நூடுல்ஸ் என்றால் யாருக்குதான் பிடிக்காது? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நூடுல்ஸ் என்றால் முகம் சுளிப்பவர்களே இருக்க மாட்டார்கள். ஆனால் நாம் கடைகளில் வாங்கும் பிரபல நூடுல்ஸ்கள் உடம்பிற்கு கெடுதல் என்பதை தெரிந்துகொண்டே நம்மில் பலர் அதனை அவ்வப்போது வாங்கி சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். அவை செய்வதற்கு எளிதானவை. அதன் தோற்றத்திற்கும், மசாலா சுவைக்கும் பலர் ‘அடிக்ட்’ என்றே சொல்லலாம். ஆனால் அதில் ஒளிந்திருக்கும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய விஷயங்கள் ஏராளம். அதிலும் மைதாவால் தயாரிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் தவிர்க்க வேண்டியவைதான்.
இப்படி தீங்கு என்று தெரிந்துகொண்டே அதன் சுவைக்காக சாப்பிடுவது அபத்தம். எனவே, இனி அதுபோன்ற நூடுல்ஸ்களுக்கு ’குட் பை’ சொல்லிவிட்டு வீட்டிலேயே சிறுதானிய நூடுல்ஸை செய்து சாப்பிடலாம். இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் பிடித்த உணவாக மாறிவிடும். அதிலும் காரம் சற்று தூக்கலாக செய்தால் பிரமாதமாக இருக்கும்! இது உடம்பிற்கும் சுவைக்கும் நன்மை பயக்கும் ஆரோக்கியமான ஒரு உணவாகும்.
சிறுதானிய உணவுகளுள் (Millets) கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி போன்றவை அடங்கும். இவை சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காக்கின்றன. சிறுதானியங்களில் அதிகளவு புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், அயர்ன், கால்சியம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளன. லோ-கார்ப் என்று சொல்லக்கூடிய குறைந்த காபோஹைட்ரேட் இருப்பதால் உடல் பருமனில் இருந்து நம்மை காக்க உதவும். இந்த நூடுல்ஸ் வகைகள் ரசாயனங்கள் எதுவும் கலக்கப்படாமல் இயற்கையான வகையில் தயாரிக்கப்படுகின்றன. இதில் குதிரைவாலி நூடுல்ஸ், ராகி நூடுல்ஸ், சிகப்பரிசி நூடுல்ஸ் போன்ற வகைகள் உள்ளன. இந்த நூடுல்ஸை நீங்கள் நிச்சயம் குற்ற உணர்ச்சியின்றி சாப்பிடலாம். இவை ஆர்கானிக் ஸ்டோர்ஸ்களில் எளிதில் கிடைக்கக்கூடியவை.
சத்தான சிறுதானிய வெஜிடபிள் நூடுல்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:
ராகி நூடுல்ஸ் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 கப்
கேரட் - 1/2 கப்
வெங்காயத்தாள் - ஒரு டேபிள் ஸ்பூன் அளவு
நீள வாக்கில் நறுக்கிய பச்சை குடை மிளகாய்- 3/4 கப்
முழு பூண்டு- 1 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
முட்டைகோஸ் - சிறிய துண்டு
எண்ணெய் - ஒரு டீ ஸ்பூன் அளவு
வெண்ணெய்- ஒரு டீ ஸ்பூன் அளவு
மிளகுத்தூள்- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியில் பாதியளவு தண்ணீர் ஊற்றி அதனை கொதிக்கும் நிலைக்கு கொண்டுவரவும். அதில் சிறிதளவு உப்பு மற்றும் கால் டீ ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள்
ராகி நூடுல்ஸை பிரித்து, அதனை கொதிக்கும் நீரில் அப்படியே சேர்க்கவும். 5 நிமிடங்கள் வரை அப்படியே விட்டுவிடுங்கள்
பின், தண்ணீரை வடிகட்டிவிட்டு அதனை சற்று உதிர்த்து வைத்துக் கொள்ளவும்
மற்றொரு வாணலியில், சிறிதளவு எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து கொள்ளவும். அதில் நறுக்கிய பூண்டை சேர்த்து சிவக்கும் வரை வதக்கிவிட்டு, பெரிய வெங்காயம், கேரட், குடை மிளகாய், வெங்காயத்தாள், முட்டைகோஸை பொடியாக நறுக்கியதை சேர்த்து வதக்கவும்
அடுத்து அதில் சிறிதளவு மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு அதில் வேகவைத்த ராகி நூடுல்ஸ் சேர்த்து கிளறவும்
மசாலா அனைத்தும் நூடுல்ஸில் சேர்ந்ததும் அதில் இன்னும் சிறிதளவு வெங்காயத்தாள், மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் சூப்பரான சுவையான ராகி வெஜ் நூடுல்ஸ் ரெடி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Healthy Food, Healthy Life, Millets, Millets Food