முற்றிலுமாக சர்க்கரை அற்ற உணவாகக் கருதப்படும் புளிக்காத தயிர் (yogurt) மற்றும் டயட் சோடா போன்ற உணவுப் பொருட்கள், அவை உருவகப்படுத்தப்படும் அளவுக்கு உங்கள் உடல் நலனுக்கு நல்லதல்ல என்று தெரியவந்துள்ளது. முன்னதாக, யோகர்ட் போன்ற உணவுப் பொருட்கள் உடல் நலனுக்கு பெரிதும் நன்மை பயக்கும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் கல்லீரலின் செயல் திறனை இந்த உணவுகள் பாதிக்கின்றன என புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வின்கான்சின் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த குழுவினர் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். அப்போது சர்க்கரைக்கு மாற்றான இரண்டு பொருட்கள் - அதாவது அசிசல்பேம் பொட்டாசியம் மற்றும் சுக்ரலோஸ் ஆகியவற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். அவை, ஊட்டச்சத்து அற்ற ஸ்வீட்னர்கள் என்றும் அழைக்கப்படுகிறது. எந்தவித கலோரிச் சத்தும் இல்லாமல் நாவுக்கு இனிப்பு சுவையை அவை கொடுக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, வின்கான்சின் மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி பயின்று வரும் லாரா டானர் கூறுகையில், “முற்றிலும் சர்க்கரை சத்து இல்லாத அல்லது லேசாக கொண்ட யோகர்ட் மற்றும் ஸ்நாக்ஸ் பொருட்கள் மற்றும் உணவுப் பொருள் அல்லாத சில வகை மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களில் கூட, இந்த அசிசல்பேம் பொட்டாசியம் மற்றும் சுக்ரலோஸ் வகை ஸ்வீட்னர்கள் இருப்பது பலருக்கு தெரியாது’’ என்று கூறினார்.
இந்த இரண்டு வகை ஸ்வீட்னர்கள் நம் உடலில் சேரும்போது, பி-கிளிபோபுரோட்டீன் என்ற செயல்பாட்டை அது தடுக்கிறது. அது பல்வகை மருந்து தடுப்பு புரோட்டீன் ஆகும். இவை உடலில் இருந்து கழிவுகள், தேவையற்ற மருந்துகள் மற்றும் மருந்து கழிவுகளை அகற்றுவதற்கு உதவிகரமாக இருக்கும் புரோட்டீன் ஆகும்.
Also Read : கோவிட் தொற்று, ஃப்ளூ அல்லது வெப்பம் சார்ந்த நோய் : இவற்றின் அறிகுறிகள்..
ஆய்வுக் குழுவின் தலைவர் ஸ்டீபைன் ஓலிவியர் வான் ஸ்டிச்லென் இதுகுறித்து கூறுகையில், “லிவர் செல்களில் இருக்கக் கூடிய பி-கிளிபோபுரோட்டீனின் செயல்பாட்டை ஆர்டிஃபிஷியல் ஸ்வீட்னர்கள் தடுத்து விடுகிறது என்பதை நாங்கள் ஆய்வு மூலமாக கண்டறிந்துள்ளோம். நாம் பொதுவாக எடுத்துக் கொள்ளக் கூடிய சில வகை உணவுகள் மற்றும் பானங்களில் கூட இத்தகைய ஸ்வீட்னர்கள் மிக அதிகமாக உள்ளன.
ஊட்டச்சத்து அல்லாத ஸ்வீட்னர்கள் மூலமாக, கழிவுகளை வெளியேற்றும் கல்லீரலின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது என்பதை கண்டறிந்துள்ள முதலாவது குழு நாங்கள் தான்’’ என்று தெரிவித்தார்.
Also Read : இதயத்தில் அடைப்பை ஏற்படுத்தும் 6 ஆபத்தான உணவுகள் : இன்றே அவற்றை நிறுத்துங்கள்..!
உடலில் மருத்துவக் கழிவுகளை கடத்தும் பி-கிளிபோபுரோட்டீனின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது என்ற சூழலில், ஆன்டிபயாடிக் மற்றும் உயர் ரத்த அழுத்தங்களுக்கான மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள், ஆர்டிஃபிஷியல் ஸ்வீட்னர்கள் உடைய உணவுகளை உட்கொள்ளும்போது, அவர்களது உடலில் இருந்து கழிவு வெளியேறுவது தடைபடுகிறது.
எனினும், இந்த ஆய்வு தொடக்கநிலையில் இருப்பது தான் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்த விரிவான மருத்துவ ஆய்வு மற்றும் கிளினிக்கல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.