கோடைகாலத்தில் ஜில்லென மேங்கோ லஸ்ஸி - ட்ரை பண்ணி பாருங்க!

மாங்கோ லஸ்ஸி

மாம்பழத்தில் லஸ்ஸி செய்து சாப்பிடுவது கோடைகாலத்தில் நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. மாம்பழம் மற்றும் லஸ்ஸி இரண்டும் இணைந்து ஒரு தனித்துவமான சுவையைத் தருகின்றன.

  • Share this:
கோடைகாலம் என்றாலே கொளுத்தும் வெயில் தான் முதலில் நியாபகத்திற்கு வரும். இந்த சமயங்களில் வீட்டினுள் இருக்கும் போதே வெப்பத்தை தாங்கிக் கொள்ள முடியாது. வெளியில் சென்று வருவதை நினைத்தாலே தலைசுற்றிவிடும். கோடை என்றால் வெயில் நினைத்து எந்தளவுக்கு பயபடுகிறோமோ, அதே அளவுக்கு இந்த சீசனில் கிடைக்கும் பழங்களை நினைத்து சந்தோஷப்படலாம். வெயில் காலத்தில் சூடு மற்றும் வியர்வை காரணமாக நம் உடல் எப்போதும் வேண்டுமானாலும் சோர்வடையும். இதற்காக கோடைகாலத்தில் அதிக அளவில் நீர் அருந்த வேண்டும். மற்றும் நீர் நிறைந்த பழங்கள், குளுமையான பழ ஜூஸ்களை குடிக்க வேண்டும் என்று சொல்லுவார்கள்.

அதிலும், கோடை பருவத்தில் கிடைக்கும் தர்பூசணி, நுங்கு, இளநீர், பதநீர், நீர்மோர், ஆகியவை உடல் சூட்டை குறைக்கவும் உடலில் நீர் சத்துக்களை அதிகரிக்கவும் செய்கிறது. அதேபோல, கோடை பருவத்தில் கிடைக்கும் மற்றொரு சிறப்பு வாய்ந்த பழம் மாம்பழம். இதனை சாப்பிடுவதால் உடலிற்கு அதிக சத்துக்கள் கிடைக்கின்றன. இதனை வெறுமனே சாப்பிடலாம் அல்லது ஜூஸ் போட்டும் குடிக்கலாம். அதைவிட மாம்பழத்தில் லஸ்ஸி செய்து சாப்பிடுவது கோடைகாலத்தில் நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. மாம்பழம் மற்றும் லஸ்ஸி இரண்டும் இணைந்து ஒரு தனித்துவமான சுவையைத் தருகின்றன.

கனிம சத்துக்களை தரும் மாம்பழ லஸ்ஸி:

பொதுவாக மாம்பழம் கனிமங்களின் களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. இதில் ஃபோலேட், இரும்பு, கால்சியம், துத்தநாகம் ஆகியவை நிறைந்துள்ளன. இவை வலுவான எலும்புகள் மற்றும் தசைகளை உருவாக்க உதவுகின்றன. இதையடுத்து லஸ்ஸி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருள் தயிர் ஆகும். தயிர் எப்போதுமே அதன் ஆரோக்கிய நலன்களுக்காக அறியப்பட்ட ஒரு உணவு பொருள். நல்ல செரிமானம், வலுவான நோய் எதிர்ப்பு சக்தி, ஆரோக்கியமான தோல் மற்றும் பலவற்றை ஊக்குவிக்கும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் தயிரில் இடம்பெற்றுள்ளன. மாம்பழ லஸ்சியில் பயன்படுத்தப்படும் இளஞ்சிவப்பு அல்லது கருப்பு உப்பு, உடலுக்கு இரும்புச்சத்தினை சேர்க்கிறது. மேலும், நீரிழப்பை தடுக்கவும் உடலில் நீர் சமநிலை நிர்வகிக்கவும் உப்பு உதவுகிறது.

மாம்பழ லஸ்ஸி எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்:

தயிர் - 125 மில்லி
குளிர்ந்த தண்ணீர் - 200 மில்லி
மாம்பழம் - 1
சர்க்கரை - தேவையான அளவு
புதினா - சிறிதளவு
உப்பு - 1 சிட்டிகை

செய்முறை: முதலில் மாம்பழத்தை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவேண்டும். பின்னர், தயிர், சர்க்கரை, மாம்பழ துண்டுகள், புதினா, உப்பு, குளிர்ந்த நீர் ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். அதனை ஒரு கிளாஸ் ஊற்றி இரண்டு ஐஸ்கட்டித் துண்டுகளை சேர்த்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான லஸ்ஸி ரெடி. தேவைப்பட்டால் நொறுக்கிய பாதம் பிஸ்தா ஆகியவற்றை தூவி மற்றும் புதினா இலைகள் வைத்து அலங்கரித்து பரிமாறலாம்.

புதினா இலைகள் பானத்தில் புத்துணர்ச்சியூட்டும் சுவையைச் சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், மெக்னீசியம், தாமிரம், இரும்பு, பொட்டாசியம், கால்சியம் போன்ற தாதுக்களையும் உடலில் சேர்க்கிறது. பொதுவாக மாம்பழ லஸ்ஸி செய்யும்போது உப்பு பெரிதும் சேர்க்கமாட்டார்கள். ஆனால், ஒரு சிட்டிகை கருப்பு அல்லது இளஞ்சிவப்பு உப்பு சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமானதாக இருக்கும்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: