முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கிறதா? சிறுநீரக பாதிப்பு இருக்க வாய்ப்பு

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கிறதா? சிறுநீரக பாதிப்பு இருக்க வாய்ப்பு

சிறுநீரக பாதிப்பு

சிறுநீரக பாதிப்பு

இந்தியாவில் ஒரு மில்லியன் நபர்களில் 900 பேருக்காவது நாட்பட்ட சிறுநீரக நோய் பிரச்னை உள்ளது

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :

நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலின் ஆரோக்கியத்தைக் காக்க பல வகைகளில் துணைபுரிவது நம் சிறுநீரகம் தான். "இந்தியாவில் ஒரு மில்லியன் நபர்களில் 900 பேருக்காவது  சிறுநீரக நோய் பிரச்னை உள்ளது" என்கிறது சுகாதார துறை அமைச்சகம். இதில் அதிர்ச்சி தரக்கூடிய ஒரு செய்தி என்னவென்றால், பலர் தங்களுக்கு சிறுநீரகம் பாதிப்பு அடைந்துள்ளது என்பதையே அறியாமல் இருக்கிறார்கள்.

நோய் முதிர்ச்சியடையும் நிலையில்தான் அவர்கள் தெரிந்துகொள்கிறார்கள். இதை, வளரவிடக் கூடாது. அப்படி வளர்ந்தால் டயாலிசிஸ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என பல பெரிய சிகிச்சைகளைச் செய்ய வேண்டி வரும். நம் உடலில் ஒரு பிரச்னை என்றால் அது திடீரென்று உருவாவதில்லை.

ஒரு நாள் நீங்கள் தூங்காமலிருந்தால் அடுத்த நாள் சுறுசுறுப்பாக உங்களால் வேலை செய்ய இயலாது. அதுபோல அன்றாடம் நீங்கள் செய்யும் வேலைகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்றாலோ, வலி, அரிப்பு, மன உளைச்சல் ஏற்பட்டாலோ உடனடியாக உங்கள் உடல் அனுப்பும் தகவல்களைக் கவனியுங்கள். ஏனெனில் உடல் உறுப்புகளில் சிறிய பாதிப்பு வந்தாலும் அந்த செய்தியை உடல் உங்களுக்கு அனுப்பிவிடும். உங்களது சிறுநீரகம் சரியாக வேலை செய்யவில்லை என்பதை இந்த அறிகுறிகளை வைத்துக் கண்டுபிடித்துவிடலாம்.

சுவாசத்தில் துர்நாற்றம் :

சிறுநீரகம் சரியாக செயல்படாமல் போகும்போது ரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகமாகும். இந்த யூரியா எச்சிலில் அமோனியாவாக உடையும். இது மூச்சுக்காற்றை கெட்ட வாடையாக மாற்றும். ஆரோக்கியமான சிறுநீரகங்கள் இரத்தத்திலிருந்து கழிவுகள் மற்றும் கூடுதல் திரவங்களை அகற்றுகின்றன. மேலும் இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகின்றன. உடலில் உள்ள தாதுக்களின் சரியான அளவைப் பராமரிக்கவும் செய்கின்றன.

நமைச்சல் மற்றும் வறண்ட சருமம், சிறுநீரகங்கள் தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களின் சரியான சமநிலையைப் பராமரிக்கத் தவறியதைக் குறிக்கின்றன, இதனால் எலும்பு மற்றும் சிறுநீரக நோய் ஏற்படலாம். இதைக்கொண்டு நம் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். ரத்தத்தில் கழிவுகள் உருவாகும்போது, அது உணவின் சுவையை மாற்றி, உங்கள் வாயில் ஓர் உலோக சுவையை விட்டு விடுகிறது. கெட்ட மூச்சு உங்களுக்கு உள்ளது என்றால் இரத்தத்தில் அதிக நச்சுகள் மற்றும் மாசுபடுவதற்கான மற்றொரு அறிகுறியாகும்.

தூக்கமின்மை :

உங்கள் சிறுநீரகங்கள் சரியாக செயல்படாதபோது, நச்சுகள் சிறுநீர் வழியாக உடலிலிருந்து வெளியேறாமல் இரத்தத்திலேயே தங்கிவிடும். நச்சுகளின் அளவு அதிகரிப்பது நீங்கள் தூங்குவதைக் கடினமாக்குகிறது. அதனால் சிறுநீரக செயல்பாடு குறைவாக இருக்கும்போது நிம்மதியான தூக்கம் வருவது கடினம்.

சிறுநீரகங்கள் நச்சுகளை சரியாக வடிகட்டாதபோது, அவை இரத்தத்தில் தங்கிவிடும். இது தினசரி நீங்கள் தூங்கும்போது சிக்கலை உருவாக்குகிறது. நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாக ”ஸ்லீப் அப்னீயா” எனப்படும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுகின்றனர். மூச்சுத்திணறல் என்பது நீங்கள் தூங்கும் போது சுவாசத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடைநிறுத்தங்களை ஏற்படுத்தும் ஒரு கோளாறு. இந்த இடைநிறுத்தங்கள் ஓரிரு வினாடிகளிலிருந்து ஒரு நிமிடம் வரை நீடிக்கும். ஒவ்வொரு இடைநிறுத்தத்திற்கும் பிறகு, சாதாரண சுவாசம் உரத்த குறட்டையுடன் திரும்பும். உங்களுக்கு இந்த அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவரைச் சந்திக்கவும்.

பசியின்மை மற்றும் குமட்டல் :

பசியின்மை, அசாதாரண வாய் ருசி, மற்றும் மிகக் குறைவாக உணவில் நாட்டம் போன்றவை இந்த சிக்கலுக்கான பொதுவான அறிகுறிகளாகும். இது மேலும் பழுதாகும் பொழுது, உடலுக்கு தேவையற்ற விஷப் பொருட்களின் அளவு இரத்தத்தில் அதிகமாகும் பொழுது, சம்பந்தபபட்ட நோயாளிக்கு வாந்தி மற்றும் அடிக்கடி விக்கல்கள் வரும். சிலருக்கு அடிக்கடி குமட்டல் ஏற்படும். அதிகப்படியான காய்ச்சலிளிருந்து குமட்டல் வந்தால், சிறுநீரகங்களில் கற்கள் இருக்கின்றன என்று அர்த்தம்.

வீக்கம் அல்லது தடிப்பு :

உடலில் தேங்கியுள்ள தேவையற்ற நீரை சிறுநீரகத்தால் வெளியேற்ற முடியாமல் போகும்போது கணுக்கால், கால், பாதம், கைகள் குறிப்பாக முகத்தில் வீக்கம் அல்லது அடைப்பு ஏற்படும். முகம் வீங்குதல், அல்லது பாதங்களும் அடிவயிறும் வீங்குதலும் இந்த நோய்களைக் காட்டிக் கொடுத்து விடும். இதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், வீக்கங்கள் முதலில் முகத்தில் ஆரம்பித்து கண் இமைகளைத் தொட்டு விட்டு முக்கியமாக காலை வேளையில் மிகவும் தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கும். சிறுநீரகங்கள் பழுதாவதே முகம் வீங்கும் அறிகுறியால் தெரிவிக்கும் செய்தி. ஆனால் வெறும் வீக்கங்கள் மட்டுமே போதுமான அறிகுறிகள் அல்ல.

குளிர்காலத்தில் உங்கள் நுரையீரல் ஆரோக்கியம் கெடாமல் இருக்க சில ஆயுர்வேத முறைகள்!

ஒருசில மாதிரியான சிறுநீரக பழுதுகளில் முறையாக வேலை செய்து கொண்டிருக்கும் சிறுநீரகங்கள் கூட வீக்கங்களைக் கொண்டு வரும். ஒரு சிலருக்கு அந்த வீக்கமே காணாமல் போகலாம். ஆனால் சிறுநீரகங்கள் குறிப்பிடப்படும் அளவுக்கு பாழாகி இருக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடு குறையும்போது உடலில் கழிவுகள் அதிகமாகச் சேரும்.

இதனால் தோல்களில் அதிகமான வெடிப்பு மற்றும் தடிப்புகள் உண்டாகும். சிறுநீரகத்தில் கோளாறு இருந்தால் உடலிலிருந்து அவை கூடுதல் திரவத்தை அகற்றாது. இது உங்கள் கணுக்கால், கால்கள் மற்றும் கைகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் சோடியம் தக்கவைப்புக்கு வழிவகுக்கிறது. உடலின் கீழ்ப் பகுதிகள் வீக்கம் அடைவது, இதயம் மற்றும் கல்லீரல் நோய் அல்லது கால் நரம்பு பிரச்சினைகளையும் உருவாக்கும்.

ரத்தசோகை :

உடல்நலிவு, ஆரம்ப வலிகள், கவனக் குறைபாடு ஆகியவை ரத்தசோகை உள்ளவர்களுள் தென்படும் பொதுவான அறிகுறிகளாகும். ஒருவரை மிக மோசமாக சிறுநீரக நோய்கள் தாக்கும் பொழுது இது போன்ற அறிகுறிகள் ஆரம்பமாகலாம். பொதுவான சிகிச்சைகள் மூலம் இரத்த சோகையை குணப்படுத்த முடியவில்லையெனில், சிறுநீரக செயலிழப்பு என்பதை உறுதி செய்யலாம். சிறுநீரகம் எரித்ரோபோய்டின் (Erithropoietin) எனும் ஹார்மோனைச் சுரக்கிறது. இது, ஆக்சிஜன், ரத்த சிவப்பு அணுக்களைக் கொண்டு செல்வதற்கு உதவுகிறது. சிறுநீரகம் பாதிப்படையும்போது எரித்ரோபோய்டின் ஹார்மோனின் அளவு குறையும். இதனால் ரத்த சிவப்பு அணுக்கள் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் அளவும் குறையும். இதனால் தான் சோர்வும், ரத்தசோகையும் ஏற்படுகின்றன.

ஹைப்பர் டென்ஷன் :

சிறுநீரகங்கள் பழுதடைந்தவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் அல்லது ஹைப்பர் டென்ஷன் வருவது சகஜம். இளம் வயதில் அதாவது 35 வயதிற்குள் இது ஏற்பட்டால் அல்லது மருத்துவர் சோதிக்கும்பொழுது உயர் இரத்த அழுத்தம் உறுதியானால், சிறுநீரகக் கோளாறுகளே அதற்குக் காரணமாக இருக்கலாம்.

முதுகுவலி மற்றும் மூச்சுத்திணறல் :

பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னை உள்ளவர்களுக்கு முதுகுவலி அடிக்கடி ஏற்படும். இன்னும் சிலருக்கு சிறுநீரகத்துக்கு அருகிலேயே வலி தோன்றும். இந்த அறிகுறி வெகு சிலருக்கு மட்டுமே தெரியும். கீழ் முதுகில் வலி, உடல் வலி, அரிப்பு மற்றும் கால்களில் பிடிப்பு போன்றவை பொதுவாக சிறுநீரக நோய்களின் பிரதிபலிப்பு ஆகும். வளர்ச்சி குன்றுதல் மற்றும் உயரம் குறைவாக இருத்தல் மற்றும் கால் எலும்புகள் வளைந்து கொடுத்தல் - இவை எல்லாம் சிறுநீரக நோய்கள் குழந்தைகளைத் தாக்கும்பொழுது வரக் கூடிய அறிகுறிகள். சிவப்பு ரத்த அணுக்களில் ஆக்சிஜனின் அளவு குறைவதாலும், தேவையற்ற திரவம் குடலிலேயே தங்கிவிடுவதாலும் மூச்சுத்திணறல் ஏற்படும்.

First published:

Tags: Health Checkup, Kidney