மழைக்காலத்தில் ஜம்முனு மழையை ரசித்தப்படி குடிக்க ஆரோக்கியமான சூப்கள்!

மழைக்காலத்தில் ஜம்முனு மழையை ரசித்தப்படி குடிக்க ஆரோக்கியமான சூப்கள்!

சிக்கன் சூப்

மழைக்காலத்தில் சூப் குடிப்பது போன்ற சுகம் எதிலும் இருக்காது. சூப்கள் உங்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை.

  • Share this:
மழைக்காலத்தில் நாம் நம் உடலை சூடாக வைத்துக்கொள்ளவே விரும்புவோம். வெளிப்புறத்தில் கதகதப்பான முழு உடல் ஆடைகள், கம்பளிகளைப் பயன்படுத்தினாலும், உடலுக்கு உள்ளே ஒரு இதமான சூடு தேவைப்படுகிறது. மழைக்காலத்தில் சூப் குடிப்பது போன்ற சுகம் எதிலும் இருக்காது. சூப்கள் உங்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை. அதற்கும் மேலாக, அவை தயாரிக்க மிகவும் எளிதானது. வீட்டிலேயே சுவையான, சத்தான, வகை வகையான சூப்புகளை செய்து அனைவருக்கும் கொடுக்கலாம்.

தக்காளி சூப் :

தேவையான பொருட்கள்:

நன்கு பழுத்த தக்காளி – 6
பெரிய வெங்காயம் – 2
பூண்டு – 7 பல்
சோள மாவு – 2 மேஜைக் கரண்டி
வெண்ணெய் – 3 தேக்கரண்டி
தக்காளி சாஸ் – 3 மேஜைக் கரண்டி
மிளகுத்தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். கடாயில் வெண்ணெயை 2 தேக்கரண்டி ஊற்றி, அதில் பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பூண்டு வதங்கியதும், அடுத்து வெங்காயத்தை வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், தக்காளி, தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து வதக்கவும். தக்காளியின் பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு கால் லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பின்னர் சுவையான தக்காளி சூப் தயார்.

காளான் சூப் :

காளான் - 7,
வெங்காயம் - 2,
பூண்டு - 3 பல்,
இஞ்சி - ஒரு சிறு துண்டு,
பால் - 1/2 கப்,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
பிரிஞ்சி இலை - 1,
உப்பு - தேவையான அளவு,
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்.

செய்முறை:-

வெங்காயத்தையும், காளானையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் வெண்ணெய் சேர்த்து பூண்டு, பிரிஞ்சி இலை, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து லேசாக வதக்கவும். அத்துடன் வெங்காயம், காளான் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். வதங்கியதும் 1 கப் தண்ணீர் சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைத்து ஆறவிடவும். ஆறியதும் அத்துடன் பாலைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் அரைத்த விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து உப்பு, மிளகுத் தூள் சேர்த்து 2 கொதி வரும் வரை வேகவிட்டு இறக்கி சூடாக பரிமாறவும்.



கேரட் இஞ்சி சூப் :

தேவையானவை:

கேரட் - 6
வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிது
இஞ்சி - 1 துண்டு
வெண்ணை - 1 ஸ்பூன்
சோள மாவு - 1/2 ஸ்பூன்
பால் - 1 கப்
உப்பு ,மிளகு தூள் - தேவைகேற்ப

செய்முறை:

வாணலியில் வெண்ணையை சூடேற்றி வெங்காயம், இஞ்சி, கேரட், மற்றும் கொத்தமல்லியை 10 நிமிடங்கள் வதக்கவும். சோள மாவினை தண்ணீருடன் கலந்து சேர்க்கவும். இதோடு உப்பு மற்றும் மிளகு தூளை சேர்த்து கலக்கவும். இந்த‌க் கலவையை மூடியால் மூடி 10 நிமிடங்கள் வரை சமைக்கவும். இதனோடு பாலை சேர்த்து நன்றாக கொதிவந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.

பீட்ரூட் சூப் :

தேவையானவை:

கேரட் - 3
பீட்ரூட் - 2
பாசிப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
ஆலிவ் ஆயில் / வெண்ணெய் - 2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 3 தேக்கரண்டி
மிளகுத் தூள் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

முதலில் ஒரு கிண்ணத்தில் பீட்ரூட், கேரட் மற்றும் பருப்பை போட்டு தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும். வேக வைத்தவற்றை மிக்ஸியில் போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்து, 3 கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். கலவை கொதித்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். தக்காளி சாஸ், மிளகுத் தூள், உப்பு மற்றும் வெண்ணெய் சேர்த்துப் பரிமாறவும்.சுவையான, சத்தான பீட்ரூட் சூப் தயார்.



கோழி சூப் :

தேவையான பொருட்கள்:

கோழி துண்டுகள் - 50 கிராம்
சிறிய வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையானஅளவு
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
1 ஸ்பூன் - மல்லி தூள்
மிளகு - 2 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்

செய்முறை:

குக்கரில் கோழி துண்டுகள், வெங்காயம், தக்காளி நறுக்கியது, கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகு இடிச்சு சேர்த்து நல்லெண்ணெய் ஊற்றி கொள்ளவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு 5 விசில் விட்டு இறக்கவும். சூப்பரான கோழி சூப் தயார். பரிமாறும் போது லேசாக பெப்பர் தூவி பரிமாறவும்.

 

 
Published by:Sivaranjani E
First published: