ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

திருமணம் ஆன ஒரு மாதத்திற்குள் கருத்தரிக்க முடியுமா..? மகப்பேறு மருத்துவரின் விளக்கம்..!

திருமணம் ஆன ஒரு மாதத்திற்குள் கருத்தரிக்க முடியுமா..? மகப்பேறு மருத்துவரின் விளக்கம்..!

கருத்தடை பற்றி தம்பதிகள் அறிந்து கொள்ள வேண்டியவை

கருத்தடை பற்றி தம்பதிகள் அறிந்து கொள்ள வேண்டியவை

பெண்குயின் கார்னர் : கருத்தரிப்பதற்கு ஒவ்வொரு மாதமும் இரண்டிலிருந்து நான்கு நாட்கள் மட்டுமே ஏதுவான நாட்கள். பெண்ணின் முட்டைப் பையில் இருந்து கருமுட்டை வெளிவந்து ஒன்றிலிருந்து இரண்டு நாட்கள் மட்டுமே உயிர்ப்போடு இருக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஜீவிதாவும் அவர் தாயும் அன்று மருத்துவமனைக்கு வந்திருந்தனர். ஜீவிதாவுக்கு திருமணமாகி இருபது நாட்கள் தான் ஆகியிருந்தது. மகிழ்ச்சிக்குப் பதிலாக இருவர் முகத்திலும் குழப்பமும் பீதியும் இருந்தது.

வழக்கமான விசாரிப்புகளுக்கு பிறகு ஜீவிதாவின் தாய் சட்டென உடைந்து அழ ஆரம்பித்து விட்டார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

ஜீவிதாவை பார்த்தேன். அவரோ தாயுடன் சேர்ந்து விசும்ப ஆரம்பித்துவிட்டார்.

ஐந்து நிமிடங்கள் ஆயிற்று, இருவரும் சமாதானம் ஆவதற்கு.

ஜீவிதாவிற்கு திருமணத்திற்கு 15 நாட்கள் முன்பு மாதவிடாய் வந்திருந்தது. ஜீவிதாவுக்கு சரியான தேதியில் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வந்து விடும்.

இரண்டு நாட்கள் தள்ளிப்போனதுமே வீட்டில் டெஸ்ட் எடுத்திருக்கிறார். பாஸிட்டிவ் என்று முடிவு காட்டியிருக்கிறது. திருமணமாகி 20 நாட்களே ஆன நிலையில் எப்படி கர்ப்பமாக முடியும் என்று அவரும் கணவரும் பெரும் குழப்பத்தில் இருக்க, கணவன் குடும்பத்தினர் அவரைப் பார்க்கும் விதமே மாறிவிட்டது. ஜாடையாக ஏதோ பேசத் தொடங்கிவிட்டனர். தாங்க முடியாமல் ஜீவிதா தாயிடம் கதற, இருவரும் இன்று மருத்துவமனைக்கு வந்து இருக்கிறார்கள்.

ஜீவிதா சென்னையிலேயே பிறந்து வளர்ந்த பெண். திருமணம் செய்து கொடுத்திருப்பது கிராமத்தில். மாப்பிள்ளை நன்கு படித்து நகரத்தில் வேலை செய்வதால், குடும்பத்தினர் கிராமத்தில் இருந்தாலும் பொருட்படுத்தாமல் திருமணம் செய்து கொடுத்து விட்டனர்.

பரந்த மனப்பான்மையோடு இருப்பதற்கு கிராமம் விதிவிலக்கல்ல என்றாலும் நகரத்தில் இருப்பவர்கள் மருத்துவ விஷயங்களை எளிதில் புரிந்து கொள்கிறார்கள் என்பது உண்மைதான்.

பெண்குயின் கார்னர் : ப்ரக்னன்சி டெஸ்ட் எப்போது செய்ய வேண்டும்..? எத்தனை நாட்களில் எடுக்கலாம்..?

திருமணமாகி ஒரு மாதத்திற்குள் கருத்தரிக்க முடியுமா?

திருமணமாகி ஒரு மாதவிடாய் கூட வராமல் எவ்வாறு கருத்தரிக்க முடியும்?

இதுதான் அவர்களிடத்தில் இருந்த மிகப்பெரிய கேள்வி

கருத்தரிப்பதற்கு ஒவ்வொரு மாதமும் இரண்டிலிருந்து நான்கு நாட்கள் மட்டுமே ஏதுவான நாட்கள். பெண்ணின் முட்டைப் பையில் இருந்து கருமுட்டை வெளிவந்து ஒன்றிலிருந்து இரண்டு நாட்கள் மட்டுமே உயிர்ப்போடு இருக்கும். அந்த நேரத்தை சுற்றி தாம்பத்திய உறவு நடக்கும் போதுதான் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு உண்டா கும். பொதுவாக கருமுட்டை வெளியாவது இரண்டு மாதவிடாய்க்கு மத்தியிலுள்ள நான்கு நாட்கள் ஆகும்.

இதை கருத்தரிக்கும் காலம் ( "பெர்ட்டிலிடி விண்டோ" ) என்பர்.

ஜீவிதாவுக்கு திருமணமான சமயம் சரியாக கருத்தரிக்கும் காலமாக இருந்து இருக்கிறது. அதனால்தான் திருமணத்திற்கு பிறகு மாதவிடாய் வராமலேயே கருத்தரித்து விட்டார். இது சாத்தியமே‌ . ஒருசிலருக்கு இதுபோல் நடக்கலாம். அவ்வாறு நடக்கும் போது திருமணத்திற்கு முன்பு வந்த மாதவிடாய் தேதியிலிருந்து பிரசவகாலம் கணக்கிடப்படும். அப்போது திருமணமான எட்டாவது மாதமே பிரசவ காலம் வந்துவிடும். இதுபோல் ஒரு சிலருக்கு நடந்திருக்கிறது.

பெண்குயின் கார்னர் : உடலுறவில் விருப்பம் இல்லை, குழந்தை பெற்றுக்கொள்ளவும் ஆர்வம்... என்ன செய்வது? மருத்துவர் விளக்கம்!

நானே பிரசவமும் பார்த்திருக்கிறேன். தாய்க்கும் சேய்க்கும் எந்த விதமான பிரச்சனையும் வருவதில்லை என்று கூறவும் ஜீவிதாவும் தாயும் ஓரளவு சமாதானம் அடைந்தனர். ஜீவிதாவின் கணவரையும் அன்று மாலையே சந்திப்பதாக கூறினேன். அவர் கணவரிடம் மருத்துவரீதியாக இதற்குரிய விளக்கத்தை எடுத்துக் கூறியதும் அவரும் புரிந்து கொண்டார். தன்னுடைய குடும்பத்தினரிடம் தான் விவரித்து சொல்லுவதாக உறுதி கூறினார். அவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னிடம் அழைத்து வருவதாகவும் கூறினார்.

ஜீவிதாவின் கணவர் "உங்களுடைய சரியான ஆலோசனையால் எங்களுடைய வாழ்வு பிழைத்தது டாக்டர்!!! இல்லையென்றால் இருந்த குழப்பத்தில் என்ன ஆகியிருக்கும் என்று சொல்லமுடியவில்லை. நினைத்தாலே மனம் நடுங்குகிறது" என்றார் . ஒரு இளம் தம்பதியின் வாழ்க்கையில் புயல் வீசாமல் தக்க தருணத்தில் தடுத்துவிட்ட திருப்தியுடன் புன்னகைத்தேன்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Pregnancy, பெண்குயின் கார்னர்