• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கேன்சருக்கு காரணமான ஆன்கோஜென்களின் வளர்ச்சியை 90% குறைக்கும் மருந்து.. பரிசோதனையில் இருப்பதாக தகவல்..

கேன்சருக்கு காரணமான ஆன்கோஜென்களின் வளர்ச்சியை 90% குறைக்கும் மருந்து.. பரிசோதனையில் இருப்பதாக தகவல்..

புற்றுநோய்

புற்றுநோய்

தலை மற்றும் கழுத்து பகுதி புற்றுநோய்க்கான மிகவும் பொதுவான சிகிச்சையானது கதிர்வீச்சு சிகிச்சை ஆகும். ஆனால் இறுதியில் பாதிக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு புற்றுநோய் மீண்டும் வருகிறது.

  • Share this:
விலங்குகளை அடிப்படையாக கொண்டு நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்படும் புற்றுநோயின் வளர்ச்சியைக் குறைப்பதைக் காட்டும் புதிய சேர்க்கை சிகிச்சையை ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்துள்ளனர். ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, தலை மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்படும் புற்றுநோய் உலகளவில் ஆறாவது பொதுவான புற்றுநோயாகும். இதற்கென பயனுள்ள சிகிச்சைகள் இருந்த போதிலும், இந்த புற்றுநோய் பெரும்பாலும் மீண்டும் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சின்சினாட்டி பல்கலைக்கழகத்தைச் (University of Cincinnati) சேர்ந்த ஆராய்ச்சியாளர் கிறிஸ்டினா விக்கர் இதுதொடர்பாக பேசும்போது, ``மற்ற புற்றுநோய்களை போலவே, தலை மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்படும் புற்றுநோய் உண்மையிலேயே ஒருவரின் வாழ்க்கையை மாற்றியமைக்கிறது. இந்தப் புற்றுநோய் தொண்டை, நாக்கு அல்லது மூக்கு ஆகிய உறுப்புகளை அதிகளவில் பாதிக்கும். இந்த நோயாளிகளால் பெரும்பாலும் பேசவோ அல்லது சாப்பிடவோ முடியாது. பாதிப்படைந்தவர்களின் சந்தோஷமான வாழ்க்கையை இந்த புற்றுநோய் பறித்துச்செல்கிறது. தற்போது எங்கள் ஆராய்ச்சியார்கள் சோதனை செய்யும் மருந்துக்கு தலை மற்றும் கழுத்து புற்றுநோயில் கதிர்வீச்சு சிகிச்சையை மேம்படுத்தும் திறன் இருக்கிறதா என்று இதுவரை யாரும் ஆய்வு செய்யவில்லை. மிக முக்கியமாக, இந்த மருந்து நோயாளிகளால் நன்கு பொறுத்துக் கொள்ளப்பட்டு குறைந்த பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது" என்று கூறினார். 

கேன்சர் லெட்டர்ஸ் இதழில் (Cancer Letters) வெளியிடப்பட்ட இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஏற்கனவே இருக்கும் பயனுள்ள சிகிச்சையை இன்னும் சிறப்பாகச் செய்வதற்கான வழியைக் கண்டுபிடிக்க முடியுமா என்று ஆராய்ச்சியாளர்கள் விலங்கு மாதிரிகளில் ஒரு புதிய சேர்க்கை சிகிச்சையை சோதித்தனர். கதிர்வீச்சு சிகிச்சையை டெலக்லெனாஸ்டாட் (telaglenastat) எனும் மருந்துடன் ஆராய்ச்சியாளர்கள் இணைத்தனர். அது ஒரு உயிரணு பாதையில் ஒரு முக்கிய நொதியை தடுத்து நிறுத்துகிறது. ஏனெனில் அந்த நொதி புற்றுநோய் உயிரணுக்களில் மாற்றப்படும். இதனால் புற்றுநோய் உயிரணுக்கள்  வேகமாக வளர்ந்து சிகிச்சையை எதிர்க்கின்றன. மேலும் இந்த மருந்து பல்வேறு புற்றுநோய்களுக்கான சிகிச்சையை மேம்படுத்த முடியுமா? என்று பல மருத்துவ பரிசோதனைகளில் ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

விலங்கு மாதிரிகளைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் இந்த மருந்து தலை மற்றும் கழுத்து புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை 90 சதவீதம் வரை குறைத்துள்ளதாகவும், மேலும் இது தலை மற்றும் கழுத்து கட்டிகள் உள்ள விலங்குகளில் கதிர்வீச்சின் செயல்திறனை 40 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் கண்டறிந்தனர். மேலும் இது குறித்து பேசிய ஆராய்ச்சியாளர் விக்கர், இந்த முடிவுகளுடன், குறிப்பாக முந்தைய மருத்துவ பரிசோதனைகளில் இந்த மருந்து நோயாளிகளால் நன்கு பொறுத்துக் கொள்ளப்படுகின்றன என்பதைக் காட்டுவதால், தலை மற்றும் கழுத்து புற்றுநோய் மருத்துவ பரிசோதனைகளுக்கு விரைவாக இதை பயன்படுத்த சாத்தியம் உள்ளது. எதிர்காலத்தில், தலை மற்றும் கழுத்து புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சையை இன்னும் பயனுள்ளதாக மாற்ற இந்த மருந்து பயன்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று கூறியுள்ளார்.

தற்போது, தலை மற்றும் கழுத்து பகுதி புற்றுநோய்க்கான மிகவும் பொதுவான சிகிச்சையானது கதிர்வீச்சு சிகிச்சை ஆகும். ஆனால் இறுதியில் பாதிக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு புற்றுநோய் மீண்டும் வருகிறது. பெரும்பாலும் கதிர்வீச்சு சிகிச்சை இரண்டாவது முறையாக செய்யப்படும் போது சாதகமான முடிவுகளை காட்டவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ram Sankar
First published: