியே இல்லை என்றால் மிகக் குறைந்த அளவு ஆல்கஹால் உள்ள பானங்கள் சிறிதளவு நீங்கள் அருந்தலாம். மற்றபடி வேறு ஏதேனும் குடித்து சமாளித்து விடுங்கள்" என்று கூறினேன்.

"ஓகே! டாக்டர்! மிக்க நன்றி! தெளிவான பதில் கிடைத்தது. நிம்மதியாக சென்று இந்த புத்தாண்டு பார்ட்டியை சமாளித்து விட்டு வந்து விடுவேன்" என்று சிரித்துக் கொண்டே விடை பெற்றார் ராதிகா.

நியூஸ் 18 வெப்சைட் நேயர்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள், 2023 மிக அருமையான ஆண்டாக அனைவருக்கும் அமையட்டும்.

கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com

First published:

Tags: Alcohol, Party, Pregnancy care, பெண்குயின் கார்னர்