முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா? அதுவும் கோடை காலம்தான் மாங்கனிகளுக்கான சீசன் என்ற நிலையில், இந்த காலகட்டத்தில் தான் நாம் ஆசை தீரும் வகையில் மாம்பழங்களை சாப்பிட முடியும்.
மாம்பழத்தை நறுக்கி நேரடியாக அல்லது ஜூஸ் அடித்து நீங்கள் சாப்பிட்டிருப்பீர்கள். அதே சமயம், இந்த மாம்பழத்தைக் கொண்டு இரண்டே நிமிடங்களில் கேக் செய்யவும் முடியும். பிரபல சமையல் கலை பிளாகராக உள்ள சிவேஷ் பாடியா இதுகுறித்த தகவல்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தேவையான பொருட்கள்
கால் கப் அளவுக்கு மாம்பழக் கூழ், 3 டேபிள் ஸ்பூன் அளவு பால், 2 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய், கால் டீ ஸ்பூன் அளவு வெண்ணிலா எசன்ஸ், கால் கப் சர்க்கரை, கால் கப் மைதா, கால் டீ ஸ்பூன் பேக்கிங் பவுடர், கால் டீ ஸ்பூன் பேக்கிங் சோடா ஆகியவை.
கேக் தயாரிக்க எடுத்துக் கொள்ளும் எண்ணெய் வெஜிடஃபிள் எண்ணெய்-யாக இருக்க வேண்டும். அதில் தான் தனித்த மனம், சுவை எதுவும் இருக்காது. வெள்ளை சர்க்கரை, நாட்டு வெல்லம், பனை வெல்லம் போன்ற எதையும் சேர்த்துக் கொள்ளலாம். சர்க்கரை நோய் பிரச்சினை இருப்பவர்கள் சுகர் ஃப்ரீ பவுடரையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
செய்முறை
மைக்ரோவேவ் மக் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். அதில் மாம்பழ கூழ், பால், எண்ணெய் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். கைகளால் கலக்காமல் சிறு கரண்டி அல்லது ஃபோர்க் வைத்து கலக்கவும்.
இப்போது சர்க்கரை, மைதா, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா போன்ற மற்ற பொருட்களை சேர்த்து கலக்கவும்.
கட்டியாகாமல் தடுக்கும் வகையில் மைதா, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா ஆகியவை நன்றாக கரையும் அளவுக்கு கலக்கி வைக்கவும்.
மைக்ரோ வேவ் அடுப்பில் வைக்கவும்
இப்போது கலக்கி வைத்துள்ள கலவையை எடுத்து, மைக்ரோவேவ் ஓவன் உள்ளே வைக்கவும். சுமார் 2 நிமிடம் சூடேற்றிய பிறகு உங்களுக்கான மாம்பழ கேக் தயாராகிவிடும்.
தேங்காய் பால் பாயாசம் செய்வது எப்படி தெரியுமா?
கொஞ்சம் அழகூட்டலாம்
மாம்பழ கேக்-ஐ பிறருக்கு பரிமாறுவதற்கு முன்பாக, மற்றவர்களின் கண்களை கவரும் வகையில், அதை கார்னிஷ் செய்யலாம். க்ரீம், சாக்லேட் சாஸ், மாங்காய் துண்டுகள் அல்லது துருவல்கள், நட்ஸ், தேன் அல்லது உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற ஏதோ ஒன்றை கேக் மீது தூவி அழகூட்டலாம்.
எப்படி பரிமாறுவது
இந்த கேக்-ஐ நீங்கள் சூடாக அல்லது கூலிங்காக என எப்படி வேண்டுமானாலும் பரிமாறலாம். சமையல் அல்லது பேக்கிங் செய்வதில் நீங்கள் மிகுந்த விருப்பம் கொண்டவர்கள் என்றால், இதை நீங்கள் இரண்டே நிமிடங்களில் தயார் செய்து விட முடியும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.