மது குடிக்கும் பழக்கமுடைய பலரும் அவ்வப்போது பீர், வைன் போன்ற ஆல்கஹால் நிறைந்த பானங்களை பருகி தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் நண்பர்களுடன் அரட்டை அடிக்கவும் செய்கின்றனர். பொதுவாகவே மது குடிப்பதினால் உண்டாகும் போதையானது சில மணி நேரங்களிலோ அல்லது தூங்கி எழுந்ததுமே சரியாகிவிடும். ஆனால் சில சமயங்களில் மதுபானத்தில் உள்ள ஆல்கஹாலின் அளவு அதிகரித்து, ஆல்கஹால் பாய்சனிங் எனப்படும் மது விஷமாதலை உண்டாக்குகிறது. இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும்.
ஒரு நபர் மிகக் குறுகிய நேரத்தில் அதிக அளவு ஆல்கஹாலை எடுத்துக் கொள்ளும் போது, அது ஆல்கஹால் பாய்சனிங்கை உண்டாக்குகிறது. பீர் குடிப்பதாலோ, ஒயின் குடிப்பதாலோ அல்லது வேறு எந்த விதமான ஆல்கஹால் கலந்த மதுவை குடித்தாலும் இது ஏற்படும். ஒருவரின் ரத்தத்தில் உள்ள ஆல்கஹால் அளவு அதிகரிக்க அதிகரிக்க ஆல்கஹால் பாய்சனிங் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கிறது. நீங்கள் குடித்த ஆல்கஹால் செரிமானம் ஆகி ரத்தத்தில் கலந்து, பிறகு ரத்தத்தில் உள்ள ஆல்கஹாலின் அளவை அதிகரிக்கிறது. நம்முடைய கல்லீரலால் ரத்தத்தில் உள்ள ஆல்கஹால் அளவு குறைக்கப்படும் என்றாலும் ரத்தத்தில் அதிக அளவு ஆல்கஹால் கலந்திருக்கும் பட்சத்தில் நம்முடைய கல்லீரலால் அதனை சரிப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால் உடலின் இயக்கங்கள் பாதிக்கப்படுகின்றன. முக்கியமாக மூளையின் செயல் திறன் பாதிக்கப்பட்டு, அனிச்சை செயல்களான மூச்சு விடுவது, இதயம் துடிப்பது, ரத்த ஓட்டம், உடல் வெப்பநிலை போன்ற விஷயங்கள் கூட பாதிக்கப்படுகின்றன. ரத்தத்தில் கலந்துள்ள ஆல்கஹாலின் அளவு BAC (Blood Alcohol concentration) என்ற அளவீட்டின் படி அளக்கப்படுகிறது. இதன்படி ரத்தத்தில் ஆல்கஹால் கலந்துள்ள சதவீதம் அதிகரிக்க அதிகரிக்க, ஆல்கஹால் பாய்சனிங் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கிறது.
இதில் 0.05% என்பது சாதாரணமாக மது அருந்துபவர்களுக்கு ரத்தத்தில் உள்ள ஆல்கஹாலின் சதவீதம் ஆகும். இந்த ஆல்கஹாலின் சதவீதம் 0.31% மற்றும் 0.45% என்ற அளவில் இருக்குமேயானால் அது ஒருவரின் உயிருக்கு கூட ஆபத்தை விளைவிக்கும். இந்த நிலையில் உடலின் முக்கிய இயக்கங்கள் கூட நின்று போய் விடும் ஆபத்துகூட இருக்கின்றது.
ஆல்கஹால் பாய்சனிங் ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகள்:
*ஈரமான பளபளப்பான தோல், மற்றும் சருமம் நீல நிறத்தில் மாறுதல், குறிப்பாக உதடுகளிலும்.
* விரல் நகங்களை சுற்றியும் நீல நிறத்தில் மாறுதல்.
* குழப்பம், மிகவும் மெதுவான பதில், நடப்பதில் தள்ளாட்டம்
* சீரற்ற நாடித்துடிப்பு, சீரற்ற இதய துடிப்பு, சீரற்ற மூச்சுவிடுதல்
* சிறுநீரகங்கள் அல்லது குடலில் பாதிப்புகள்
* மூச்சடைப்பு, வாந்தி எடுப்பது
* அதிகப்படியான ஆல்கஹால் துர்நாற்றம்
* ஹைபோதெர்மியா
இவை அனைத்துமே ஆல்கஹால் பாய்சனிங் ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் ஆகும். இது போன்ற அறிகுறிகளை உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருப்பதாக சந்தேகித்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது நல்லது.
ஆல்கஹால் பாய்சனிங் ஏற்படாமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள, முடிந்த அளவு ஆல்கஹால் உட்கொள்வதை குறைத்துக் கொள்வது நல்லது. குறிப்பாக மிக குறைந்த நேரத்தில் அதிக அளவு ஆல்கஹாலை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும் போது கூட எவ்வளவு குடிக்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
Also Read : கல்லீரலுக்கு பாதிப்பு வராமல் மது அருந்த முடியுமா? பிரபல மருத்துவர் கொடுத்த அட்வைஸ்!
ஆல்கஹால் பாய்சனிங் ஏற்படாமல் நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி?
* நண்பர்களுடன் சேர்ந்து யார் அதிகம் மது அருந்துகிறார்கள் என்பது போன்ற போட்டிகளை தவிர்க்க வேண்டும்.
* ஒவ்வொரு முறை மது அருந்திய பிறகும் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.
* சிகிச்சைக்காக மருந்து பொருட்களை உட்கொள்ளும் நேரத்தில் மது அருந்துதல் கூடாது.
* பசியோடு இருக்கும் நேரத்தில் முதலில் உணவு உட்கொண்ட பின், தேவைக்கேற்ப மது அருந்தலாம்.
நீங்கள் என்ன விதமான மதுவை குடிக்கிறோம் என்ற தெளிவு இல்லாமல் இருந்தால் அதனை குடிக்காமல் தவிர்த்து விடுவது நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Alcohol, Alcohol consumption, Drunkard