ஆறு சுவைகள் உண்டு என்று அனைவருக்குமே தெரியும். அதனால் தான் விருந்து உணவுகள் அறுசுவை உணவு என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, நாம் தினமும் சாப்பிடும் உணவில் ஆறுசுவைகளும் இருப்பது ஆரோக்கியமாக இருப்பதற்கு வழிவகுக்கும் என்றும் ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது. ஆனால், ஒவ்வொருவருக்கும் ஒன்று அல்லது இரண்டு சுவைகள் அதிகம் பிடிக்கும் அல்லது சில சுவைகள் பிடிக்காது. உங்கள் உடல் மற்றும் மனதின் கட்டமைப்பு நீங்கள் விரும்பும் மற்றும் மறுக்கும் சுவை ஆகியவற்றோடு தொடர்புடையது என்று ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது.
ஒரு சிலருக்கு காரமான உணவுகள் பிடிக்கும், சிலர் இனிப்பு பிரியராக இருப்பார்கள், ஒரு சிலர் உணவு புளிப்பாக இருந்தால் தான் சாப்பிடவே செய்வார்கள். இதை போல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுவையான உணவு மிகவும் பிடிக்கும். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து ஆற்றல்களின் வெவ்வேறு கலவை ஆயுர்வேத உடல்கூறுகளான வாதம், பித்தம் மற்றும் கபம் என்று கூறப்படுகிறது. இந்த மூன்று பிரிவுகளும் ஒவ்வொருவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பிரதிபலிக்கிறது என்று ஆயுர்வேதம் வகைப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு சுவையிலும் இந்த ஆற்றல்கள் குறிப்பிட்ட அளவில் அதிகமாக காணப்படுகின்றன.
இனிப்புச்சுவை
இனிப்புச்சுவை என்பது நிலம் மற்றும் நீர் ஆகியவற்றின் கலவையாகும். இது உங்கள் உடலில் வாதம் மற்றும் பித்தம் ஆகியவற்றை பேலன்ஸ் செய்கிறது. ஆனால் இனிப்புச்சுவை அதிகமாக சாப்பிடும் பொழுது உடலில் கபம் அதிகரிக்கிறது. ஆயுர்வேத கூற்றுப்படி இனிப்புச் சுவை உடலுக்கு புத்துணர்ச்சியையும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது. நரம்புகளை அமைதிப்படுத்தி, திசுக்களை ஆரோக்கியமாக்கவும் உதவுகிறது. இனிப்பான பழங்கள், இயற்கையான இனிப்புகள், பால் மற்றும் தானியங்கள் ஆகியவற்றில் இனிப்பு சுவை அதிகமாக உள்ளது. அதிகமாக இனிப்பு சுவையுடைய உணவுகளை சாப்பிடும் பொழுது எடை அதிகரிப்பு, உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவை ஏற்படலாம்.
புளிப்புச்சவை
புளிப்புச்சுவை நீர் மற்றும் நெருப்பு ஆற்றலைக் கொண்டுள்ளது. இது பித்தம் மற்றும் கபம் ஆகியவற்றை அதிகரித்து, வாதத்தை குறைக்கிறது. புளிப்புச் சுவையுள்ள பழங்கள், காய்கறிகள், தயிர் மற்றும் புளிக்க வைக்கப்பட்ட மாவு ஆகியவை உங்கள் பசியை தூண்டும். இது செரிமானத்தை மேம்படுத்தவும், உணர்வுகளை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. எலுமிச்சை, புளி, மாங்காய், வினிகர், ஊறுகாய் ஆகியவை புளிப்புச்சுவை உணவுகளாகும்
உப்புச்சுவை
நிலம் மற்றும் நெருப்பின் கலவையாக உப்புச்சுவை இருக்கிறது. உப்பு சுவை உங்களில் வாதத்தை குறைத்து, பித்தம் மற்றும் கபத்தால் அதிகரிக்கிறது. உப்புச் சுவை என்பது வேறு உப்பு என்பது வேறு. உப்புச்சுவை உடலில் நீர் சத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது. எனவே இது செரிமானத்தையும் அதிகரிக்கிறது. கீரை வகைகள், கடல் உப்பு, இளநீர் ஆகியவற்றில் இயற்கையாகவே உப்புச்சுவை நிறைந்துள்ளது.
கசப்புச்சுவை
இந்தச்சுவையில் காற்று மற்றும் ஆகாயத்தின் தன்மைகள் உள்ளன. இது ஆறு சுவைகளிலே மிகவும் அமைதியான சுவை என்று கூறப்படுகிறது. உடலில் பித்தமும் கபமும் அதிகமாக இருப்பவர்களுக்கு கசப்பு உணவுகள் ஆரோக்கியமாக இருக்கும். இவை இயற்கையான கழிவு நீக்கும் தன்மைகொண்டது. அதுமட்டுமின்றி உடலுக்குள் சேர்ந்திருக்கும் நச்சுத் தன்மையையும் நீக்குகிறது. காஃபி, சாக்லேட், வெந்தயம், பாகற்காய் மற்றும் வேம்பு ஆகியவை கசப்புச்சுவை நிறைந்த உணவுகள்.
காரம்
காரம் என்பது நெருப்பு மற்றும் காற்றின் கலவையாகும். இது பசி, இரத்த ஓட்டம் மற்றும் செரிமானத்தை அதிகரிக்கிறது. கபம் அதிகமாக இருப்பவர்களுக்கு காரம் அதிகமாக சாப்பிடுவது பலன் அளிக்கும். மிளகு, பூண்டு, வெங்காயம், இஞ்சி ஆகியவை இயற்கையாகவே அதிகமான காரத்தன்மை உள்ள பொருட்கள்.
துவர்ப்பு
காற்று மற்றும் நிலத்தின் தன்மைகள் கொண்ட சுவை துவர்ப்பு சுவை ஆகும். இது ஒருவரை அமைதியாக்க உதவுகிறது. துவர்ப்பு சுவை அதிகமாக சாப்பிடுவதால் அசிடிட்டி மற்றும் வயிறு உப்பசம் உண்டாகும். அன்னாசி, நாகப்பழம், மாதுளை, சேப்பங்கிழங்கு, பழுக்காத வாழைப் பழம் ஆகியவை துவர்ப்பு சுவை உணவுகளாகும்.
மேலும் படிக்க... இந்த 5 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு இரத்த சோகை உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.