கருவில் வளரும் சிசுவின் நலன் மற்றும் அதிக சிக்கல் நிறைந்த கர்ப்பத்தை தவிர்ப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு அளிக்கப்படும் சிகிச்சைக்கு பெயர் Prenatology (ப்ரீனேடாலாஜி) ஆகும். சுருக்கமாக சொன்னால், கர்ப்ப காலத்தில் சிசுவுக்கு அளிக்கும் மருத்துவ சிகிச்சை முறையாகும்.
கருவில் குழந்தை வளர்ச்சி மற்றும் பிரசவத்திற்குப் பிறகு குழந்தையின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு முன்கூட்டியே சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தைக்கு ஏதேனும் உடல்நலக் கோளாறுகள் அல்லது குறைபாடுகள் உள்ளனவா என்பது குறித்து முன்கூட்டியே கணிக்கப்படுகிறது.
சிசு மருத்துவ சிகிச்சையின் கீழ் அளிக்கப்படும் சேவைகள்
ஆரம்பகால கர்ப்ப ஸ்கேன்
ஒரு பெண் கர்ப்பம் அடையும்போது, அந்த கர்ப்பம் கர்ப்பப்பை உள்ளே நிகழ்ந்துள்ளதா அல்லது வெளியே நிகழ்ந்துள்ளதா என்பதை கண்டறிய ஸ்கேன் செய்யப்படுகிறது. கர்ப்பப்பைக்கு வெளியே உள்ள கர்ப்பத்தை முன்கூட்டியே கண்டறிந்து அகற்றாவிட்டால் பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
முதல் 3 மாத காலத்திற்கான ஸ்கேன்
கருவில் வளரும் குழந்தைக்கு மரபு ரீதியாக ஏதேனும் பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை கண்டறிவதற்கு இந்த ஸ்கேன் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, downs syndrome என்ற பாதிப்பு குழந்தைக்கு ஏற்படுகிறதா என்பது குறித்து ஆராயப்படும். இந்த பாதிப்பு இருந்தால் குழந்தையின் ஆயுள் குறையும் மற்றும் அவை பெற்றோரின் சிறப்புக் கவனம் தேவைப்படுகின்ற ‘ஸ்பெஷல்’ குழந்தைகளாக இருக்கும்.
5 மாத ஸ்கேன்
குழந்தையின் உடல் அமைப்பு குறித்து தெரிந்து கொள்வதற்கான மிக முக்கியமான ஸ்கேன் பரிசோதனை ஆகும். தம்பதியர் ஒரு ஸ்கேன் மட்டுமே செய்து கொள்ளத் தகுந்த வசதி உடையவர்கள் என்றால், இந்த ஒரு ஸ்கேனை தேர்வு செய்து கொள்ள வேண்டும். குழந்தையின் உடல் அமைப்பில் ஏதேனும் சந்தேகம் அல்லது குறைபாடுகள் இருந்தால், அதுகுறித்து தம்பதியரிடம் ஆலோசனை செய்து முடிவெடுக்க வேண்டும். குறைபாடு உடைய குழந்தையை வளர்க்க விரும்புகிறார்களா அல்லது தற்போதைய நிலையில் கருக்கலைப்பு செய்ய முன்வருகிறார்களா என தெரிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
Also Read : கர்ப்ப காலத்தில் சிறுநீரக வேலை திறன் டெஸ்ட் ஏன் எடுக்கப்படுகிறது..?
பிற சிகிச்சைகள்
குழந்தையின் இதயத் துடிப்பை கண்டறிவதற்கான பரிசோதனை, வளர்ச்சி குறித்த ஆய்வு, குழந்தைக்கான டோப்ளர் பரிசோதனை, கர்ப்ப கால கண்காணிப்பு, இரட்டை குழந்தை உடைய கர்ப்பம் என்றால் அதற்கான சிகிச்சை ஆகியவை ஆரம்ப காலத்திலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.
மரபு ரீதியான கவுன்சிலிங்
ஏற்கனவே குறைபாடு உடைய குழந்தைகளை பெற்றெடுத்தவர்கள் மற்றும் ரத்த சொந்தங்களுக்குள் திருமணம் செய்து கொண்டவர்கள், அடுத்த பிறக்க இருக்கின்ற குழந்தையை பாதுகாப்பாக பெற்றெடுப்பது குறித்து கவுன்சிலிங் பெற்றுக் கொள்ள வேண்டும்.
குழந்தை நலனுக்கான தீவிர கண்காணிப்பு
குழந்தைக்கு சின்னதொரு குறைபாடு என்றாலும், அதைக் கண்டறியவும், கண்காணிக்கவும் ஏதுவாக தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. மகப்பேறு மருத்துவர்கள், குழந்தைகளுக்கான இதயநோய் மருத்துவர்கள், குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை நிபுணர்கள், நரம்பியல் மருத்துவர்கள் உள்ளிட்டோரின் உதவியுடன் பாதுகாப்பான பிரசவத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொள்ள முடியும்.
ஆரோக்கியமான குழந்தை பிறக்கவும், அதன் மூலமாக பெற்றோரின் மன மகிழ்ச்சியை உறுதி செய்யவும் கர்ப்பம் தொடங்கியதில் இருந்து முறையான கண்காணிப்பு மற்றும் சிகிச்சை முறைகள் அவசியமாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pregnancy care, Pregnancy test