முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கர்ப்பிணிப் பெண்கள் புறக்கணிக்கக் கூடாத 9 ஆபத்து காரணிகள்..!

கர்ப்பிணிப் பெண்கள் புறக்கணிக்கக் கூடாத 9 ஆபத்து காரணிகள்..!

கர்ப்பகால சிக்கல்கள்

கர்ப்பகால சிக்கல்கள்

கர்ப்பிணி பெண்களுக்கு பொதுவான சில உடல் நலப்பிரச்சனைகள் கர்ப்பம் காரணமாக ஏற்படலாம் என்றாலும், மற்றவை எதிர்பாராத விதமாக ஏற்பட வாய்ப்புள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கர்ப்ப காலம் என்பது பெரும்பாலான பெண்கள் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான காலமாக இருக்கும். ஆனால் சில பெண்கள் மட்டும், கர்ப்ப காலத்தில் UTI எனப்படும் சிறுநீர் பாதைத் தொற்று அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரும். இப்படிப்பட்ட பிரச்சனைகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது கட்டாயம், இல்லையெயேல், இந்த பிரச்சனை குழந்தை அல்லது தாயின் உயிருக்கு கூட ஆபத்தாக அமையலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

கர்ப்பிணி பெண்களுக்கு பொதுவான சில உடல் நலப்பிரச்சனைகள் கர்ப்பம் காரணமாக ஏற்படலாம் என்றாலும், மற்றவை எதிர்பாராத விதமாக ஏற்பட வாய்ப்புள்ளது. கர்ப்ப காலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டிய சில கவலைக்குரிய அறிகுறிகள் குறித்து மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த ஒரு உடல் நலப்பிரச்சனையையும் புறக்கணிக்காமல் உடனே கவனம் செலுத்தும் படி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

top videos

    கர்ப்ப காலத்தில் பெண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய 9 ஆபத்து காரணிகள்:

    1. கர்ப்ப காலத்தில் குமட்டல், வாந்தி, அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் பொதுவானது தான் என்றாலும், பிரச்சனையின் வீரியம் அதிகரிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாந்தி, குமட்டல் ஆகியவை அதிகரிப்பது குழந்தை மற்றும் தாய்க்கு நீரழிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே இதுபோன்ற பாதிப்புகளின் தீவிரத்தை ஆரம்பத்திலேயே கண்காணிக்க வேண்டும்.
    2. கர்ப்பம் தரித்த 3 மாத காலக்கட்டத்தில் தன்னிச்சையான கருக்கலைப்பு மற்றும் மிஸ்டு அபார்ஷன் போன்றவை நிகழலாம் என்பதால் கர்ப்பிணி பெண்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இதனை தவிர்க்க கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே சில சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளவது நல்லது. குறிப்பாக தாய் நெகட்டிவ் ரத்த வகையையும், தந்தை பாசிட்டிவ் ரத்த வகையையும் உள்ளவர்களாக இருந்து, குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்த வகை இருந்தால் ஆன்டிபாடிக்கள் உருவாகி பிரசவ நேரத்தில் கடுமையாக சிக்கல்களை உருவாக்கக்கூடும். எனவே தம்பதியருக்கு வேறு, வேறு வகையான ரத்த வகைகள் இருந்தால், ஆன்டிபாடிகளைக் கண்டறிய இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும்.
    3. எச்.ஐ.வி, ஹெபடைடிஸ், சிபிலிஸ் மற்றும் காசநோய் போன்ற நோய்த்தொற்றுகள் கர்ப்பிணிப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், எனவே கர்ப்பிணி பெண்கள் ஆரம்ப கட்டத்திலேயே முறையான பரிசோதனைகள், ஆரம்பகால நோயறிதல் ஆகியவற்றை செய்து, சரியான சிகிச்சை மற்றும் தடுப்பூசி எடுத்துக்கொள்வது தாய், சேய் இருவருக்கும் பாதுகாப்பானதாக அமையும்.
    4. சிறுநீர் பாதை நோய்த்தொற்று (UTI), பிற வைரஸ் தொற்று மற்றும் பிறப்புறுப்பு நோய்த்தொற்றுகளை முன்கூட்டியே கண்டறிந்து, அதற்கான சிகிச்சையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
    5. கர்ப்பகாலத்தில் ஏற்படக்கூடிய நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றால் தாய் மற்றும் குழந்தைக்கு ஏற்படும் பெரிய சிக்கல்களைத் தவிர்க்க, ஆரம்ப கட்டத்திலேயே நோய் பாதிப்பை கண்டறிந்து, சிகிச்சை பெறுவது நல்லது.
    6. பிரசவ தேதிக்கு முன்பே வலி எடுப்பது அல்லது முன்கூட்டியே பனிக்குடம் உடைவது போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேருமா? என்பதை கர்ப்பிணி பெண்கள் முன்கூட்டியே பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் முன்கூட்டியே சிகிச்சை எடுத்துக்கொண்டால் தாய் மற்றும் சேய்யை நலமுடன் காக்க முடியும்.
    7. குழந்தை பிறப்பதற்கு முன்பே தாயின் கருப்பையில் இருந்து பிரியக்கூடிய பாதிப்பான ‘நஞ்சுக்கொடி ப்ரீவியா’ மற்றும் குழந்தைக்கு தொப்புக்குள் கொடி சுற்றி இருப்பது ஆகிய இரண்டும் கர்ப்ப காலத்தில் மிகவும் தீவிரமான பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இவை தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் உயிருக்கு ஆபத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.
    8. கர்ப்பப்பையில் உள்ள குழந்தையை பாதுகாப்பதற்காகவும், வளர்ச்சிக்காவும் அம்னோடிக் என்ற திரவம் உற்பத்தியாகிறது. இந்த திரவத்தின் அளவு அதிகரிக்கும் போது ‘பாலிஹைட்ராம்னியோஸ்’ என்ற பிரச்சனையும், குழந்தை அமினோடிக் திரவத்தை குடிப்பதால் ‘ஒலிகோஹைட்ராம்னியோஸ்’ என்ற பாதிப்பும் ஏற்படக்கூடும். இதனை தவிர்க்க ஆரம்ப நிலையிலேயே அறிகுறிகளைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது நல்லது. ஏனெனில் இந்த பிரச்சனைகள் பிரசவம் அல்லது சிசேரியன் போது ஏற்படும் ரத்தப்போக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
    9. கருவளர்ச்சியை குறைக்கூடிய அம்னோடிக் ஃப்ளூயிட் எம்போலிசம் அல்லது த்ரோம்போம்போலிசம் போன்ற அரிதான மற்றும் உயிருக்கு ஆபத்தான நோய்கள் மருத்துவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூட காலஅவகாசம் கொடுக்காமல் நிலையை மோசமாக்க கூடும் என்பதால் முன்கூட்டியே சிகிச்சை மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது.
    First published:

    Tags: Pregnancy Risks