மனிதர்களின் உடலில் நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்களை, அண்மைக்காலமாக மருந்துகளால் அழிக்க முடியாத நிலை ஏற்பட்டு, உயிரிழப்பு அதிகரிக்கிறது. இதற்கான காரணங்கள் என்ன?
கால மாற்றத்தால், மனிதர்களுக்கு புதிது புதிதாக நோய்கள் உருவாகி வருகின்றன. இதனை கட்டுப்படுத்தும் வகையில், மருந்துகள் கண்டுபிடிப்பும் தீவிரமடைந்துள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, உடலில் உருவாகும் பாக்டீரியாக்களை மருந்துகளைக் கொண்டு அழிக்க முடிவதில்லை.
204 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின்மூலம் இது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகளை லான்செட் என்ற மருத்துவ இதழ் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின்படி, நோயை குணப்படுத்த முடியாமல், உலகம் முழுவதும் 2019ஆம் ஆண்டில் 49 லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
நம்மிடம் இருக்கும் மருந்துக்கு எதிராக, பாக்டீரியாக்கள் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்வதால், நோய்க்கு எதிராக மருந்துகளால் வேலை செய்ய முடிவதில்லை. இதனை Antimicrobial resistance என்று கூறுவர். ஆண்டிபயாடிக் மருந்துகளை தேவையில்லாமல் அதிகம் பயன்படுத்துவது, மருத்துவர் கூறிய நாட்களை விட குறைவான நாட்களுக்கு மருந்து உட்கொள்வது போன்ற காரணங்களால் Antimicrobial resistance உருவாவதாக கூறுகின்றனர் மருத்துவர்கள்.
இதையும் படிங்க: கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டு கொள்வது பிறக்கும் குழந்தையை COVID தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.! அமெரிக்க ஆய்வில் தகவல்
காசநோயை ஏற்படுத்தும் பாக்டீரியா உட்பட பல பாக்டீரியாக்கள் மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொண்டுள்ளன. இவற்றை பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்கிறார் நுண் உயிரியல் பேராசிரியர் கவிதா. வழக்கமாக கொடுக்கும் மருந்துகளைத் தவிர்த்து, அரிதாக பயன்படுத்தும் மருந்துகளைக் கொடுத்து நோயை குணப்படுத்த முயற்சி எடுக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். இந்த பாக்டீரியாக்களை எதிர்கொள்ள மருந்துகளை உரிய முறையில் பயன்படுத்துவது, உரிய பரிசோதனை ஆகிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.