Jack fruits seed : பலாப்பழ கொட்டையில் குழம்பு வெச்சா செம்ம ருசியா இருக்கும்....இன்னைக்கே டிரை பண்ணுங்க..!

பலாப்பழ கொட்டையில் குழம்பு

பலரும் பலாப்பழம் விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் பலாக்கொட்டைகளை தூக்கி எறிந்துவிடுவார்கள். இனி அப்படி செய்யாமல் அதை வைத்து இப்படி ருசியான குழம்பு செய்யலாம்.

  • Share this:
    கோடைக்காலத்தில் பலாப்பழம் விளையக்கூடியது என்பதால் சந்தையில் எளிதில் கிடைக்கக்கூடிய பழம். பலரும் இதை விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் பலாக்கொட்டைகளை தூக்கி எறிந்துவிடுவார்கள். இனி அப்படி செய்யாமல் அதை வைத்து இப்படி ருசியான குழம்பு செய்யலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பலாக்கொட்டை - 1 கப்
    புளித் தண்ணீர் - 1 கப்
    பூண்டு - 8 பற்கள்
    கடுகு - 1/2 tsp
    சீரகம் - 1/2 tsp
    கறிவேப்பிலை - சிறிதளவு
    மஞ்சள் - 1/4 tsp
    மிளகாய் தூள் - 1/2 tsp
    சாம்பார் பொடி - 2 tsp
    பெருங்காயப் பொடி - 1/4 tsp
    உப்பு - தே.அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - 2 tsp

    அரைக்க :

    தேங்காய் - 1/2 கப்
    மிளகு - 10
    காய்ந்த மிளகாய் - 2

    வதக்கி அரைக்க

    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    தனியா - 1 tsp
    எண்ணெய் - 1 tsp



    செய்முறை :

    பலாக்கொட்டையின் தோலை நீக்கிவிட்டு குக்கரில் போட்டு 3 - 4 விசில் வர வேக வைக்கவும்.

    கடாயை வைத்து எண்ணெய் விட்டு வதக்கி அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

    அடுத்ததாக ஜாரைக் கழுவி மீண்டும் தேங்காய், காய்ந்த மிளகாய் என அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

    பின் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் சேர்த்து பொறிந்ததும் பூண்டு போடவும். பூண்டு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தக்காளி வெங்காயம் பேஸ்ட் சேர்த்து வதக்கவும், நன்கு வதங்கியதும், சாம்பார் பொடி, மிளகாய் பொடி என கொடுக்கப்பட்டுள்ள பொடிகளை சேர்த்து வதக்கவும்.

    பலாப்பழ கொட்டைகளில் இருக்கும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள்

    அடுத்து புளித்தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். போதுமான அளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும். ஒரு கொதி வந்ததும் வேக வைத்துள்ள பலாக் கொட்டையை சேர்க்கவும்.

    5 நிமிடங்கள் கொதித்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். குழம்பு உங்களுக்கு தேவையான பதத்தில் வந்ததும் கொத்தமல்லி தழைகளை நறுக்கி போடவும்.

    அவ்வளவுதான் பலாக்கொட்டையில் புளிக்குழம்பு தயார்.

     
    Published by:Sivaranjani E
    First published: