கார் பயணத்தின்போது ஜன்னல்களை திறந்து வைத்திருந்தால், காற்றில் இருக்கும் கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்கலாம் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நாட்கள் ஓடினாலும் கொரோனா வைரஸின் தாக்கம் குறையவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கும் கொரோனா வைரஸ், புத்தாண்டுக்கு ஏற்ப புதிய வடிவில் மனிதர்களிடம் பரவ தொடங்கியுள்ளது. ஆய்வாளர்களும் பல்வேறு தீவிர சோதனைகளை மேற்கொண்டு கொரோனாவில் இருந்து தப்பிக்கும் வழிகளை படிப்படியாக கண்டுபிடித்து வருகின்றனர். இருப்பினும், கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்க வழியே இல்லையா? என பலரும் புலம்ப ஆரம்பித்திருக்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் ஒரே பதில், கொரோனா வைரஸ் விதிமுறைகளை தவறாமல் கடைபிடித்தால் மட்டுமே, கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியும்.
அண்மையில் அமெரிக்க ஆய்வாளர்கள் மேற்கொண்டுள்ள ஆய்வில், காரில் பயணம் செய்பவர்கள் ஜன்னல்களை அடைக்காமல் திறந்துவிட்டு சென்றால் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என கண்டுபிடித்துள்ளனர். கொரோனா வைரஸ் காற்றில் பரவும் தன்மை உடையது என்பதால், அதன் ஏரோசோல்கள் நுண் துகள்களாக காற்றில் இருக்கக்கூடும். அப்போது, காரில் பயணிப்பவர்கள் ஜன்னல்களை அடைக்காமல் செல்லும்போது, காற்றின் சுழற்சி காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். ஒருவேளை நீங்கள் கார் ஜன்னல்களை அடைத்தவாறு பயணித்தால் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாக அதிக வாய்ப்பு உள்ளது.
சினிமா அரங்குகள், மால்களில் காற்றோட்டம் அதிகம் இருப்பதால், அவற்றுடன் ஒப்பிடும்போது காரில் காற்றின் சுழற்சி மிக குறைவாக இருக்கும். SARS-CoV-2 வகை கொரோனா மற்றும் காற்றினால் பரவக்கூடிய மற்ற நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் (Brown University) நடத்தப்பட்ட இந்த ஆய்வு சயின்ஸ் அட்வான்ஸ் இதழில் வெளியாகியுள்ளது (the journal Science Advances). ஜன்னல்கள் அடைக்கப்பட்ட காருக்குள் இருக்கும் காற்றில் நிகழும் மாற்றத்தையும், கொரோனா வைரஸ் பரவும் தன்மை குறித்தும் கம்பயூட்டர் மாதிரிகளைக்கொண்டு அவர்கள் ஆராய்ந்தனர். குறிப்பாக, காற்றில் இருக்கும் ஏரோசோல்களின் (aerosols ) நிலையை கண்காணித்தனர்.
எப்போதும் வேலை வேலை என இருப்பவரா நீங்கள்..? உங்களுக்கான செய்திதான் இது..
Toyota Prius மாடல் காரில் கம்யூட்டரின் மாதிரிகளைக்கொண்டு, ஓட்டுநர் மற்றும் அவருக்கு பின்பக்க சீட்டில் பயணி அமர்ந்திருந்தால் கொரோனா வைரஸ் பாதிப்பு எப்படி இருக்கும் என சோதனை செய்தனர். இருவருக்கும் இடையில் குறிப்பிட்ட தொலைவு இருக்குமாறும் பார்த்துக்கொள்ளப்பட்டது. ஏனென்றால், ஊபர் அல்லது டேக்சிகளில் இதுபோன்று பயணிகள் பயணிப்பதால், அதை மனதில் வைத்து சோதனை நடத்தப்பட்டது. 80 கிலோ மீட்டர் தொலைவு பயணித்த காரில், ஏசி ஆப் செய்யப்பட்டு, ஜன்னல்கள் திறந்தவாறு பயணம் மேற்கொண்டனர்.
அப்போது, காற்றில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்படவில்லை என கண்டுபிடித்தனர். அதேவேளையில் ஜன்னல்கள் மூடிய காரில் பயணிக்கும்போது ஆபத்து மிகவும் அதிகமாக இருப்பதை கண்டுபிடித்தனர். ஜன்னல்கள் மூடிய காரில் பயணிப்பவருக்கு மிக மிக அதிகமாக கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ச்சியாக காற்று சுழற்சி ஏற்படும்போது காற்றில் இருக்கும் கொரோனா ஏரோசோல்களின் வீரியம் வெகுவாக குறைவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மேலும், பின்பக்க ஜன்னல் வழியாக காற்று நுழைந்து முன்பக்க ஜன்னல் வழியாக காற்று சென்றால், ஓட்டுநரின் ஏரோசோல்கள் பயணிகளை பாதிப்பதில்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்...