தீபாவளியை முன்னிட்டு பராம்பரிய முறையில் தயாராகும் செட்டிநாடு பலகாரங்கள்

பராம்பரிய முறையில் தயாராகும் செட்டிநாடு பலகாரங்கள்

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில், செட்டிநாடு பலகாரங்கள் தயாரிக்கும் பணி, காரைக்குடியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  

  • News18
  • Last Updated :
  • Share this:
தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது புத்தாடைகளும், பட்டாசுகளும், பலகாரங்களும்தான்.

இன்றைய நவீன உலகில் விதவிதமான கலர்களில் பல்வேறு வகையான இனிப்புகள், பலகாரங்கள் விற்பனைக்கு வந்தாலும் மனம் விரும்புவதோ உரிய கைப்பக்குவத்தில் உருவாகும் பாரம்பரிய திண்படங்களைத்தான். அந்த வகையில், மண்ணுக்கே உரித்தான இயற்கை முறையில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் செட்டிநாட்டு பலகாரங்கள் தயாராகி வருகின்றன.

செட்டிநாட்டு பலகாரங்கள் என்றால் தனி சுவைதான். சுத்தமான தரமான எண்ணெய், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மூலப்பொருள்கள்  கொண்டு பாரம்பரிய முறைப்படியும் தயாரிக்கப்படும் பலகாரங்கள் ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும்.


தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் காரைக்குடி, கோட்டையூர். கானாடுகாத்தான், கண்டனூர் போன்ற பகுதிகளில்  மண் மணம் மாறாமல் பெண்களின் கை பக்குவத்தில்  செட்டிநாட்டு பலகாரங்கள் தயாராகி வருகின்றன.


தேன்குழல், பதமான இனிப்பு சீடை, கார சீடை, மொறுமொறு அதிரசம், மாவு உருண்டை, இனிப்பு மணகோலம், கார தட்டை,,சுருள் சீடை, கை சுத்தல் முறுக்கு, பிரண்டை முறுக்கு, லட்டு என விதவிதமான பலகாரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.ஆன்-லைன் மூலமாக அமெரிக்காவுக்கு பலகாரங்கள் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கும் முத்துக்கருப்பி, சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கப்படும் தின்பண்டங்களுக்கு தற்போது மிகுந்த வரவேற்பு உள்ளது என்கிறார்.

செட்டிநாடு பலகாரங்களுக்கு சுவை கூட்டுவதே பராம்பரிய விறகு அடுப்புகள்தான் என்கிறார் கோட்டையூரைச் சேர்ந்த மணிமொழி. நவீன உலகில் விதவிதமான தின்பண்டங்கள் இருந்தாலும், பாரம்பரிய தின்பண்டங்களே, தன்னை செட்டிநாடு நோக்கி ஈர்த்தது என்று பெங்களூரைச் சேர்ந்த துரைராஜ் தெரிவிக்கிறார்.


ஒரே முறை மட்டுமே பயன்படுத்தப்படும் எண்ணெய், உரலில் கையால் இடிக்கப்பட்டு தயாரிக்கப்படும் மாவு, விறகு அடுப்புகள் மற்றும் பெண்களின் கைப்பக்குவத்தால் தயாராகும் செட்டிநாடு பலகாரங்களின் ருசி உள்ளூரை தாண்டி வெளிநாடுகளிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்றால் அது மிகையில்லை.

Also see...

Published by:Vaijayanthi S
First published: