ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும், உடலுக்கு நல்ல ஊட்டச்சத்து வழங்கும் காரணங்களுக்காகவும் வெஜிடபிள் ஜூஸை உங்கள் டயட்டில் சேர்க்கக்கோரி மருத்துவர்கள் எப்போதும் பரிந்துரைப்பார்கள். பொதுவாக வெஜிடபிள் ஜூஸ்-கள் ருசியானவை மட்டுமல்ல, நல்ல அளவிலான ஊட்டச்சத்தையும் அளிக்கின்றன.
அந்த வகையில் சமீபத்திய ஆய்வில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆராயப்பட்டன. பீட்ரூட் ஜூஸ் தினமும் குடிப்பதால் அது மூளையின் செயல்பாட்டை மேம்மபடுத்துவதோடு உங்கள் இரத்த நாளங்களை நல்ல நிலையில் வைக்க உதவுகிறது. இதனால் வயதான பிறகும் ஆரோக்கியமாக இருக்க இவை உதவுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உங்கள் தினசரி டயட்டில் பீட்ரூட் சாற்றை தினமும் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாக காண்போம்.
எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த புதிய ஆய்வு, ‘ரெடாக்ஸ் பையாலஜி’ (Redox Biology) என்ற இதழில் வெளியிடப்பட்டது. ஆய்வுக்காக ஆரோக்கியமான உடல்நிலையை கொண்ட 26 வயதானவர்கள் இரண்டு முறை நடைபெற்ற பத்து நாள் சப்ளிமெண்டேஷன் காலங்களில் பங்கேற்றனர். முதல் சப்ளிமென்ட் களங்களில் அவர்களுக்கு நைட்ரேட் நிறைந்த பீட்ரூட் சாறு வழங்கப்பட்டது. மற்றொரு சப்ளிமென்ட் களங்களில் நைட்ரேட் இல்லாத மருந்துப்போலி சாறு வழங்கப்பட்டது. மேலும், ஆய்வில் பங்கேற்றவர்கள் ஒரு நாளுக்கு இரண்டு முறை இந்த ஜூஸை குடித்தனர்.
ஆய்வின் முடிவுகள் அவர்களில் நல்ல வஸ்குலர் மற்றும் அறிவாற்றல் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய அதிக அளவு பாக்டீரியாக்களையும், நோய் மற்றும் அழற்சியுடன் தொடர்புடைய குறைந்த அளவு பாக்டீரியாக்களையும் காண்பித்தன. பீட்ரூட் சாற்றை தினசரிக் குடித்தபின் ஆய்வில் பங்கேற்றவர்களில் சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் சராசரியாக ஐந்து புள்ளிகள் (mmHg) குறைந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
பொதுவாக, வயதானவர்கள் குறைந்த நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியைக் கொண்டிருக்கிறார்கள். இது மிகக்குறைவான வஸ்குலர் (இரத்த நாளம்) மற்றும் அறிவாற்றல் (மூளை) ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பீட்ரூட் மற்றும் லெட்டியூஸ், கீரை, செலரி உள்ளிட்ட பிற உணவுகளில் கனிம நைட்ரேட் மற்றும் பல வாய்வழி பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளன. இந்த இரண்டு மூலக்கூறுகளும் சேர்ந்து நைட்ரேட்டை நைட்ரிக் ஆக்சைடாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது இரத்த நாளங்கள் மற்றும் நரம்பியக்கடத்தலை (neurotransmission) கட்டுப்படுத்த உதவுகிறது.
ஆர்மேனிய வெள்ளரிக்காயின் மருத்துவ குணங்களைப் பற்றிய தெரியுமா..? வெயில் காலத்தில் தினமும் சாப்பிடலாம்..!
இது குறித்து எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தின் முன்னணி எழுத்தாளர் பேராசிரியர் அன்னி வான்ஹடலோ கூறியதாவது, "ஆரோக்கியமான வயதானவர்களுக்கு முக்கியமான தாக்கங்களைக் கொண்டிருக்கும் இந்த கண்டுபிடிப்புகள் குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். முந்தைய ஆய்வுகள் இளம் மற்றும் வயதானவர்களின் வாய்வழி பாக்டீரியாக்களையும், ஆரோக்கியமான மக்களையும் நோய்வாய் உள்ளவர்களோடு ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. ஆனால் நைட்ரேட் நிறைந்த உணவை இந்த வழியில் சோதித்துப் பார்ப்பது இதுவே முதல்முறை” என்று கூறினார்.
வான்ஹடலோ மேலும் கூறுகையில், “ பீட்ரூட் போன்ற நைட்ரேட் நிறைந்த உணவுகளை டயட்டில் சேர்ப்பதன் மூலம் வெறும் பத்து நாட்களுக்குள் வாய்வழி நுண்ணுயிரியை (mix of bacteria) சிறப்பாக மாற்ற முடியும் என்று எங்கள் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த ஆரோக்கியமான வாய்வழி நுண்ணுயிரியை நீண்ட காலத்திற்கு பராமரிப்பது வயதானவுடன் தொடர்புடைய எதிர்மறை வஸ்குலர் மற்றும் அறிவாற்றல் மாற்றங்களை மெதுவாக்கும்.
வயதான காலத்தில் அறிவாற்றல் வீழ்ச்சியை தாமதப்படுத்த பீட்ரூட் போன்ற காய்கறிகள் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதை நன்கு புரிந்துகொள்ளவும், வாய்வழி பாக்டீரியா மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்புகளை ஆராயவும் எக்ஸிடெர் மருத்துவப் பள்ளியின் சகாக்களுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்" என்றுக் கூறினார். ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரியின் நன்மைகள் குறித்து நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் வாய்வழி நுண்ணுயிர் சமூகத்தைப் பற்றி மிகக் குறைவாகவே அறியப்படுகிறது. இந்த ஆய்வு உடலில் உள்ள நைட்ரேட்டை செயல்படுத்துவதில் காய்கறி நிறைந்த டயட் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை விளக்குகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.