பாகற்காயை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலமாக உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகள் அனைத்தும் நீக்கப்படுகிறது. இதனால் இதய நோய் வருவதைத் தடுக்கும். பாகற்காய் ஆஸ்துமா, இருமல் போன்றவற்றை தீர்ப்பதில் மிகச் சிறந்த நிவாரணியாக இருக்கிறது. உணவில் பாகற்காயை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள பித்தம் குறையும். இவ்வளவு நன்மைகள் நிறைந்த பாகற்காயை ஸ்டப்டு செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம்...
தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 5
பெரிய வெங்காயம் - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பூண்டு - 6 பல்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
புளி - சிறிய துண்டு
கடலைமாவு - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 4 குழிக்கரண்டி
தனியாத்தூள் – தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.

பாகற்காய்
செய்முறை:
1. முதலில் பாகற்காயை நடுவில் வகுந்து விதைகளை அகற்றி விடுங்கள்.
2. பின்னர் உள்பகுதியில் லேசாக உப்பு தடவி அரைமணி நேரம் கழித்து நன்றாக கழுவி சுத்தம் செய்யுங்கள். கசப்பு நீங்கிவிடும்.
3. வெங்காயத்தை சிறிதாக வெட்டிக் கொள்ளுங்கள். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பூண்டு போட்டு தாளித்து வெங்காயம், மஞ்சள்தூள், உப்பு போட்டு வதக்குங்கள்.
4. வெங்காயம் பொன்னிறமானதும், புளியை தண்ணீரில் கரைத்து ஊற்றுங்கள். பின் கடலைமாவு, மிளகாய்த்தூளைப் போட்டு நன்றாக கிளறி, கொத்தமல்லித் தழையை போட்டு இறக்கி ஆறவைத்துக் கொள்ளுங்கள்.
5. இந்த கலவையை பாகற்காயின் உள்ளே வைத்து நூலால் தனித்தனியாக கட்டி விடுங்கள்.
6. வாணலியை மிதமான தீயில் வைத்து மீதமுள்ள எண்ணெயை ஊற்றி அதில் பாகற்காயை போட்டு வேகவையுங்கள். 15 நிமிடங்கள் வேக வேண்டும்.
7. பின்னர் 3 நிமிடத்துக்கு ஒருமுறை பாகற்காய்களை திருப்பி விட வேண்டும். பச்சைநிறம் மங்கி வெந்ததும் இறக்குங்கள். இப்போது ஸ்டப்டு பாகற்காய் ரெடி...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.