சிலருக்கு காலை டிஃபன் சாப்பிடும்போது ஒரு மெது வடையையும் சேர்த்து சாப்பிட்டால்தான் திருப்தி கிடைக்கும். சிலருக்கு மாலையில் சூடாக டீயுடன் ஒரு மெது வடையாவது சாப்பிட வேண்டும். இப்படி பலரும் மெது வடையுடன் தங்களை தொடர்புபடுத்திக் கொள்வார்கள்.
வீட்டில் பண்டிகை, விசேஷ நாட்களிலும் கடவுளுக்கு மெதுவடையைத்தான் படைப்பார்கள். இப்படி மெது வடைக்கென தனி மவுசு உண்டு. அப்படி மெது வடையை சுட வேண்டும் எனில் 4 மணி நேரம் அரிசி , உளுந்து ஊற வைத்து அரைத்து சுட வேண்டும். இதை யோசிக்கும்போதே தலை சுற்றிவிடும். ஆனாலும் சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டால் என்ன செய்வது..? கடையில் வாங்கி சாப்பிடவும் தயக்கம் எனில் கவலையை விடுங்க.. நொடியில் மெதுவடை சுட இந்த ரெசிபியை ஃபாலோ பண்ணுங்க...
தேவையான பொருட்கள் :
ரவை - 2 கப்
தயிர் - 1 1/2 கப்
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - 1/2 துண்டு
சமையல் சோடா - 1/4 tsp
உப்பு - தே.அ
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
ரவையை ஒரு கிண்ணத்தில் கொட்டி அதில் தயிர் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். வடை பதம் வரவில்லை எனில் மீண்டும் கொஞ்சம் தயிர் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள்.
இப்போது அதை தட்டுப்போட்டு மூடி 10 நிமிடங்கள் ஊற வையுங்கள்.
10 நிமிடங்கள் கழித்து பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, உப்பு, சமையல் சோடா சேர்த்து நன்கு பிசைந்து கலந்துகொள்ளுங்கள்.
அடுத்ததாக கடாய் வைத்து வடை சுடுவதற்கு ஏற்ப எண்ணெய் ஊற்றி காய வையுங்கள்.
பின் எப்போதும்போல் மாவை கொஞ்சமாக எடுத்து தட்டி போடுங்கள். சிலருக்கு வெங்காயம் சேர்த்தால் பிடிக்கும் எனில் வெங்காயமும் சேர்த்து சுடலாம்.
அவ்வளவுதான் உங்களுடைய ஃபேவரட் மெது வடை தயார்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.