சாம்பார், காரக்குழம்பு என எது செய்தாலும் அதில் வெங்காய வடகத்தை வறுத்துப் போட்டால் போதும் குழம்பு வாசனையிலும் ருசியிலும் கட்டி இழுக்கும். வீட்டில் நீங்களும் செய்ய டிப்ஸ் இதோ...
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - 1.5 கப்
பூண்டு பற்கள் - 1/2 கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
உளுந்து - 1/4 கப் ( 30 நிமிடங்கள் ஊற வைக்கவும் )
கடுகு - 1 Tsp
துவரம்பருப்பு - 1 Tsp
சீரகம் - 1.5 Tsp
வெந்தையம் - 1/2 Tsp
சிவப்பு மிளகாய்ப் பொடி - 1 Tsp
மஞ்சள் - 1 Tsp
உப்பு - தேவைக்கு ஏற்ப
ஆமணக்கு எண்ணெய் - 2 Tsp
சமையல் எண்ணெய் - வறுக்க
செய்முறை :
சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மூன்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
அதில் கடுகு , வெந்தையம், துவரம்பருப்பு, சீரகம், உப்பு, சிவப்பு மிளகாய்ப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து கைகளால் நன்குக் கலந்து கொள்ளவும்.
அடுத்ததாக ஊற வைத்த உளுத்தம் பருப்பை மிக்ஸியில் மொர மொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
தற்போது, அதை வெங்காயக் கலவையில் சேர்த்துக் கலந்து கொள்ளவும். தற்போது அந்தக் கலவையை எலுமிச்சைப் பழம் அளவிற்கு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
வெறும் கடுகு பயன்படுத்தி சட்னியா..? கேட்கவே புதுசா இருக்குல... நீங்களும் டிரை பண்ணி பாருங்க...
அவற்றை இரவு முழுவதும் அப்படியே வைத்துவிடுங்கள்.
மறுநாள் அந்த உருளைகளில் சற்று நீர் வற்றி இருக்கும். அவற்றை உடைத்துப் பரப்பி ஆமணக்கு எண்ணெய் தெளித்து பிரட்டுங்கள். தற்போது மீண்டும் அவற்றை உருளைகளாக உருட்டி வையுங்கள்.
இப்படி அதில் நீர் வற்றும் வரை செய்து கொண்டே இருங்கள். இதற்குக் குறைந்தது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் எடுக்கும்.
பின் அவை நன்கு வறட்சியடைந்ததும் டப்பாவில் அடைத்துத் தேவைப்படும்போதெல்லாம் குழம்பில் வறுத்துக் கொட்டினால் குழம்பு ருசியாக இருக்கும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.