உங்க இதயத் துடிப்பை வைத்தே உங்களுக்கு காஃபி பிடிக்குமா இல்லையான்னு கண்டுபிடிக்கலாமாம்

காபி

காஃபியை ஒருவர் விரும்புவதும், வெறுப்பதும் அவர்களின் ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை வைத்து கூற முடியும் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

  • Share this:
காஃபியை பிடிக்கதாவர்கள் பெரும்பாலும் இருக்க மாட்டார்கள். காலையில் இருந்து மாலை வரை பல முறை காஃபி குடிப்பவர்களும் இருக்கிறார்கள், ஒரே நேரத்தில் அதிகமான காஃபி குடிப்பவர்களும் உள்ளார்கள். மனச்சோர்வு அல்லது மன அழுத்தம் இருக்கும்போது மனது உடனடியாக காஃபி கடையை தேடும். ஒரு டம்ளர் காஃபி குடித்தபிறகு, நிம்மதியாக இருப்பதுபோல் உணரமுடியும்.

பலருக்கு காஃபியை ஏன் அதிகம் பிடிக்கிறது? ஒரு சிலர் ஏன் வெறுக்கிறார்கள்? என்பது குறித்து சவுத் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது. இதில் வியப்புக்குரிய விஷயம் தெரியவந்துள்ளது. அதாவது, ஒருவர் காஃபி குடிப்பதை வெறுப்பதும், விரும்புவதும் அவர்களின் ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை கொண்டு கண்டுபிடிக்கலாம் என தெரிவித்துள்ளனர். கார்டியோவாஸ்குலர் பகுதியை காபி எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது, அதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் அவர்கள் ஆராய்ந்தனர்.

யு.கே பயோபேங்கின் தரவுகளைக் கொண்டு காபி குடிக்கும் 3,90, 435 பேரை ஆய்வு செய்தனர். அதில், அவர்களின் ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு ஆகியவையும் கண்காணிக்கப்பட்டது. அதில், உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சினா, ஆர்திமியா உள்ளவர்கள் காஃபின் இல்லாத காபி குடிப்பதையும் அல்லது முற்றிலுமாக காபி குடிப்பதையும் தவிர்க்கிறார்கள் என்பதை கண்டுபிடித்தனர். அதாவது அவர்கள் காபியை வெறுக்கிறார்கள் என்பதை உணர்ந்தனர். இந்தப் பிரச்சனைகள் இல்லாதவர்கள் காபியை வழக்கம்போல் குடிப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஆய்வை முன்னின்று வழிநடத்திச் சென்ற எலினா ஹெப்பனன் (Elina Hyppönen) பேசும்போது, காபி குடிப்பவர்கள் மற்றும் வெறுப்பவர்கள் குறித்து நடத்திய ஆய்வு பல விஷயங்களை கண்டுபிடிக்க உதவியதாக தெரிவித்தார். காபியை குடிக்கும் அளவுகளை மரபணுக்கள் வழிநடத்துவதாக தெரிவித்தார். குறைவாக குடிக்கும் அளவு அல்லது அதிகமாக குடிக்கும்போது அவை உடனடியாக மூளைக்கு தெரிவிப்பதாக எலினா ஹெப்பனன் கூறியுள்ளார். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் காபியை அதிகமாக குடிக்கும்போது மரபணுக்கள் தன்னைத் தானே ரெகுலேட் செய்து, அவர்கள் குடிக்க வேண்டிய காபியின் அளவை தீர்மானிப்பதாக தெரிவித்த அவர், காபியின் அளவு அதிகரிக்கும்போது அதனை உடனடியாக வெளிக்காட்டி காபி குடிப்பதை தடுக்கும் என தெரிவித்துள்ளார்.

உங்கள் மனது காபி போதும் என தெரிவிப்பதற்கு இதுவே காரணம், உங்களின் மனதை கவனித்தால், நீங்கள் காபி குடிக்க வேண்டிய அளவு அல்லது சாப்பிட வேண்டிய அளவை சரியாக வழிகாட்டும் எனவும் ஆய்வாளர் எலினா ஹெப்பனன் சுட்டிக்காட்டியுள்ளார்

 
Published by:Tamilmalar Natarajan
First published: