பொங்கலில் இத்தனை வகைகளா..? நீங்க இதில் எந்த பொங்கல் வைக்கப் போறீங்க..?

பொங்கலில் இத்தனை வகைகளா..? நீங்க இதில் எந்த பொங்கல் வைக்கப் போறீங்க..?

பொங்கல்

பொங்கல் பண்டிக்கைக்கு சில நாள்களே உள்ள நிலையில், விதவிதமான பொங்கல் எப்படி செய்யலாம் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

 • Share this:
  பொங்கல் கொண்டாட தமிழ்நாடு தயாராகிவிட்டது. எங்கும் கரும்புகளும் , மண் பானைகள், புத்தாடைகள் என மகிழ்ச்சி களைபூண்டுள்ளது. பொங்கல் அன்று சூரிய பகவானுக்கு பொங்கல் செய்து படைப்பதுதான் சிறப்பு. அப்படி பொங்கலில் எத்தனை வகை பொங்கல் உள்ளன என்று பார்க்கலாம். 

  சர்க்கரைப் பொங்கல்   தேவையான பொருட்கள் 

  பச்சரிசி - 1 கப்

  பாசி பருப்பு - கால் கப்

  தண்ணீர் - 4 கப்

  ஏலக்காய் - 2

  முந்திரி, திராட்சை - கால் கப்

  வெல்லம் - 1 கப்

  செய்முறை :

  பச்சரிசி மற்றும் பாசிபருப்பை சேர்த்துக் கழுவிவிடவும். குக்கரில் போட்டு நான்கு கப் தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வரும் வரை காத்திருக்கவும்.

  வெல்லத்தை உருக்க வேண்டும். பச்சரிசி வெந்ததும் உருக்கிய வெல்லத்தை அதில் ஊற்றிக் கிளறவும். ஏலக்காய் பொடி சேர்க்கவும்.பின் மிதமான சூட்டில் வைத்து கிளறிக் கொண்டே இருந்தால் வெல்லம் நன்குக் கலந்துவிடும்.

  இறுதியாக மூன்று ஸ்பூன் நெய் விட்டு கால் கப் முந்திரி, திராட்சை சேர்த்து வதக்கி பொங்கலில் கொட்டி கலக்கவும்.

  சர்க்கரை பொங்கல் தயார்.

  கோதுமைப் பொங்கல்  தேவையான பொருட்கள்

  சம்பா கோதுமை (உடைத்தது) - 1 கப்
  பாசிப் பருப்பு 1/4 கப்
  வெல்லம் - 1 கட்டி ( உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கூட்டிக் கொள்ளலாம்)
  ஏலக்காய் பொடி - 1/4 மே.கரண்டி
  காய்ந்த திராட்சை - 4
  முந்திரி மற்றும் பாதாம் - 3
  நெய் - 1 மே.கரண்டி
  தேங்காய் துருவியது - 1 மே.கரண்டி

  செய்முறை

  ஒரு கடாயில் எண்ணெய் இல்லாமல் உடைத்த சம்பா கோதுமை மற்றும் பாசிப் பருப்பு இரண்டையும் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.

  3 கப் நீர் ஊற்றி சம்பா கோதுமை மற்றும் பாசிப் பருப்பை குழையும் வரை வேக விடவும். குக்கரில் 2 விசில்வரை விடலாம்.

  இறுதியாக, கடாயில் நெய் ஊற்றி சிறு தீயில் பாதாம்,முந்திரி, திராட்சை ஆகியவற்றை 1 நிமிடம் வதக்கவும். அதில் துருவிய தேங்காயை போட்டு அரை நிமிடம் வதக்கவும்.

  இதை அப்படியே வேக வைத்த கோதுமை , பருப்புக் கலவையில் ஊற்றி நன்குக் கிளரவும்.

  கோதுமைப் பொங்கல் ரெடி.

  சிகப்பரிசி பொங்கல்  தேவையான பொருட்கள்

  சிகப்பரிசி - 1 கப்

  கருப்பட்டி வெல்லம் (அரைத்தது) - 4 மே.கரண்டி

  ஏலக்காய் பொடி - 1/4 மே.கரண்டி

  காய்ந்த திராட்சை - 4

  முந்திரி மற்றும் பாதாம் - 3

  தேங்காய் துருவியது - 2 மே.கரண்டி

  நெய் - தேவையான அளவு

  செய்முறை

  சிகப்பரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். 6 கப் நீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதில் ஊற வைத்த அரிசியை போட்டு நன்கு குழையும் வரை வேகவிடவும். குக்கரில் 3 அல்லது 4 விசில் வரை விடவும்.

  இறக்கியதும்  மத்து வைத்து குழைந்த பதத்திற்கு கடையவும்.

  பின் ஒரு கடாயில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி கருப்பட்டி வெல்லம் போட்டு கரையும் வரை கொதிக்க விடவும். வெல்லப் பாகு பதம் வரும் வரை கிளரவும்.

  பின் அதில் தேங்காய் துருவலைப் போட்டு 3 நிமிடங்கள் கொதிக்கவிட்டு குழைந்த அரிசியில் ஊற்றவும்.

  கடைசியாக ஒரு கடாயில் நெய் ஊற்றி திராட்சை, ஏலக்காய், முந்திரி போட்டு வதக்கி பொங்கலில் ஊற்றி நன்குக் கிளரவும்.

  சிக்கபரிசி பொங்கல் தயார்.

  ஜவ்வரிசி பொங்கல்  தேவையான பொருட்கள்

  ஜவ்வரிசி - 300 கிராம்
  வெல்லம் 200 கிராம்
  பால் - 200 மி.லி
  நெய் - 50 கிராம்
  முந்திரி - 10
  காய்ந்த திராட்சை - 5
  ஏலக்காய் - 5

  செய்முறை

  பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு ஜவ்வரிசையைப் போடவும்.

  ஜவ்வரிசி நன்றாக வெந்ததும், ஏலக்காய் வெல்லம் நன்கு தட்டி அதில் போடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து நன்கு கிளறவும்.

  ஜவ்வரிசி கெட்டிப் பதத்திற்கு வந்ததும் பால் மற்றும் நெய் சேர்க்கவும்.

  ஒரு கடாயில் தேவையான அளவு நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வதக்கி ஜவ்வரிசியில் போடவும்.

  ஜவ்வரிசி பொங்கல் தயார்.

  கற்கண்டுப் பொங்கல்  தேவையான பொருட்கள்

  அரிசி - 1 கப்
  பால் - 2 கப்
  தண்ணீர்- 1 கப்
  கற்கண்டு - 4 கப் (அரைத்தது)
  முந்திரி - 3
  நெய் - 2 மே.கரண்டி
  ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை
  காய்ந்த திராட்சை - 3

  செய்முறை

  பாலில் தேவையான அளவு நீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
  அதில் அரிசியை கொட்டி குழைந்து வரும்வரை வேக வைக்க வேண்டும். குக்கரில் வைப்பதாக இருந்தால் 3 விசில் வரை வைக்க வேண்டும்.

  பின் அதில் அரைத்த கற்கண்டு சேர்த்து நன்கு கிளரவும். பின் சிறிய தீயில் 3 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும்.

  இறுதியாக ஒரு கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து வதக்கி இறக்கிய பொங்கலில் சேர்த்து நன்றாக கலக்கவும்.

  தற்போது கற்கண்டுப் பொங்கல் ரெடி.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sivaranjani E
  First published: