உடலுக்கு உடனடியாக ஆற்றல் வேண்டும் என்றால் சில உணவுகளை சாப்பிட்டு வருவோம். சிலருக்கு காபி குடித்தால் அதிக ஆற்றல் கிடைப்பது போன்று இருக்கும். சிலருக்கு இனிப்பாக எதாவது சாப்பிட்டால் உற்சாகமாக இருப்பார்கள். அதே போல சிலர் டீ குடித்தால் உற்சாகமாக இருப்பார்கள். காபியை காட்டிலும் டீ குடித்து வரும் மனிதர்களே இங்கு அதிகம் உள்ளனர். சாதாரண வீடுகளில் இருந்து பெரிய கடைகள் முதல் டீக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
சாமானிய மக்களின் பிடித்தமான ஒன்றாகவும் டீ இருந்து வருகிறது. இவ்வளவு சிறப்பு ஏன் இந்த டீயிற்கு வந்தது என்று யோசித்தது உண்டா? மக்கள் டீயை விரும்பி குடிப்பதற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு. தினமும் காலையில் எழுந்தோ, சோர்வாக இருக்கும் போதோ, வேலைகளுக்கு இடையிலோ ஒரு கப் சூடான டீயை குடிப்பார்கள். இது போன்று செய்து வருவதால் அந்த நாள் முழுக்க உற்சாகமான மனநிலையை பெறுவதாக கூறுகிறார்கள். அதே போன்று தங்களின் வேலைகளை சீக்கிரமாக முடித்து விடுவதாகவும் உணர்கிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க டீயை மிக ஆரோக்கியமானதாக மாற்றுவதற்கு சிலவற்றை அதில் சேர்த்து கொள்வார்கள். ஏலக்காய் டீ, இஞ்சி டீ, மசாலா டீ, தந்தூரி டீ என பல வகை டீ உள்ளன. அதே போன்று துளசி டீ என்கிற ஒன்றும் அதிக நன்மைகளை கொண்டதாக உள்ளது என பலர் கூறுகின்றனர். குறிப்பாக குளிர் காலங்களில் துளசி டீயை குடித்து வருவதால் பல நன்மைகள் கிடைக்குமாம். இதன் மணமும் சுவையும் சாதாரண டீயை விடவும் சிறப்பாக இருக்கும். இதை எப்படி தயாரிப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
துளசி இலைகள் - 18-20
இஞ்சி - ஒரு துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
கருப்பு மிளகு - 5-6
பால் - 3 கப்
தேயிலை இலைகள் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
நறுக்கிய வெல்லம் -¼ கப்
செய்முறை: ஒரு சிறிய பாத்திரத்தில் இஞ்சி, ஏலக்காய், கருப்பு மிளகு, கிராம்பு ஆகியவற்றைக் கலந்து, அவற்றை ஒன்றாக அரைக்கவும். பிறகு பால் காய்ச்சும் பாத்திரத்தை எடுத்து கொண்டு அதில் ஒரு கப் தண்ணீரை சேர்த்து சூடாக்கி, அரைத்த கலவையை தேயிலை இலைகளுடன் சேர்த்து கொண்டு இதில் போடவும். சிறிது நிமிடம் இந்த கலவையை கொதிக்க விடவும். அடுத்து துளசி இலைகளை கைகளால் நசுக்கி இந்த பாத்திரத்தில் சேர்க்கவும். இதை 2-3 நிமிடங்கள் கொதிக்க விடவும். இறுதியாக பால் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு நறுக்கிய வெல்லத்தை சேர்த்து வெதுவெதுப்பாக குடிக்கலாம்.
இந்த டீ மிக ஆரோக்கியமானது. காலை மற்றும் மாலை வேலைகளில் சிறந்த அருமருந்தாகவும் இருக்கும்.
Published by:Tamilmalar Natarajan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.