Home /News /lifestyle /

குளிர்காலத்திற்கு மிகவும் அவசியமான உணவு எது என்று தெரியவில்லையா? அப்ப இத படிச்சி தெரிஞ்சிக்கோங்க..

குளிர்காலத்திற்கு மிகவும் அவசியமான உணவு எது என்று தெரியவில்லையா? அப்ப இத படிச்சி தெரிஞ்சிக்கோங்க..

உணவு

உணவு

குளிர்காலத்தில் உங்கள் உடலுக்கு ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவுகள் மிகவும் அவசியமான ஒன்று.

மனிதனின் உடல்நலனுக்கு தேவைப்படும் இன்றியமையாத சத்துக்களில் ஃபோலிக் அமிலம் முக்கியமானது . இந்த வைட்டமின்தான் நமது உடலில் பிறவி ஊனம் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது. ஃபோலிக் அமிலம்' என்பது வைட்டமின் B9ஐ குறிக்கும். லத்தீன் மொழியில் 'ஃபோலியம்'  என்றால் தாவர இலை என்று பொருள். இவை உடலில் புதிய செல்கள் உருவாக்கவும், DNAவை உருவாக்கவும் செய்கிறது. ஒருவரின் ஆயுள்காலம் முழுமையும், இயல்பான வளர்ச்சியை மேம்படுத்த இவை உதவுகிறது. அதனால் தான் குழந்தை பிறப்புக்கு முன்பும் பின்பும் இந்த சத்து மிக அவசியமாக கவனத்தில் கொள்ளப்படுகிறது. 

ஒரு பெண் கர்ப்பக்காலத்தில் ஃபோலெட் சத்து குறைவாக இருக்கும் போது கருவில் வளரும் குழந்தையின் முதுகெலும்பு பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதே நேரம் கருவுறுதலுக்கு முன்பாக ஃபோலிக் அமிலம் எடுத்துகொண்டால் ஸ்பைனா பிஃபிடா மற்றும் கடுமையான நரம்பு குழாய் குறைபாடுகளை தடுக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

ஃபோலிக் அமில விழிப்புணர்வு வாரம் : 

தேசிய ஃபோலிக் அமில விழிப்புணர்வு வாரம் ஜனவரி 6-12 வரை கொண்டாடப்படுகிறது. ஃபோலிக் அமிலம் அடிப்படையில் ஃபோலேட் என்பதன் ஒரு செயற்கை கலவை ஆகும். BMC Medicine இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி,  நரம்புக் குழாய் குறைபாட்டை தடுக்க பரிந்துரைக்கப்பட்ட ஆரம்ப காலத்திற்கு அப்பால் கர்ப்ப காலத்தில் ஃபோலிக் அமிலம் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இது குழந்தைக்கு அறிவாற்றல் வளர்ச்சியிலும் நன்மை பயக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு உகந்ததாக இருப்பதைத் தவிர, இந்த ஊட்டச்சத்து இதய ஆரோக்கியத்தில் சாதகமான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ஃபோலிக் அமிலத்தை கூடுதலாக சேர்ப்பது பக்கவாதம் அபாயத்தை 10 சதவிகிதம் குறைக்கவும், ஒட்டுமொத்த இதய ஆபத்தை 4 சதவிகிதம் குறைக்கவும் வழிவகுக்கும் என்று கூறியுள்ளது.

Folic Acid யாருக்கு அவசியம்?

Folic Acid அனைவருக்கும் தேவையென்றாலும், கர்ப்பிணிகளுக்குக் கூடுதலாக தேவைப்படுகிறது. பொதுவாக, ஒரு கர்ப்பிணியின் கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்களில் சிசுவின் உடல் பகுதிகள் வளரத் தொடங்கிவிடும். அக்காலகட்டத்தில் குழந்தையின் உடல் வளர்ச்சி, மூளை, முதுகுத் தண்டுவடம் உள்ளிட்ட நரம்பு மண்டல வளர்ச்சி ஆகியவை சரியாக அமைவதற்கு இந்த வைட்டமின் அவசியம் தேவை. மேலும், எலும்பு மஜ்ஜையில் உருவாகும் ரத்தச் சிவப்பணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவற்றின் உற்பத்தியிலும் பல அமினோ அமிலங்களின் உற்பத்தியிலும் இந்த வைட்டமின் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பருப்பு வகைகள்: 

ஒரு தாவரத்தில் உள்ள விதைகள், பழங்களில் உள்ள விதைகள் இவற்றையே நாம் பருப்பு வகைகள் என அழைக்கிறோம். இவற்றில் அதிக அளவு போலேட் சத்து உள்ளது. உதாரணமாக பீன்ஸ், பட்டாணி, சமையலுக்குப் பயன்படுத்தும் பருப்பு தானியங்கள் இவற்றைச் சொல்லலாம். இதில் போலேட் சத்தின் அளவானது ஒவ்வொன்றுக்கும் மாறுபடலாம். ஒரு கப் பீன்ஸ் 131 mcg போலேட் தருகிறது. அதே சமயம் ஒரு கப் சமைக்கப்பட்ட பருப்பில் இருந்து 358 mcg போலேட் சத்து கிடைக்கிறது. பருப்பு வகைகளில் போலேட் சத்து மட்டும் அல்லாமல் புரதம், மெக்னீசியம், பொட்டாசியம் , நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் ஆகியவை கிடைக்கின்றன.

பீட்ரூட் :

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பீட்ரூட் மிகுதியாக பரிந்துரைக்கப்படுகிறது. இரும்பு சத்து, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் இதில் வளமையாக உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். பீட்ரூட் உணவில் நிறம் சேர்க்கவும் சுவை சேர்க்கவும் மட்டும் பயன்படுவதில்லை. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் வாரி வழங்குகிறது. பீட்ரூட்டில் அரிய வகை சத்துக்களான பொட்டாசியம், மாங்கனீஸ் மற்றும் விட்டமின் சி அடங்கியுள்ளன.இதனுடன் கூடவே கர்ப்பிணிகளுக்கு அவசியமான போலேட் சத்தும் அதிகமாக இருக்கிறது. ஒரு கப் (136gm ) சமைக்கப்படாத பீட்ரூட்டில் 148 mcg போலேட் சத்து கிடைக்கிறது . அதாவது ஒரு நாளுக்குத் தேவையான போலேட் சத்தில் 37.5 சதவிகிதம் இந்த பீட்ரூட்டில் இருந்து கிடைக்கிறது.

ப்ரோக்கோலி:

ப்ரோக்கோலியில் வைட்டமின் C, ஃபோலிக் அமிலம் (Folic acid), மக்னீஷியம், சிங்க், பொட்டாஷியம் மற்றும் மற்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. மேலும் ப்ரோக்கோலியை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் சருமம், கூந்தல் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும். 

நட்ஸ் வகைகள்:

பெரும்பாலான உடல் எடைக்குறைப்பு டயட்களில் இந்த நட்ஸ் வகைகள் கட்டாயம் இருந்தே தீரும். காரணம் இவற்றில் உள்ள எண்ணற்ற விட்டமின் சத்துக்கள் மற்றும் புரதச்சத்து, நார்ச்சத்துக்கள் தான். உடலுக்குத் தேவையான மினரல்களையும் நட்ஸ்கள் கொடுக்கின்றன. உங்கள் டயட்டில் தினமும் சிறிதளவு நட்ஸ்களை சேர்த்துக் கொள்வது போலேட் சத்தினை அதிகரிக்க உதவி செய்கிறது. ஒவ்வொரு வகை நட்ஸ் வகைகளுக்கும் ஒவ்வொருவித அளவுகளில் போலேட் சத்து கிடைக்கிறது. உதாரணமாக ஒரு அவுன்ஸ் வால்நட் பருப்பில் (28g) 28 mcg அளவு போலேட் சத்து கிடைக்கிறது. ஒரு நாளின் தேவைக்கு 7 சதவிகிதம் போலேட் சத்து இதில் கிடைக்கிறது. அதே சமயம் இதே அளவு எடுக்கப்பட்ட  ஆளி விதைகளில் 24 mcg அளவு போலேட் சத்து கிடைக்கிறது. ஒரு நாளின் தேவையில் 6 சதவிகித போலேட் சத்தாக இது பார்க்கப்படுகிறது

சிட்ரஸ் பழங்கள்:

புளிப்பு தன்மை நிறைந்த பழங்களில் பெரும்பாலானவை சிட்ரஸ் பழங்கள் தான். ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை என புளிப்பு சுவை மிகுந்த இந்த சிட்ரஸ் பழங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. ஒரு பெரிய ஆரஞ்சில் 55 mcg அளவு போலேட் சத்து இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது ஒரு நாளைக்குத் தேவையான போலேட் சத்தில் 14 சதவிகிதம் ஒரு ஆரஞ்சில் கிடைக்கிறது. அதிக அளவு சிட்ரஸ் பழங்களைச் சாப்பிடுவதால் புற்று நோய் வகைகளைத் தடுக்க முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன.

ஆண், பெண் என இருபாலருக்குமே அவசியமானது இந்த ஃபோலிக் அமிலம். செல்களில் DNA மற்றும் RNA, வளர்ச்சிக்கு இதுவே உறுதுணையாக இருக்கிறது. மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைச் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதனால், பக்கவாதம் உள்ளிட்டவை தவிர்க்கப்படுகிறது. சமீபகால ஆராய்ச்சிகளில் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடவும், ஞாபகசக்தியுடன் இருக்கவும் இந்த சத்துக்கள் உதவி செய்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே மேற்சொன்ன உணவுக்குறிப்புகள் நிச்சயம் உங்களுக்கு நன்மை அளிக்கும்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Food, Winter

அடுத்த செய்தி