காலை உணவிற்காக செய்த இட்லிகளில் சில மீந்து விட்டனவா? அதை நீங்கள் வீண்ணடிக்க விரும்பவில்லை என்றால், அதே சமயம் மீதமான இட்லிகளை கொண்டு ஏதாவது டின்னர் செய்யலாமா என்கிற யோசனையில், தேடலில் நீங்கள் இருந்தால், சுவையான மசாலா இட்லி ஒரு அல்டிமேட் ஐடியாவாக இருக்கும்!
மசாலா இட்லி என்றதும் ஒரு 'காம்ப்ளிகேட்' ஆன ரெசிபி என்று நினைத்துவிட வேண்டாம்; இது சாதாரணமாக வீட்டில் நீங்கள் செய்யும் இட்லிகளுக்கு கூடுதல் சுவையை சேர்க்கும் ஒரு சிம்பிள் ஆன ரெசிபி ஆகும். பொதுவாகவே இட்லி மிகவும் 'டேஸ்டி' ஆன ஒரு உணவாகும்; அதில் கூடுதல் சுவையை சேர்த்தால் - சொல்லவா வேண்டும்!
உங்கள் கையில் சில மீதமான இட்லிகள் மற்றும் உங்கள் சமையல் அறையில் சிறிது வெண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் மற்றும் சில மசாலாப் பொருட்கள் இருந்தால் போதும் வெறும் ஐந்து நிமிடங்களில் மசாலா இட்லி தயாராகிவிடும். இதெல்லாம் பற்றாது, இன்னும் சில கூடுதல் சுவைகளை சேர்க்க வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் இதில் சில காய்கறிகளையும் சேர்க்கலாம். இன்னொரு சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், மசாலா இட்லியை நீங்கள் இரவு உணவாக மட்டுமில்லாமல், "திட்டமிடப்பட்ட" காலை உணவாக அல்லது மதிய உணவாக கூட சாப்பிலாம்.
also read : போர் அடிக்கும் பிரேக் பாஸ்ட்டுக்கு ‘டாடா’... சுவையான ‘மினி ஓட்ஸ் ஊத்தப்பம்’ செஞ்சு கொடுத்து அசத்துங்க!
(2 பேர் சாப்பிடும் அளவிலான) மசாலா இட்லி செய்ய தேவையான பொருட்கள்:
- 4 இட்லி
- 1 சிவப்பு மிளகாய்
- 10 கறிவேப்பிலை இலைகள்
- 1/4 தேக்கரண்டி மஞ்சள்
- தேவைக்கேற்ப உப்பு
- 2 தேக்கரண்டி வெண்ணெய்
- 1/2 தேக்கரண்டி கடுகு
- 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
- 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்
- 1/4 தேக்கரண்டி கருப்பு மிளகு
மேற்கண்ட பொருட்களை வைத்து மசாலா இட்லி செய்வது எப்படி?
முதலில் தாளிப்புக்கான மசாலாவை தயார் செய்ய வேண்டும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெயை சூடாக்கவும். பிறகு கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்க்கவும். ஒரு நிமிடம் கழித்து மஞ்சள்தூள், சிவப்பு மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் சேர்த்து நன்கு கலக்கவும். அவ்வளவு தான் தாளித்த மசாலா தயார்!
இப்போது அந்த மசாலாவில், துண்டுகளாக நறுக்கிய இட்லிகளை சேர்க்கவும். பிறகு உப்பு சேர்த்து இட்லி துண்டுகளில் மசாலாவை நன்றாக படரும்படி கலக்கவும். கடைசியாக கருப்பு மிளகு தூள் சேர்த்து 1 முதல் 2 நிமிடங்கள் சமைக்கவும்; அவ்வளவு தான். சூடான மசாலா இட்லி பரிமாற தயாராக உள்ளது.
பின்குறிப்பு:
தாளித்த மசாலாவை செய்யும் போது அதில் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் அல்லது உங்களுக்கு விருப்பமான வேறு ஏதேனும் காய்கறிகளையும் நீங்கள் சேர்க்கலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.