தியானம் என்பது மனதுடன் தொடர்புடைய விஷயம். மனம் பல சிந்தனை ஓட்டங்களிலிருந்து விடுபட்டு ஒரு குறிப்பிட்ட புள்ளிக்குள் நிற்பதுதான் தியானம். இதைச் செய்யும்போது பல நன்மைகள் உடலளவிலும் மனதளவிலும் ஏற்படுகிறது.
அமைதியான சூழலில் , மெல்லியக் காற்றின் வருடலில் கண்களை மூடி மனதை அமைதிப்படுத்தி ஒருநிலையில் இருந்தால்தான் அந்த தியானம் முழுமையடையும். தியானம் மதத்தின் அடிப்படையிலும் தொடர்புடையதாகப் பார்க்கப்படுகிறது.
சிலர் தியானத்தின் போது கடவுளிடம் பேசியதாகக் கூறுவார்கள். இதனால் மனம் தெளிவு பெற்றதாகவும் மனம் நிம்மதி அடைந்ததாகவும் கூறுவார்கள். உண்மையில் அறிவியல்படி ஆராயும்போது தியானத்திற்கு மனதை ஒருநிலைப்படுத்த ஏதேனும் ஒரு விஷயம்தேவை. அது நம் மனதைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். அதற்குக் கடவுளைப் பயன்படுத்துகின்றனர். அவருடன் பேசினேன் என்பது அவர்கள் தியானத்தின் ஆழத்திற்குள் சென்றதன் வெளிப்பாடு என்றே சொல்ல முடியும். தியானம் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றி வரும் நடைமுறை.
ஆழ்ந்த தியானத்திற்குப்பின் தெளிவு பெற்றதாகக் கூறுவதற்குக் காரணம் மன அழுத்தத்திற்குத் தொடர்புடைய சைட்டோகின் எனும் மூலக்கூறுகளின் செயல்பாடுகளைச் செயலிழக்கச் செய்வதே. இதை தேசிய சுகாதார நிறுவனம் 2017 ஆண்டு வெளியிட்ட ஆய்வும் உறுதி செய்கிறது.
இதனால் யோகா , தியானம் போன்ற அமைதியான எந்த செயலும் மன அழுத்தத்தை வெளியேற்றுகின்றன என்பதை குறிக்கிறது. மன அழுத்தம் குறைந்தாலே தூக்கம், மன அமைதி, கோபம், இயலாநிலை, தனிமை போன்ற பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.
அதேபோல் உடல் ரீதியாகவும் தினசரி உடல் வலி, தலைவலி போன்ற பிரச்னைகளும் நீங்கும் என எவிடன்ஸ் பேஸ்டு மெண்டல் ஹெல்த் வெளியிட்ட ஆய்வு குறிப்பிடுகிறது. அதில் மனதின் சுயக் கட்டுப்பாடு அதிகரிப்பதாகவும் இதனால், மனப் பதட்டம், பயம், மனச் சோர்வு, திடீர் மன அழுத்தம் போன்றவை குணமாகும். குறிப்பாக பெண்கள் மாதவிடாய் காலத்தில் இந்தப் பிரச்னைகளால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு தியானம் சிறந்தது என்பதையும் குறிப்பிடுகிறது அந்த ஆய்வு. அதேபோல் இரத்தக் கொதிப்பு, மாரடைப்பு போன்ற பிரச்னைகளும் வராது.
தியானத்தின் மூலமாக மூளை சுறுசுறுப்படையும். இதனால் மூளையில் ஆரோக்கியமும் வலுபெறுகிறது. குறிப்பாக உங்களுக்கு ஏதேனும் தீய பழக்கங்கள் இருந்தாலும் தியானத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும் என 2015 ஆண்டு டிரெண்ட்ஸ் இன் காக்னிடிவ் சைன்ஸ் வெளியிட்ட ஆய்வில் குறிப்பிடுகிறது. தியானத்தின் போது மூளையும் மனதும் ஒருநிலைப்படுவதால் சுயக் கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால் தெளிவான முடிவுகள் எடுக்கவும் வழிவகைச் செய்கிறது.
தினமும் குறைந்தது 20 நிமிடங்கள் தியானம் செய்தாலே உடல் ,மனம், மூளை ஆரோக்கியம் பெற்று சுயக் கட்டுப்பாடும் அதிகரித்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம் என அந்த ஆய்வு கூறுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.