தொற்றுக்கு பிறகு பல வாரங்கள் அல்லது மாதங்கள் வீட்டிலேயே நேரத்தை செலவழித்தால் எடை கூடிய பலர் சமீப காலமாக உடல் எடையை குறைக்கும் பல டயட் வழிமுறைகளை பின்பற்றி வருகிறார்கள். உடல் எடையை குறைக்கும் பல டயட் வழிமுறைகளில் இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் (Intermittent Fasting) அதாவது இடைப்பட்ட விரத முறை மிகவும் பிரபலமாகியுள்ளது.
உடல் எடையை குறைக்க டயட் இருப்பதற்கும், விரதம் இருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. டயட்டில் குறிப்பிட்ட வகை உணவுகளை மட்டும் சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். அதேநேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடைவெளி விட்டு உணவுகளை எடுத்து கொள்வதன் மூலம் விரத முறையில் எடையை குறைக்கலாம்.
அந்த வகையில் இந்த இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் (இடைப்பட்ட விரதம்) உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாக நிபுணர்களால் குறிப்பிடப்படுகிறது. இந்த எடை இழப்பு முறையில் நிலையான உணவு முறையை (fixed eating pattern) பின்பற்ற வேண்டும். இதை நீங்கள் பின்பற்ற விரும்பினால் 8 மணிநேரம் அல்லது 16 மணிநேரம் விரதம் இருக்க வேண்டும்.
இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கை பின்பற்றும் காலத்தில் ஒரு நபர் அதிக கலோரி உட்கொள்ளாமல் உடலுக்கு ஆற்றலை வழங்க உதவும் பானங்களை எடுத்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார். அந்த வகையில் இடைப்பட்ட விரதத்தின் போது அனுமதிக்கப்படும் ஆற்றல் பானங்களில் பிளாக் காஃபியும் ஒன்று. உடலுக்கு ஆற்றலை வழங்குவதில் பிளாக் காஃபி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றாலும் இடைப்பட்ட விரதத்தின் போது பிளாக் காஃபி குடிக்க விரும்புபவர்கள் மனதில் கொள்ள வேண்டிய சில ஆலோசனைகளை பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா ஷேர் செய்துள்ளார்.
இது தொடர்பான இன்ஸ்டா போஸ்ட்டில் "இடைப்பட்ட விரதத்தை சரியாக கடைபிடித்தால் சிறந்த செரிமானம், வளர்சிதை மாற்றம் மற்றும் செல் செயல்பாடு போன்ற பலஆரோக்கிய நன்மைகளை பெறலாம்" என்றுள்ளார் லோவ்னீத் பத்ரா. ஆனால் பசியை அடக்கி "ஆற்றலை" அதிகரிக்கும் இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் முயற்சியில் மக்கள் காஃபினை அதிகமாக எடுப்பதை பார்க்க முடிகிறது. இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கின் போது பிளாக் காஃபி குடிக்கலாம் என்றாலும் அதன் மூலம் உடலுக்குள் அதிக காஃபின் செல்வது நல்லதல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
எடை குறைப்பு முயற்சிக்காக இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் இருக்கும் நேரத்தில் யாரெல்லாம் அதிகமாக காஃபி குடிக்க கூடாது எனது பற்றிய எச்சரிக்கையையும் அவர் விடுத்து உள்ளார்.
சட்டென்று வெயிட் குறைகிறதா.? நம் உடலில் திடீர் எடை இழப்பை ஏற்படுத்தும் இந்த 5 ஆபத்துகள்.!
அதன்படி...
* ஏற்கனவே அசிடிட்டி பிரச்னைக்கு ஆளாகியிருந்தால், காஃபின் வயிற்றில் சுரக்கும் ஆசிட் அளவை அதிகரிக்கும். ஏனென்றால் உடலில் 'GRED அறிகுறிகளை' அதிகரிக்கும் சில கூறுகள் காஃபியில் உள்ளன.
* ஏற்கனவே இதய கோளாறு, உயர் ரத்த அழுத்தம் அல்லது அதிக இதய துடிப்பு சிக்கல் உள்ளவர்கள், இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் காலத்தில் அதிகம் பிளாக் காஃபி குடிக்க கூடாது.
* ஹார்மோன் சமநிலையின்மையால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிகம் காஃபி குடிக்க கூடாது.
* ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்கள்: காபி லெவோதைராக்ஸின் (தைராய்டு மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது) உறிஞ்சப்படுவதை பாதிக்கிறது. காபி ஈஸ்ட்ரோஜன் ஆதிக்கத்திற்கு பங்களிக்கிறது, மேலும் ஈஸ்ட்ரோஜன் ஆதிக்கம் T4-ஐ T3-ஆக மாற்றுவதை தடுக்கிறது.
* காபி பித்தத்தை வெளியிடுவதையும் தூண்டும் மற்றும் அதிகப்படியான காஃபின் செரிமான பிரச்சனைகளை உருவாக்கி குடல் இயக்கத்தை துரிதப்படுத்தும்.
* காஃபி கவலை மற்றும் பதற்ற அறிகுறிகளை உயர்த்தலாம் நம்மை பீதி தாக்குதலுக்கு ஆளாக்கலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.