Home /News /lifestyle /

நாம் உண்ணும் காய், கனிகளை முடிவு செய்வது யார்?

நாம் உண்ணும் காய், கனிகளை முடிவு செய்வது யார்?

டாக்டர். கு.சிவராமன்

டாக்டர். கு.சிவராமன்

உணவே மருந்து, என்பதுதான் நம் முன்னோர்களின் கருத்து.  அன்றைக்கு அவர்கள் உண்ட ஊட்டச்சத்து மிக்க உணவுதான் இன்றைக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக உள்ளது. ஆனால் இன்றைய தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் மாறிவரும் உணவுப்பழக்கம்தான்.

அதிலும் இப்போது நாம் உண்ணும்  பல காய்கறிகளில் அனைத்து சத்துகளும் கிடைக்கும் என்று கூற முடியாது. ஒரு நாட்டிற்கு உணவும் மருந்தும் சரியாக அமையவில்லை என்றால் அது அந்நாட்டின் மொழி, கலாச்சாரம், பண்பாடு மற்றும் வரலாற்றை அழித்துவிடும் என்பதுதான் நம் தமிழ் அறிஞர்களின் கருத்தாக உள்ளது. நாம் தினமும் உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்ளும் முக்கியமான ஒன்று காய்கறிகள். அவை எங்கிருந்து வருகின்றது, யார் மூலமாக வருகிறது, என்பதெல்லாம் நமக்கு தேவையில்லாத ஒன்றாகிவிட்டது. மேலும் அவை சத்தான காய்களா? என்பது பற்றியும் நாம் கவலைபடுவதில்லை. நாம் என்ன காய்கறிகளை உண்ண வேண்டும் என்பதை நாமே தீர்மானிப்பது போய் என்ன காய்கறிகள் கிடைக்கிறதோ அதை மட்டுமே உண்ண வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுளோம்.

மேலும் பெரும் வணிகங்களில் பூச்சிமருந்துகள் பூசப்பட்ட காய்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை உண்ணுவதினால், கடந்த தலைமுறையினருக்கு இல்லாத, வராத நோய்களான சர்க்கரை வியாதி, இரத்த கொதிப்பு, புற்று நோய், மாரடைப்பு, உளவியல் ரீதியான நோய் என பலவகையான நோய்கள் வந்து நம் வாழ்கையையே சவாலாக மாற்றி வருகின்றன. இதையே வேலைக்காரன் படத்தில் மருத்துவர் சிவராமன் உணவரசியல் என்று பேசியிருப்பார். அதில் இந்த தலைமுறைதான் தனது அடுத்த தலைமுறையின் மரணத்தை அருகில் இருந்து பார்க்கும் துரதிஷ்டமான தலைமுறை என்று கூறியிருப்பார். மேலும் பல மேடைகளில் உணவு அரசியலாகவும் மருந்து வணிகமாகவும் செயல்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த உணவு அரசியல் குறித்தும் காய்கறிகளினால் மக்களும் வியாபாரிகளும் பாதிக்காக்கப்படுவது குறித்தும், கார்பரேட் வணிகம் குறித்தும் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன.

அதற்கு அவர் அளித்த பதில்களாவன;

எந்தெந்த காய்கறிகள் உண்பது நல்லது?
கார்ப்பரேட் என்ற பெயரில் பெரும் வணிக நிறுவனங்களில் விற்கப்படும் காய்கறிகளை வாங்கி உண்பது நம் ஆரோக்கியதிற்கு நல்லது அல்ல. ஏனென்றால் அங்கு விற்கப்படும் காய்கள், பழங்கள் என அனைத்திலும் பல்வேறு மருந்துகளை அடித்து பார்பதற்கு அழகாகவும் கலர்ஃபுல்லாகவும் இருக்குமாறு வைத்திருப்பார்கள். அவற்றை உண்டால் நம் உடலுக்கு தேவையான சத்துகளும் கனிமங்களும் கிடைப்பதில்லை. மேலும் அங்கு விற்க்கப்படும் பன்னாட்டு காய்களை  வாங்காமல் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் அவை வெளிநாட்டில் இருந்து வருவதற்கே 20-30 நாட்களாகும். அதனால் அந்த காய்கறிகள் வீணாகாமல் இருக்க குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் வைத்து பலவிதமான பூச்சி மருந்துகளும் பூசப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன. எனவே நம் வீட்டின் வாசலில் கிடைக்கும் காய்களையும், அருகில் இருக்கும் சிறு கடைகளில் கிடைக்கும் காய்களையும் வாங்கி உண்பதே சிறந்தது.

அன்றாடம் அருகில் கிடைக்கும் ஒரே மாதிரியான காய்களை உண்பதினால் நமக்கு தேவையான சத்துகள் கிடைக்குமா?
ஒரே மாதிரியான காய்களை உண்பதினால் நம் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைப்பதில்லை. காரணம் தினமும் உணவில் 6 சுவைகளை நாம் சேர்த்துக்கொள்வது இல்லை. முக்கியமாக கசப்பையும் துவர்ப்பையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் ஒரு கீரையை சேர்த்து கொள்வது நல்லது. அதனை தவிர்த்துவிட்டு புரோக்கொலி பெங்களூர் தக்காளி என வாங்கி உண்பது உடலுக்கு தேவையில்லாத நோய்களை உண்டாக்கும்.

ஹைபிரிட் (HYBRID) காய்களை உண்ணலாமா? 
ஹைபிரிட் என்பது வீரிய ஒட்டு ரக காய்களாகும். நாம் தற்போது உண்ணும் காய்கறிகள் அனைத்தும் ஹைபிரிட் காய்களே. ஆனால் நம் முன்னோர்கள் பயன்படுத்திய நாட்டு காய்கள்தான் ஆரோக்கியமானவை. அவற்றில் கிடைக்கும் கனிமங்களும் விட்டமின்களும் வேறு எவற்றிலும் கிடைப்பது இல்லை. ஆனால் சமீபத்தில் இயற்கை சந்தைகள் அதிகமாகி வருகின்றன. அங்கு சென்று காய்களை வாங்கி உண்பது நல்லது.

எப்படிப்பட்ட உணவுகளை உண்ண வேண்டும்?
நாம் முதன்மை உணவாக உண்பது அரிசி வகைகளைதான். அப்படி உண்பது தவறு. நம் பிரதான உணவாக காய்களையே எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது குறைவான அரிசி சாப்பாட்டையும் அதிகமான காய்களையும் எடுத்து கொள்ள வேண்டும். அத்துடன் தினமும் ஏதேனும் ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் நம் நாட்டு காய்கறிகளுக்கும் பழங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உண்மையிலேயே அவற்றில்தான் அதிகமான விட்டமின்களும் உடலுக்கு தேவையான சத்துகளும்  கிடைக்கின்றன. அதனை வாங்குவதினால் விவசாயிகளும் பயன்பெறுவார்கள்.

தற்போதைய மார்டன் உலகத்தில் குழந்தைகள் ஜங் ஃபுட்ஸைதான் உண்ணுகின்றனர், அவற்றில் இருந்து அவர்களை எவ்வாறு மீட்பது?
குழந்தைகளை உணவு உண்ண வைப்பதற்கு முன்னர், உணவோடு ஒரு இணக்கமான உறவை ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக காய்கறிகளை வாங்க போகும்போது அவர்களையும் அழைத்து செல்ல வேண்டும். அத்துடன் அந்த காய்களை அவர்களையே தேர்வு செய்ய சொல்லவேண்டும். அதன் பெயர்களையும் சொல்லிதர வேண்டும். பிறகு அவற்றை சமையலுக்காக நறுக்கும் போது அவர்களிடம் ஒரு காயை கொடுத்து எப்படி நறுக்க வேண்டும் என்பதனையும், அவற்றை பற்றிய  சிறு சிறு கதைகளையும் கூற வேண்டும். அறிவியலாக கூறாமல் உணர்வு பூர்வமான கதைகளாக கூற வேண்டும். அதனால் காய்களோடு ஒரு பற்று  ஏற்பட்டு அவற்றை உண்ணும்போது வேண்டாம் எனக்கூறாமல் விரும்பி உண்ணுவார்கள். இது ஒவ்வொரு  பெற்றோருடைய கடமையாகும்.

கார்ப்பரேட் வணிகம் குறித்து உங்கள் கருத்து?
வணிகம் என்பது புதியது இல்லை. நம் முன்னோர்களின் காலத்தில் இருந்தே நாம் வணிகம் செய்து கொண்டுதான் இருக்கிறோம். அப்போது உற்பத்தி செய்யும் விவசாயிக்கும், நுகர்வோருக்கும் இடைவேளை இல்லாமல் இருந்தது.  ஆனால் தற்போது உள்ள கார்ப்பரேட் வணிகம் (பெரு வணிகங்கள்) மறைமுகமாக நம் அனைவரையுமே ஏமாற்றுகிறது. மெல்ல மெல்ல விலையை ஏற்றுகிறது. அதுமட்டுமல்லாமல் உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் இடையே ஒரு பெரும் இடைவெளியை ஏற்படுத்துயுள்ளது. இந்த இடைவெளி கூடக்கூட பெரும் வணிகங்கள் பெரும் லாபத்தை அடைகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிபடைகின்றனர்.

இதனைத் தடுக்கவோ கட்டுபடுத்தவோ என்ன செய்ய வேண்டும்?
முதலில் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும். சிறு கூட்டுறவு போன்ற அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி விவசாயிகளே தங்களது காய்களை நேரடியாக சந்தைபடுத்த வேண்டும். இதனால் பெரும் வணிகங்கள் லாபம் பெருவதை தடுக்க முடியும்.

எனவே நாம் ஒவ்வொருவரும் பெரும் வணிகங்களை தேடி செல்லாமல்  இயற்கையான காய்கறிகள் கிடைக்கும் சந்தைகளுக்கு சென்று காய்களை வாங்க வேண்டும். அதனால் விவசாயிகளும் பயம்பெறுவார்கள் நாமும் ஆரோக்கியமுடன் வாழ்வோம்.

-செ.வைஜெயந்தி, உதவி ஆசிரியர், நியூஸ்18தமிழ்.காம்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Corporate, Dr Sivaraman, Food, Fruits, Vegetables

அடுத்த செய்தி