ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

காலை உணவை ஹெல்தியாக்கணுமா..? டிரை பண்ணிப்பாருங்க பீட்ரூட் இட்லி...

காலை உணவை ஹெல்தியாக்கணுமா..? டிரை பண்ணிப்பாருங்க பீட்ரூட் இட்லி...

பீட்ரூட் இட்லி

பீட்ரூட் இட்லி

கிழங்கு வகையை சார்ந்த பீட்ரூட்டில் இரும்புச் சத்து, பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த குறைந்த கலோரி கொண்ட காயாகும். இது ரத்த சிவப்பு அணுக்களை சரி செய்யவும், சீராக செயல்படவும் உதவுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தென்னிந்தியாவை பொறுத்தவரை இட்லி அனைவருக்கும் விருப்பமான காலை உணவாக இருந்து வருகிறது. இதனை காஞ்சிபுரம் இட்லி, ரவா இட்லி, பொடி இட்லி, தயிர் இட்லி, தக்காளி இட்லி, இட்லி மஞ்சூரியன், வெந்தய இட்லி, கோதுமை இட்லி, ராகி இட்லி என ஒரே மாவில் பல வெரைட்டிகளில் செய்து அசத்த முடியும். வீட்டில் அனைவருக்கும் பிடித்த இட்லியை சுவையானதாக மட்டுமின்றி, ஆரோக்கியமானதாகவும் சமைக்க உதவும் அசத்தலான ரெசிபி ஒன்றை கொண்டு வந்துள்ளோம்.

பீட்ரூட் நன்மைகள்:

கிழங்கு வகையை சார்ந்த பீட்ரூட்டில் இரும்புச் சத்து, பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த குறைந்த கலோரி கொண்ட காயாகும். இது ரத்த சிவப்பு அணுக்களை சரி செய்யவும், சீராக செயல்படவும் உதவுகிறது. மேலும் இது உடலுக்கு ஆற்றலையும், சுறுசுறுப்பையும் கொடுக்க கூடியது. சிறுநீரகம், பித்தப்பை, கல்லீரல் போன்ற உடலின் உள்ளுறுப்புகளில் இருக்கும் நச்சுக்களை நீக்கவும், அல்சர் எனப்படும் வயிற்றுப்புண்ணை குணப்படுத்தவும் பீட்ரூட் உதவுகிறது. இத்தனை நன்மைகள் கொண்ட பீட்ரூட்டை வைத்து ‘பீட்ரூட் இட்லி’ எப்படி செய்வது என பார்க்கலாம்...

இட்லி பிரியர்களுக்கு இந்த இளஞ்சிவப்பு நிற விருந்து மிகவும் வண்ணமயமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். பீட்ரூட் இட்லியை ரவை, தயிர், தண்ணீர், உப்பு மற்றும் பீட்ரூட் ஆகியவற்றைப் பயன்படுத்தி வெறும் 30 நிமிடங்களிலேயே தயாரித்துவிடலாம். இதன் இளஞ்சிவப்பு நிறமும், தனித்துவமான மணமும் வீட்டில் உள்ள அனைவரையும் கவர்ந்திழுக்கும் என்பதில் எவ்வித ஐயமும் தேவையில்லை.

தேவையான பொருட்கள்:

வறுத்த ரவை - 2 கப்

தயிர் - 1 கப்

பீட்ரூட் - 1

தண்ணீர் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

பீட்ரூட் இட்லி செய்முறை:

மாவு தயாரிக்க..

ஒரு பாத்திரத்தில், வறுத்த ரவை, தயிர் மற்றும் 1 கப் தண்ணீர் சேர்க்கவும். சுவைக்கு ஏற்றார் போல் உப்பு சேர்த்து நன்கு கிளறி மிருதுவான மாவு பதத்திற்கு கொண்டு வரவும். இந்த கலவையை சுமார் 10 நிமிடங்கள் ஊற வையுங்கள்.

பீட்ரூட் பேஸ்ட்

பீட்ரூட்டை தோலுரித்து தோராயமான துண்டுகளாக நறுக்கவும். பீட்ரூட் துண்டுகளை ஒரு பிளெண்டரில் சேர்த்து, நன்றாக பேஸ்டாக அரைத்துக்கொள்ளவும்.

பீட்ரூட் இட்லி

ஏற்கனவே கலந்து வைத்துள்ள இட்லி மாவுடன் பீட்ரூட் பேஸ்ட்டை சேர்த்து நன்கு கலந்து பிங்க் நிற மாவாக தயார் செய்து கொள்ளவும். மாவு சற்றே கடினமாக இருந்தால், கால் கப் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

இட்லி குக்கர் அல்லது பாத்திரத்தில் உள்ள தட்டுக்களில் நன்றாக நெய் தடவி, கலந்து வைத்துள்ள பீட்ரூட் இட்லி மாவை ஒவ்வொரு அச்சுக்களிலும் சரியான அளவிற்கு ஊற்றவும். இதனை ஆவியில் 12 முதல் 14 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும்.

உணவுகள் மூலம் போதுமான விட்டமின் டி-யை பெற முடியுமா..? குறைபாட்டை போக்கும் வழிகள்...

நன்றாக வேகவைத்தவுடன் பீட்ரூட் இட்லிகளை தட்டில் இருந்து எடுத்து பரிமாற தயார் செய்யவும். பீட்ரூட் இட்லியை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட பிரமாதமாக இருக்கும். இதனை மேலும் ஆரோக்கியமாகவும், சுவைமிக்கதாகவும் மாற்ற பீட்ரூட் இட்லிகளை சில கிளாசிக் சாம்பார் மற்றும் சட்னியுடன் பரிமாறவும்.

First published:

Tags: Beetroot, Idli