இன்னைக்கு என்ன சமையல்..? குளிர்காலத்திற்கு ஏற்ற சத்தான காலை உணவுப் பட்டியல் இதோ...

இன்னைக்கு என்ன சமையல்..? குளிர்காலத்திற்கு ஏற்ற சத்தான காலை உணவுப் பட்டியல் இதோ...

காலை உணவு

குளிர் காலங்களில் ஏற்படும் ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்களிடம் இருந்து பாதுகாத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

  • Share this:
மழைக்காலமும், குளிர்காலமும் மனதுக்கு மிகவும் இதமானவையாக இருக்கும். ஆனால் இது உடல்நிலைக்கு உகந்ததா என்றால் கேள்விக்குறிதான். எனவே குளிர் காலங்களில் நாம் உட்கொள்ளும் உணவுகளை சிறந்த ஊட்டச்சத்து நிரம்பியவைகளாக தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். இந்த காலத்தில் எளிதில் ஜீரணமாகக் கூடிய மற்றும் சத்தான உணவை உட்கொள்வது மிகவும் சிறந்ததாகும். இவ்வாறான உணவு எடுத்துக்கொண்டால் உடல்நலன் பாதிப்பை தவிர்க்க முடியும்.

மேலும் மழைக்காலம், குளிர் காலங்களில் பல தொற்றுநோய்கள் தாக்கும். குளிர் காலங்களில் ஏற்படும் ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்களிடம் இருந்து பாதுகாத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். இக்காலங்களில் சருமம் மற்றும் தலைமுடி வறண்டு போகும். அதற்கேற்ப குளிர்காலங்களில் நம் உடல் மற்றும் மனநலனை கருத்தில் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். குறிப்பாக சாதாரண நாட்களை ஒப்பிடும்போது குளிர் காலங்களில் நாம் உண்ணும் உணவில் சில மாற்றங்களை கொண்டு வரவேண்டும். அந்த வகையில் குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய சில சத்தான காலை உணவுகளை பற்றி காண்போம்.

1. முட்டை ரொட்டி :

தேவையான பொருட்கள்:

முட்டை - 1
கோதுமை மாவு - 1 கப்
சிறிய வெங்காயம் - 1
கொத்தமல்லி இலைகள் - சிறிது
பச்சை மிளகாய் (விரும்பினால்) - 1
உப்பு - தேவையான அளவு
சமையல் எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை :

கோதுமை மாவினை பிசைந்து, சப்பாத்தியை திரட்டவும். தவாவை சூடாக்கவும். இதற்கிடையில், ஒரு கப்பில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். தவா சூடேறியதும், சப்பாத்தியை இருபுறமும் ஒரு நிமிடம் வேகா விடவும். சிறிது எண்ணெய் சேர்த்து பிரட்டவும். சப்பாத்தி உப்பி வரும் வேளையில் அதன் நடுப்புறத்தில் கத்தியை கொண்டு ஒரு பெரிய ஓட்டை போட்டு முட்டை கலவையை அதில் ஊற்றவேண்டும். பின்பு இருபுறமும் ரொட்டியை நனவு வேகவைத்து பின்னர் பரிமாறலாம். இது சப்பாத்தி ரொட்டிக்கிடையில் முட்டை சாண்ட்விச் போல் இருக்கும்.

2. கோபி பராத்தா

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கப்
தண்ணீர் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு.

Immunity | Health | மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹெல்த்தி லட்டுகள் - வீட்டிலேயே செய்யலாம்..

மசாலாவுக்கு:

காலிஃப்ளவர் (சிறிய பூக்களாக நறுக்கியது) - 1/2 கப்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கப்
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள், கரம் மசாலாத் தூள் - அரை டீஸ்பூன்
நெய் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். காலிஃப்ளவர் துண்டுகளை சுடுநீரில் போட்டு எடுத்துத் துருவவும். இதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கலந்து மசாலா செய்து கொள்ளுங்கள். சப்பாத்தி மாவை பெரிய உருண்டைகளாக்கி சற்று கனமான சப்பாத்திகளாகக் கைகளால் தட்டவும். அதன் நடுவே சிறிதளவு காலிஃப்ளவர் மசாலாவை வைத்து மூடி உருட்டவும். பிறகு உருண்டைகளை சப்பாத்திக்கல்லில் வைத்து லேசாக அழுத்தம் கொடுத்து சப்பாத்திகளாகத் தேய்க்கவும். தோசைக்கல்லில் நெய் தடவி, சப்பாத்திகளை போட்டு இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும். தால், தயிர்ப் பச்சடியுடன் பரிமாறவும்.



3. சோளப் பணியாரம்

தேவையான பொருட்கள்:

சோளம் - ஒரு கப்
உளுத்தம்பருப்பு - கால் கப்
வெந்தயம் கால் டீஸ்பூன்
வெங்காயம் - 1
கேரட் – ஒன்று (துருவவும்)
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)
நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்
எண்ணெய், ­உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

சோளத்துடன் வெந்தயம், உளுத்தம்பருப்பு சேர்த்து நன்றாகக் கழுவி ஆறு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து எடுக்கவும். மாவை எட்டு மணி நேரம் புளிக்கவிடவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். மாவுடன் வதக்கிய காய்கறிக் கலவை, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். பணியாரக்கல்லைச் சூடாக்கி, குழிகளில் சிறிதளவு எண்ணெய்விட்டு மாவை ஊற்றி, மூடி வேகவிடவும். பிறகு, திருப்பிப் போட்டு நன்றாக வெந்தவுடன் எடுக்கவும். சட்னியுடன் பரிமாறவும்.

4. கம்பு தோசை

தேவையான பொருட்கள்:

கம்பு - ஒரு கப்
உளுத்தம்பருப்பு - கால் கப்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

கம்புடன் உளுத்தம்பருப்பு, வெந்தயம் சேர்த்துக் கழுவி ஆறு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்து எடுத்து எட்டு மணி நேரம் புளிக்கவிடவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.



5. ராகி ரொட்டி

தேவையான பொருட்கள்:

ராகி மாவு (கேழ்வரகு மாவு) - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

ராகி மாவுடன் உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். பிறகு, சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து, கெட்டியாகப் பிசைந்து சிறிய உருண்டைகளாக்கவும். தோசைக் கல்லைக் காயவைத்து எண்ணெய் தடவி, மாவு உருண்டைகளை எடுத்து கைகளால் ரொட்டிகளாகத் தட்டவும். சிறிதளவு எண்ணெய்விட்டு இருபுறமும் நன்றாக வேகவைத்து எடுக்கவும்.

6. ராகி - உருளைக்கிழங்கு ரொட்டி

தேவையான பொருட்கள்:

ராகி மாவு (கேழ்வரகு மாவு), கோதுமை மாவு - தலா அரை கப்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
ஓமம், கரம் மசாலாத்தூள் - தலா 2 சிட்டிகை
உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவைத்து, தோலுரித்து மசிக்கவும்)
கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

ராகி மாவுடன் கோதுமை மாவு, மசித்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லித்தழை, மிளகாய்த்தூள், உப்பு, ஓமம், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதனுடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துப் பிசையவும். மாவை தேவையான அளவு எடுத்து உருண்டைகளாக்கி பராத்தாக்களாக தேய்க்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து எண்ணெய் தடவி, பராத்தாக்களைப் போட்டு, சிறிதளவு எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

 

 




உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
 
Published by:Sivaranjani E
First published: