வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலை மாறி தற்போது பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. பொதுவாக மழைக்காலம் அனைவருக்கும் விருப்பமான காலநிலை என்றே கூறலாம். பரவலான மழை, சில்லென இருக்கும் வானிலை , சூடான ஸ்நாக்ஸ் என மழைக்காலத்தை கொண்டாடுவோம். ஆனால் பருவம் மாறும் போது, நமது ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படலாம் என்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள், சூப்புகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
மழைக்காலத்தில் சளி, தொண்டை வலி, இருமல், காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் வருவது பொதுவானது. எனவே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எண்ணற்ற உணவுகள் உள்ளன. தற்போது நாம் பிளம்ஸ், இஞ்சி கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஜூஸ் தயார் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு காண்போம்.,
தற்போது பிளம்ஸ் பழ சீசன் தொடங்கியுள்ளது. சிவப்பு நிறத்தில் உள்ள பழங்கள் நல்ல பழுத்த பழங்களாகும். இந்த பழம் இயற்கையாகவே சற்று புளிப்பு சுவையுடையது. பிளம்ஸ் பழத்தில் நமது ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களான வைட்டமின் சி, பீட்டா கரோட்டின், குரோமியம், பொட்டாசியம், செலினியம் மற்றும் பிற தாதுக்களும் நிறைந்துள்ளது. மேலும் இதில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது மற்றும் வளர்சிதை மாற்றத்தை தூண்டவும் உதவுகிறது.
இந்த பிளம்ஸ் பழத்துடன் இஞ்சியை சேர்த்து அருந்துவதால் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். தினசரி உணவில் ஒரு சிறிய அளவு இஞ்சி சேர்த்தால் கூட ஆரோக்கியத்திற்கு உதவும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இஞ்சியில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. எனவே, இஞ்சி மற்றும் பிளம்ஸ் பழம் சேர்த்து தயார் செய்யப்படும் ஜூஸ் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி அருந்தக்கூடியது.
Also Read : முட்டையை ஃபிரிட்ஜில் வைத்தால் பாக்டீரியா பரவுமா..? மற்ற உணவுகளையும் பாழாக்கும் என எச்சரிக்கை...
பிளம்ஸ் - இஞ்சி ஜூஸ் செய்முறை :
5 பிளம்ஸ் பழங்களை எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கவும். இப்போது ஒரு துண்டு இஞ்சியை எடுத்து பிளம்ஸ் துண்டுகளுடன் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஜூஸரில் போட்டு நன்கு அரைக்கவும். ஜூஸை வடிகட்டி எடுத்து கொள்ளவும். இந்த ஜூஸ் சற்று கசப்பு கலந்த புளிப்பு சுவையுடன் இருக்கும் என்பதால் இத்துடன் சிறிது தேன் அல்லது சர்க்கரை கலந்து அருந்தவும்.
Also Read : நாவூறும் சுவையில் நேபாள உணவுகள்... இமயமலை சாரலோடு வாங்க சமைத்து சாப்பிடலாம்!
இந்த ஜூஸை வாரம் மூன்று முறை குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கூடுதல் சுவைக்கு இந்த ஜூஸில் புதினாவையும் சேர்த்து கொள்வது நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Health, Healthy juice, Healthy Lifestyle