ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சாப்பிடும்போது இடையில் தண்ணீர் குடிக்கலாமா..? எப்போது குடிப்பது சிறந்தது..?

சாப்பிடும்போது இடையில் தண்ணீர் குடிக்கலாமா..? எப்போது குடிப்பது சிறந்தது..?

தண்ணீர்

தண்ணீர்

சாப்பாட்டுக்கு முன் கண்டிப்பாக தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவ ரீதியாக எந்தக் கட்டாயமும் கிடையாது. சிலர், சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பதால் உண்ணும் உணவின் அளவு குறைந்துவிடும் என்கின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தினம்தோறும் செய்யும் சிறிய விஷயங்கள், நம் அன்றாட நடைமுறையாக மாறி, வாழ்வியல் பழக்க வழக்கங்களாக மாறிவிடுகின்றன. நாம் பின்பற்றும் வாழ்வியல் பழக்க வழக்கங்கள் சில, நம்முடைய சுகாதார மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு காரணமாகவும், தீர்வாகவும் மாற வாய்ப்புள்ளது.

  அதில் ஒன்றுதான், சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் அருந்துவது, சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பது மற்றும் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது. இந்த விஷயங்களில் பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் நாள்தோறும் இருந்த வண்ணம் உள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தீர்வை பரிந்துரைக்கும் நிலையில் ஆயுர்வேதம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

  சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் :

  சாப்பாட்டுக்கு முன் கண்டிப்பாக தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவ ரீதியாக எந்தக் கட்டாயமும் கிடையாது. சிலர், சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பதால் உண்ணும் உணவின் அளவு குறைந்துவிடும் என்கின்றனர். அதிலும் குறிப்பாக, குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால், அவர்கள் வழக்கமாக சாப்பிடும் அளவு குறைவதற்கான வாய்ப்பு உள்ளது என்கின்றனர்.

  மருத்துவர்களும் உடல் எடையை குறைப்பதற்கு சாப்பிடுவதற்கு முன்பு குறிப்பிட்ட அளவு தண்ணீரை பருகுமாறு பரிந்துரைக்கின்றனர். ஆனால் ஆயுர்வேத முறைப்படி சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் உடல் பலவீனம் அடைவதற்கும், மயக்க மடைவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறுகிறது.

  Also Read : உடல் பருமனாக இருப்பது எதுவரை ஆரோக்கியமானது - எப்போது ஆபத்தாக மாறுகிறது?

  சாப்பாடுக்கு இடையே தண்ணீர் :

  உணவருந்தும் போது தாகம் அல்லது விக்கல் எடுத்தாலோ குறைந்த அளவிலான தண்ணீர் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். உணவருந்தும் போது குளிர்ந்த நீர் குடிப்பதால் செரிமான மண்டலத்தில் என்சைம் செயல்திறன் குறைத்து, உடலில் வேண்டாத நச்சுக்கள் அதிகமாக உருவாகும் அபாயமும் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

  ஆனால், ஆயுர்வேத முறைப்படி உணவருந்தும்போது, குறைந்த நீரை உறிஞ்சிக் குடித்தால் செரிமான மண்டலத்துக்கு நல்லது என கூறப்பட்டுள்ளது. உணவுகளை உடைப்பதற்கு நீர் உதவியாக இருக்கும் என ஆயுர்வேதம் கூறுகிறது.

  சாப்பாட்டுக்கு பின் தண்ணீர் :

  ஆயுர்வேத முறையில் உணவு உட்கொண்ட உடனேயே தண்ணீர் உட்கொள்வதால், சீரான செரிமானம் தடைப்பட்டு உடல்பருமன் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. உணவருந்திய பிறகு 30 நிமிட இடைவேளைக்கு பின் தண்ணீர் குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

  உணவு சாப்பிட்ட 1 - 2 மணி நேரத்திற்கு பிறகு நீங்கள் தாகத்திற்கு ஏற்ப எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் குடிக்கலாம். உணவருந்தும் போது சோடா பானம், காபி போன்றவற்றை பருக வேண்டாம். இது உடல்நலத்திற்கு நல்லதல்ல.

  Also Read : டேஸ்ட் மட்டுமல்ல.. ஆரோக்கியமும்.. வெல்லத்துல இத்தனை நன்மைகள் இருக்கா?

  ஆலோசனை :

  சிறந்த வளர்சிதை மாற்றம் மற்றும் செரிமானத்திற்காக எப்போதும் சூடான நீரை உணவுடன் குடிக்கலாம். உலர்ந்த இஞ்சி தூள், வெட்டிவர் வேர்கள், பெருஞ்சீரகம் விதைகளையும் உணவுக்கு இடையில் உட்கொள்ளும் தண்ணீரில் சேர்க்கலாம் என ஆயுர்வேத நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Drinking water, Food