yellow fungus: கருப்பு, வெள்ளையை தொடர்ந்து மஞ்சள் பூஞ்சை: எய்ம்ஸ் கூறுவது என்ன?

மாதிரிப் புகைப்படம்

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு எண்டோஸ்கோபிக் செய்து பார்த்தபோது கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் ஆகிய மூன்று வகையான பூஞ்சைகளாலும் அவர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

  • Share this:
      கருப்பு, வெள்ளை பூஞ்சைதொற்றை தொடர்ந்து தற்போது புதிதாக மஞ்சள் பூஞ்சை தொற்று பரவுவதாக  தகவல் வெளியாகியுள்ளது. 

    நாடு முழுவதும் கொரோனா 2வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் மேலும் பல நோய் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக , மியூகோர்மைகாசிஸ் (Mucormycosis) என்னும் கருப்பு பூஞ்சையானது கொரோனா பாதித்தவர்களிடையே அதிகரித்து வருகிறது.

    இந்த பூஞ்சை  அனைத்து இடங்களிலும் காணப்படும் என தெரிவித்துள்ள மருத்துவர்கள், சர்க்கரை நோயாளிகள், அதிக ஸ்டீராய்டுகள் எடுத்துக்கொள்வோர், மூச்சுவிட சிரமப்படுவோர், கொரோனாவால் பாதித்தோர், கீமோதெரபி சிகிச்சை பெறுவோர், நீண்ட காலமாக மருந்து , மாத்திரைகள் உட்கொள்வோர், எய்ட்ஸ் நோயாளிகள், போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை இந்த நோய் அதிகம் தாக்கும் என்று எச்சரித்துள்ளனர்.

    இதேபோல், வெள்ளை பூஞ்சை தொற்றும் பரவிவருவதாக கூறப்படுகிறது. தற்போது புதிதாக மஞ்சள் பூஞ்சை அறிகுறியும் கண்டறியப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத் நகரில் ஒருவர் மஞ்சள் பூஞ்சையால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அந்நபருக்கு சிகிச்சையளித்து வரும்  கண்,காது மற்றும் தொண்டை சிறப்பு மருத்துவரான  பிரிஜ்பால் தியாகி கூறுகையில், குறிப்பிட்ட நபருக்கு சி.டி. ஸ்கேன் எடுத்து பார்த்தபோது அனைத்தும் இயல்பாக இருப்பது போன்று இருந்தது. ஆனால், எண்டோஸ்கோபிக் செய்து பார்த்தபோது கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் ஆகிய மூன்று வகையான பூஞ்சைகளாலும் அவர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததாக கூறுகிறார்.

    பொதுவாக, ஊர்வனங்களிடையே மட்டுமே இந்த மஞ்சள் பூஞ்சை காணப்படும் என்றும் மனிதர்களிடையே காணப்படுவது இதுதான் முதல் தடவை என்றும் அவர் கூறுகிறார்.

    மஞ்சள் பூஞ்சை பாதிப்புக்கு உள்ளானவர்கள் சோம்பலாக காணப்படுவர் என்றும் உடல் எடை குறையும் என்றும் கூறப்படுகிறது.  கருப்பு, வெள்ளை  பூஞ்சைகள் மனிதர்களின் வெளிப்புறத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், மஞ்சள் பூஞ்சை உடலின் உட்புறத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்றும் அதனால் இந்த பூஞ்சை மிகவும் ஆபத்தானது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    எய்ம்ஸ் கூறுவது என்ன?

    இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா, மியூகோமிகோசிஸ், கேண்டிடா மற்றும் அஸ்பெர்கில்லோசிஸ் என பூஞ்சைகள் மூன்று வகைப்படும்.குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இந்த  நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்த பூஞ்சைகள் முக்கியமாக சைனஸ்கள், மூக்கு, கண்களைச் சுற்றியுள்ள எலும்பு ஆகியவற்றில் காணப்படுகின்றன, மேலும் அவை மூளைக்குள் நுழையக்கூடும். எப்போதாவது நுரையீரலில் காணப்படுகிறது” என்று தெரிவித்தார்.

    வளரும் இடத்தைப் பொறுத்து பூஞ்சைகளின் நிறம் மாறுப்படும் என்று தெரிவித்த அவர்,  நிறங்களின் அடிப்படையில் பூஞ்சைகளை அடையாளப்படுத்துவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Murugesh M
    First published: