பிரியாணி, பிரை, தோசை அல்லது பீட்ஸா மீதான டாப் லேயர் போன்ற பல உணவு வகைகளில் காளான் இடம் பிடிக்கிறது. காளான் 65, காளான் கிரேவி போன்றவையும் நம் நாவுக்கு இதமான சுவை அளிக்கும் வெரைட்டிகள் தான். இது நாள் வரையிலும் சுவைக்காக அல்லது வெரைட்டியாக சாப்பிட வேண்டும் என்பதற்காக நாம் காளான் சாப்பிடுபவராக இருந்திருப்போம். ஆனால், நம் குடல் நலனுக்கு காளான் உகந்தது என்று தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் நிறையூட்டப்பட்ட சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிடும்போது உடலுக்கு நீண்ட கால பாதிப்புகள் ஏற்படுகின்றன. நீரிழிவு, இதய நோய், சில வகை புற்றுநோய்கள் மற்றும் இதர உடல் நல பாதிப்புகள் போன்றவை கொழுப்பு மற்றும் சர்க்கரை உணவுகளால் ஏற்படுகின்றன. இந்நிலையில், உடலில் எந்தெந்த உணவுகள் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பது குறித்து அமெரிக்காவில் உள்ள மஸாசுஸெட்ஸ் பல்கலைக்கழக நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். உடல் பருமன் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு ஆகிய பிரச்சினைகளை தடுக்கும் அல்லது தீர்வு அளிக்கும் உணவுப் பழக்கம் குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து, பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் ஸென்ஹுவா லியு கூறுகையில், “குடல் சார்ந்த பிரச்சினைகள் தான் உடலில் அடுத்தடுத்த நோய்கள் உண்டாகுவதற்கு காரணமாக இருக்கின்றன’’ என்று குறிப்பிட்டார்.
உலகெங்கிலும் அதிகம் கிடைக்கக் கூடிய ஓய்ஸ்டர் வகை காளான்களை, சூரிய ஒளியில் உலர்த்திய பிறகு உணவில் சேர்த்துக் கொள்ளுகையில், அதில் நார்ச்சத்து மற்றும் விட்டமின் டி போன்ற சத்துகள் கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஸென்ஹுவா லியு கூறுகையில், “வெஸ்டர்ன் வகை உணவுப் பழக்கத்தில் தரத்தை மேம்படுத்துவதற்கான இயற்கையான உணவுப் பொருளாக காளான் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் குடல் நலனுக்கும் இது உகந்தது ஆகும்’’ என்று தெரிவித்தார்.
கொளுத்தும் வெயிலுக்கு சத்தான, சுவையான, கிர்ணி பழம்.!
காளான் உணவில் கிடைக்கும் இதர பலன்கள்:
பெருகி வரும் துரித உணவு கலாசாரம் காரணமாக பெரிதும் பாதிக்கப்படும் உங்கள் குடலுக்கு காளான் உணவு பயனுள்ளது என்பது உறுதியாகியுள்ள அதே சமயம், அதில் வேறு பல சத்துக்களும் கிடைகின்றன. குறிப்பாக, காளானில் கலோரி சத்து குறைவாகும். இதில், நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் போன்ற சத்துகள் நிரம்பியுள்ளன.
மூளையின் ஞாபகத் திறனை பாதிக்கும் அல்சைமர் நோய், இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற பாதிப்புகளை இது கட்டுப்படுத்துகிறது. உடலில் வயோதிக மாற்றங்களை தடுத்து, உங்களை என்றென்றும் இளமையானவராக காண்பித்துக் கொள்ள காளான் உணவுகள் பயனுள்ளதாக அமைகின்றன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.