Home /News /lifestyle /

ஓணம் 2022: ஸ்பெஷல் பால் பாயசம் முதல் கடலை கறி வரை, பாரம்பரியமான ஓணம் உணவுகள்!

ஓணம் 2022: ஸ்பெஷல் பால் பாயசம் முதல் கடலை கறி வரை, பாரம்பரியமான ஓணம் உணவுகள்!

 ஓணம்

ஓணம்

ஓணம் 2022 : இந்த ஆண்டு ஓணம் ஸ்பெஷலாக ‘ஓணம் சத்யா’ஸ்பெஷல் உணவுகளின் ரெசிப்பிக்கள் இங்கே.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :
  • Kerala, India
    இந்தியாவில் கொண்டாடப்படும் கேரளாவுக்கே உரித்தான மிகவும் பாரம்பரியமான பண்டிகைகளில் ஒன்றுதான் ஓணம். ஓணம் பண்டிகை, திருவோணம் என்று கேரளா முழுவதும் விமரிசையாக 10 நாட்களுக்கு கொண்டாடப்படும். ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கி இருக்கிறது. கேரளா மட்டுமல்லாமல் நாடு முழுவதுமே ஆங்காங்கே ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.

    பண்டிகைகள் என்றாலே அதற்கு உரிய விருந்துகள் தான் நினைவுக்கு வரும். அதில் ஓணம் தனிச்சிறப்பு வாய்ந்தது. ‘ஓணம் சத்யா’ என்று கூறப்படும் தலைவாழை இலை கொள்ளாத அளவுக்கு பல வகையான உணவுகள் சமைக்கப்படும். ஓணம் சத்யாவில் ஒரு சில உணவுகளை தவிர்க்கவே முடியாது. இந்த ஆண்டு ஓணம் ஸ்பெஷலாக ‘ஓணம் சத்யா’ எஸ்ட்ரா ஸ்பெஷல் உணவுகளின் ரெசிப்பிக்கள் இங்கே.

    தேங்காய் சோறு:

    தேங்காய் சாதம் எப்படி செய்வது என்று பலருக்கும் தெரியும். ஆனால், இந்த வித்தியாசமான கேரளா ஸ்பெஷல் தேங்காய் சோறு செய்து பாருங்கள்.

    தேங்காய் சோறு


    அடிப்பகுதி கனமான வாணலியை எடுத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடாகிக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடான உடன், கடுகு தாளிக்க வேண்டும், கடுகு வெடித்தவுடன், உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்க்க வேண்டும். பொன்னிறமாக மாறியவுடன், முந்திரி சேர்த்து வறுக்க வேண்டும். பின்னர், சுவைக்கு ஏற்ப, துருவிய தேங்காய், தேங்காய்ப்பால், கொத்துமல்லி, பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து 2 முதல் 4 நிமிடங்கள் வரை அதிக தீயில் கொதிக்க வைக்கவும். பின்னர் தேவையான அளவு சாதம் சேர்த்து, குறைந்த தீயில் கொதிக்க விடவும்.

    சுவையான தேங்காய் சோறு தயார்!

    கடலை கறி ரெசிபி

    கேரளாவின் பாரம்பரிய காலை உணவான ஆப்பம் மற்றும் புட்டு ஆகியவற்றுடன் கடலை கறி இல்லாமல் சுவைக்காது என்று கூறும் அளவுக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவாகும். கடலை கறி செய்வதற்கு முதல் நாளே கருப்பு கொண்டைக்கடலையை ஊற வைக்க வேண்டும், மற்றும் மறுநாள் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடான பின்பு, துருவிய தேங்காய், சிகப்பு மிளகாய், தனியா, கருவேப்பிலை மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும்.

    கடலை கறி ரெசிபி


    வறுத்த பொருட்களை நைசாக அரைத்துக் கொள்ளவும். அல்லது தண்ணீர் விட்டு பேஸ்ட் போலவும் அரைத்துக் கொள்ளலாம். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தனியா தூள், மிளகாய்த்தூள், பட்டை இலவங்கம் மற்றும் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து வதக்கவும். மசாலாவின் பச்சை வாசனை குறைந்த பிறகு வேக வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும் சுவையான கடலை கறி தயார்.

    கேரள ஸ்பெஷல் காலன்

    புளிப்புச்சுவையுள்ள உணவுகள் பல கேரளா ஓணம் சத்யாவில் இடம்பெறும். அதில் சேனைக்கிழங்கு பயன்படுத்தி செய்யப்படும் ‘காலன்’ மிகவும் சுவையானது.

    கேரள ஸ்பெஷல் காலன்


    தோல் நீக்கிய சேனைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மோரில் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். பாதிவெந்திருக்கும் பொழுது உப்பு மற்றும் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும். ஒரு சிறிய கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கருவேப்பிலை தாளிக்கவும். பின்னர், வேக வைக்கப்பட்ட கலவையில் சேர்த்து, மிளகுத்தூள், வெந்தயப் பொடி சேர்த்து, நன்றாக கிளறி இறக்கவும். காலன் தயார்.

    கேரளா ஸ்பெஷல் ரசம்!

    எவ்வளவு பெரிய விருந்தாக இருந்தாலும் ரசம் கொஞ்சமாவது சாப்பிட்டால்தான் எளிதில் செரிமானமாகும். கிட்டத்தட்ட 20 வகைகளுக்கும் மேற்பட்ட உணவு பரிமாறப்படும் ஓணம் சத்யாவில் ரசம் இல்லை என்றால் எப்படி? கேரளா ஸ்பெஷல் ரசம் ரெசிபியை இங்கே பார்க்கலாம்.

    ரசம்


    புளியை ஊறவைத்து அதன் சாறை  எடுத்து கொள்ளுங்கள். தக்காளியுடன் பருப்பு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். நசுக்கிய பூண்டு, கருவேப்பிலை, கொத்தமல்லி, மிளகு, சீரகம் மற்றும் சிவப்பு மிளகாய் ஆகியவற்றை எண்ணெய் இல்லாமல் வறுத்து நன்றாக பொடி செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும். புளி தண்ணீரில் உப்பு, பெருங்காயம் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவைக்கவும். பின்பு வேக வைத்த பருப்பு மற்றும் தக்காளி விழுதை சேர்த்து கொதிக்க வைக்கவும். கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் நசுக்கிய பூண்டு ஆகியவற்றை சேர்த்து, அரைத்துவைத்த ரசபொடியை சேர்த்து குறைந்த தீயில் ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து, இறுதியில் சீரகம் தாளிக்கலாம். கமகமக்கும் சுவையுடன் ரசம் தயார்!

    அரிசி பால் பாயசம்

    பொதுவாக பால் பாயசம் என்பது மிகவும் சுலபமாக தயாரித்துவிடக்கூடிய ஒரு இனிப்பு வகையாகும். கேரளாவில் ஓணம் சத்யாவில் அரிசி பயன்படுத்தி பால் பாயசம் செய்யப்படும். பாஸ்மதி அரிசியை 30 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். அதன் பிறகு தண்ணீர் ஊற்றாமல் பாலிலேயே அரிசியை நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    அரிசி பால் பாயசம்


    அதை அடுப்பில் குறைந்த தீயில் வைத்து கிளறவும். சர்க்கரை, குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை சேர்க்கவும். தனியே ஒரு சிறிய வாணலியில் நெய்யில் முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து, அதன் பிறகு உலர்ந்த திராட்சையை வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். கொதித்து கொண்டிருக்கும் அரிசி பாயசத்தில் சேர்க்கவும். சுவையான அரிசி பால் பாயாசம் தயார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Kerala, Onam

    அடுத்த செய்தி