ஜில் கிளைமேட்டுக்கு ஏத்தமாதிரி வித்தியாசமா ருசியான சிக்கன் ரெசிபிகளை செஞ்சு சாப்பிடுங்க..

சிக்கன்

வகை வகையான அசைவ உணவு இருப்பினும் சிக்கன் சுவை தனிசுவை தான். சிக்கனில் புரத சத்து, வைட்டமின் A, B,D ஆகிய ஆகியவை நிறைந்துள்ளன.

  • Share this:
அசைவ உணவுகளில் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு சிக்கன். என்னதான் வகை வகையான அசைவ உணவு இருப்பினும் சிக்கன் சுவை தனிசுவை தான். சிக்கனில் புரத சத்து, வைட்டமின் A, B,D ஆகிய ஆகியவை நிறைந்துள்ளன. சிக்கன் சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பயனுள்ளதாக இருக்கும். மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் ஆடு இறைச்சி ஆகியவற்றில் காணப்படும் கொழுப்பின் அளவு கோழி, மீன் மற்றும் காய்கறிகளில் காணப்படும் அளவை விட மிக அதிகம்.

எனவே, கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய்கள் உருவாகும் அபாயம் கோழி இறைச்சியில் குறைவு. எடை குறைப்பதில் சிக்கன் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல கோழி இரைச்சியில் சூப் வைத்து சாப்பிட்டால் மண்டை சளி அத்தனையும் வெளியே வந்துவிடும். அந்த அளவுக்கு கோழி இறைச்சியில் நற்பண்புகள் நிறைந்துள்ளன. ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் கோழியை நாம் சுவைக்க முடியும் என்றாலும், குளிர்காலத்தில் இன்னும் அற்புதமாக விதத்தில் சிக்கனை சமைத்து சாப்பிடலாம். கட்டாயம் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும்.



1. பொட்டேடோ சிக்கன் ஸ்டூ: (Potato Chicken Stew)

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 750 கிராம்
தேங்காய் எண்ணை - 3 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
பட்டை - 1 துண்டு
மிளகு - 3
பிரிஞ்சு இலை - 1
வெங்காயம் - 2 கப்
இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கியது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
முதலாம் தேங்காய்ப்பால் - 1 கப்
இரண்டாம் தேங்காய்ப்பால் - 1 கப்
உருளைக்கிழங்கு - 1/4 கப்
முந்திரி பேஸ்ட்- 2 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 5, உப்பு - தேவைக்கு.

செய்முறை: கடாயில் எண்ணை சேர்த்து அதில் பட்டை, ஏலக்காய், பிரிஞ்சு இலை, கிராம்பு தாளிக்கவும். பிறகு அதனுடன் வெங்காயம், இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். அதன் பிறகு சிக்கன், உருளைக்கிழங்கு, உப்பு மற்றும் இரண்டாம் தேங்காய்ப்பாலை சேர்த்து இரண்டு விசில் விட்டு இறக்கவும். பிறகு அதில் முந்திரி பேஸ்ட் மற்றும் முதலாம் தேங்காய்ப்பாலை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும். மற்றொரு கடாயில் எண்ணை சேர்த்து அதில் சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி இதில் சேர்க்கவும். சூடான ஆப்பம் மற்றும் இடியாப்பத்திற்கு சுவையா இருக்கும்.



2. சிக்கன் மலாய் சீக் கபாப் (Chicken Malai Seekh Kabab)

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 500 கிராம் (சுறு துண்டுகளாக வெட்டியது)
பிரெஷ் கிரீம் - 4 தேக்கரண்டி
உலர்ந்த வெந்தயம் இலைகள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சாட் மசாலா - தேவையான அளவு
கருப்பு மிளகு - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
பிரட் க்ரம்ஸ் - தேவையான அளவு

செய்முறை: சிக்கன், கிரீம், வெந்தய இலைகள், உப்பு, சாட் மசாலா, மிளகு, இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய பெரிய வெங்காயம் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் அந்த கலவையுடன் பிரட் க்ரம்ஸ்களை சேர்க்கவும். பின்னர் skewers எனப்படும் குச்சியில் எண்ணெய் தடவி, கலவையை skewers-ஐ பிடித்தவாறு வைக்கவும். பிறகு சீக் கபாப்ஸை வேகும் வரை அடுப்பில் காட்டவும். ஒருவேளை skewers இல்லையென்றால் நீங்கள் கபாப் போன்ற கலவையை கைகளால் வடிவமைத்து, 2 தேக்கரண்டி வெண்ணெய் அல்லது எண்ணெயைப் பயன்படுத்தி ஒரு பாத்திரத்தில் லேசான தீயில் சமைக்கலாம். சமைத்தவுடன் கபாப்ஸை புதினா மற்றும் கொத்தமல்லி சட்னியுடன் சூடாக பரிமாறலாம்.

ஆரஞ்சு தோலில் சூப்பரான துவையல் செய்யலாம் : குளிர்காலத்தில் சாப்பிட்டால் மிகவும் நல்லது..! எப்படி செய்வது?



3. சிக்கன் பாப்கார்ன் (Chicken Popcorn)

தேவையான பொருட்கள்:

சிக்கன் - கால் கிலோ
மிளகுப் பொடி - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய் பொடி - தேவையான அளவு
சில்லி மற்றும் கறிவேப்பிலை ஃப்ளேக்ஸ் - தேவைக்கு
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
முட்டை - ஒன்று
மைதா மாவு - கைப்பிடியளவு
கார்ன் மாவு - கைப்பிடியளவு

செய்முறை: எலும்பில்லாத சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மைதாவுடன் சோளமாவைக் கலந்து இரு பாகமாக பிரித்து அதில் ஒரு பாக மாவில் சிறிது உப்பு மற்றும் மிளகாய் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும். முட்டையை உடைத்து ஒரு கப்பில் ஊற்றி அடித்து வைக்கவும். பொடி வகைகளை சிக்கனில் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்கவும். பின்னர் நன்கு பிரட்டி ஊற வைக்கவும். பின் ஊற வைத்த சிக்கனை உப்பு சேர்க்காமல் கலந்து வைத்துள்ள மாவில் பிரட்டி எடுக்கவும். பிறகு அதனை முட்டையில் முக்கி எடுக்கவும். பின் உப்பு, மிளகாய் பொடி சேர்த்து கலந்த மாவில் பிரட்டி எடுத்து, அதிகமாக இருக்கும் மாவை சலித்து வெளியேற்றவும். பின் நன்கு காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான பாப்கார்ன் சிக்கன் தயார்.



4. டிராகன் ஃபயர் விங்ஸ் ( Dragon Fire Wings)

தேவையான பொருட்கள்:

சிக்கன் விங்ஸ் - 12
இஞ்சி - 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
பூண்டு - 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
சில்லி ப்ளேக்ஸ் - 1 1/2 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 8 அவுண்ஸ்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
வெங்காயம் - 1 (நறுக்கியது)
வெங்காயத் தாள் - 1
வெஜிடேபிள் ஆயில் - தேவையான அளவு

சிக்கனை ஊற வைக்க:

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 1/2
டீஸ்பூன் முட்டை - 1 (வெள்ளைக்கரு மட்டும்)
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை: முதலில் சிக்கனை விங்சை நன்கு சுத்தமாக கழுவி, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு பிரட்டி, தனியாக 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அந்த சிக்கனை எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து கிளறி, தக்காளி சாஸ், சோயா சாஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து, கலவையை கொதிக்க விட வேண்டும். கலவையானது கொதிக்க ஆரம்பித்ததும், தீயை குறைவில் வைத்து, அதில் பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.



 

5. சிக்கன் நிம்பு தனியா ஷோர்பா (Chicken Nimbu Dhaniya Ka Shorba)

தேவையான பொருட்கள்:

தண்ணீர் - 180 ml
சிக்கன் - 40 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
எலுமிச்சை - 2
கிரீம் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1/2 தேக்கரண்டி
சோளமாவு - 1 தேக்கரண்டி
உப்பு ஒரு சிட்டிகை

செய்முறை: 180 மில்லி தண்ணீரை எடுத்து மெதுவான தீயில் கொதிக்க வைக்கவும். தன்னீர் சூடானவுடன் சிறு சிறு துண்டுகளாக்கப்பட்ட சிக்கன் க்யூப்ஸ் சேர்க்கவும். சிறிது நேரம் கழித்து அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கொத்தமல்லி, பச்சை மிளகாய் பேஸ்ட், கிரீம், வெண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்க விடவும். பிறகு சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து, கலவை சூப் வடிவத்தில் கிடைக்க சிறுது சோளமாவினை நீரில் கலக்கி சேர்க்க வேண்டும். இதை ஒரு சூப் கிண்ணத்தில் மாற்றி கொத்தமல்லி இலைகளை தூவி, கிரீம் சேர்த்து பரிமாறலாம். இந்த குளிர்காலத்தில் இவ்வாறு சூடான சிக்கன் சூப்பை குடித்தால் மிகவும் அருமையாக இருக்கும்.
Published by:Sivaranjani E
First published: