முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சர்க்கரை நோயாளிகள் காலையில் சாப்பிட ஆரோக்கியமான காலை உணவுப் பட்டியல் இதோ...

சர்க்கரை நோயாளிகள் காலையில் சாப்பிட ஆரோக்கியமான காலை உணவுப் பட்டியல் இதோ...

உணவு

உணவு

2045ம் ஆண்டளவில், இருபது நபர்களில் பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :

நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் (Diabetes) என்பது உலகளாவிய கவலைக்குரிய நோயாக மாறி வருகிறது. முக்கியமாக இந்த நோய்க்கு இதுவரை எந்த சிகிச்சையும் இல்லை. 2045ம் ஆண்டளவில், இருபது நபர்களில் பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு என்பது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பொறுத்து வகைப்படுத்தப்படுகிறது. சரியான நேரத்தில் சாப்பிடுவதன் மூலமும் மட்டுமே நீங்கள் சர்க்கரை நோய்க்கான அறிகுறிகளை நிர்வகிக்க முடியும்.

சர்க்கரை நோயாளிகள் ஒழுங்கற்ற உணவு அட்டவணையை பின்பற்றுகிறார்கள் அல்லது காலை உணவைத் தவிர்க்கிறார்கள், என்றால் அவர்களின் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் மோசமான சிக்கலை அவர்கள் எதிர்கொள்வார்கள். காலை உணவு என்பது ரொம்ப முக்கியமானது. அதிலும் சர்க்கரை நோயாளிகளாக (Diabetes) இருந்தால், காலை உணவைக் கட்டாயம் தவிர்க்கக்கூடாது.

உணவு இடைவேளைகளில் இரவு உணவு மற்றும் காலை உணவிற்கு இடைப்பட்ட நேரம் தான் அதிகம். காலை உணவைத் தவிர்த்தால், இரத்த சர்க்கரை அளவு மிகவும் குறைந்துவிடும். அதேபோல் காலை உணவை சரியானதாக தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். அதுவும் உடலுக்கு ஆற்றலை வழங்கும்படியான ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். என்னென்ன உணவுகள் சாப்பிடலாம் என இங்கு தெரிந்து கொள்வோம்.,

காளான் உத்தப்பம் :

காளான், சோளம், கீரை மற்றும் மிளகு ஆகியவற்றைக் கொண்ட உத்தப்பம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமானது. அதுவும் இந்த காளான் உத்தப்பம் பல சத்துக்களை கொண்டுள்ளது. இதை சர்க்கரை நோயாளிகள் கண்ணை மூடிக்கொண்டு சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள் :

தோசை மாவு - 2 கப்

வெங்காயம் நறுக்கியது - 2

நறுக்கிய குடைமிளகாய் - 1

பச்சை மிளகாய் நறுக்கியது - 1

கருவேப்பிலை நறுக்கியது - 1 கைப்பிடி

காளான், நறுக்கியது - 1 கப்

கரம் மசாலா - 1 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - தேவைக்கு

செய்முறை :

கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய், கருவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் காளான், கரம் மசாலா சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்து ஆற வைக்கவும். தோசைக்கல்லில் 2 கரண்டி மாவை ஊற்றி, அதன் மேல் வதக்கிய காளான் மசாலாவை தூவவும். மிதமான சூட்டில் 3 நிமிடம் மூடி வைக்கவும். பின் திருப்பி போட்டு 1 நிமிடம் சுட்டு, சூடாக பரிமாறவும்

கேழ்வரகு - கோதுமை தோசை :

கோதுமை, கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.கோதுமை, கேழ்வரகு, மற்றும் கேரடின் சத்து நிறைந்த தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு - 3/4 கப்

கோதுமை மாவு - 1/4 கப்

தோசை மாவு - 1/2 கப்

உப்பு - தேவைக்கு

வெங்காயம் - 2

கேரட் - 1

கறிவேப்பிலை - சிறிதளவு

பச்சை மிளகாய் - 2

சீரகம் - 1 ஸ்பூன்

கடுகு - 1 ஸ்பூன்

எண்ணெய் - தேவைக்கு

செய்முறை :

வெங்காயம், கறிவேப்பிலை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கேரட்டை துருவிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, தோசை மாவை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நீர்க்க கரைத்து 1/2 மணி நேரம் ஊற விடவும். பிறகு அந்த மாவில் வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை, கேரட், ப.மிளகாய் சேர்த்து கலக்கவும். கடாயை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம் போட்டு தாளித்து மாவில் சேர்த்து கலக்கவும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மிதமான தீயில் வைத்து தோசை மாவை கரண்டியில் எடுத்து தோசைக்கல்லில் ஊற்றவும். தோசையின் ஓரம் இலேசாக சிவந்து வரும் போது திருப்பி சுட்டு எடுக்கவும். இப்போது சூப்பரான கேழ்வரகு - கோதுமை தோசை ரெடி. தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

ஓட்ஸ் இட்லி :

ஓட்ஸ் தற்போது பலராலும் உட்கொள்ளப்படும் டயட் உணவாக இருக்கிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தொடங்கி உடல் எடையைக் குறைக்க நினைப்போர் வரை ஓட்ஸை விரும்பி உண்கின்றனர். ஓட்ஸை கஞ்சியாக அருந்துவதைக் காட்டிலும் அவ்வப்போது இப்படி இட்லியாகவும் செய்து சாப்பிடுங்கள்.

தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் - 1 கப்

ரவை - 1/2 கப்

தயிர் - 1/2 கப்

பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கவும்)

கொத்தமல்லி - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)

கேரட் - 1

தண்ணீர் - தேவையான அளவு

பேக்கிங் சோடா - 1 1/2 தேக்கரண்டி

தாளிக்க :

எண்ணெய் - 1 தேக்கரண்டி

கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

கருவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)

செய்முறை :

ஓட்ஸை கடாயில் எண்ணெய் இன்றி வறுக்கவும். ஓட்ஸின் வெப்பம் தணிந்த பின் மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அடுத்ததாக மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கடலை பருப்பு சேர்த்து வதக்கவும். பின் கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும். பொன்னிறமாக வந்ததும் அதில் ரவையை கொட்டிக் கிளரவும். பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள ஓட்ஸை கொட்டி 5 நிமிடம் தொடர்ந்து கிளரிக் கொண்டே இருங்கள். தற்போது அந்தக் கலவையை மற்றொரு பாத்திரத்தில் கொட்டி சீவி வைத்துள்ள காரட், கொத்தமல்லி, உப்பு, பேக்கிங் சோடா, தயிர் ஆகியவற்றை சேர்த்துக் கொண்டு நன்குக் கலக்கவும். அதில் மாவு பதத்திற்கு ஏற்ப தண்ணீர் ஊற்றி கலக்கவும்.

குளிர்காலத்தில் உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கான எளிய டிப்ஸ்..

ஓட்ஸ் இட்லி மாவு தயார். தற்போது இட்லி குக்கர் தட்டில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி வையுங்கள். 15 நிமிடங்கள் கழித்து இட்லி வெந்துவிட்டதா என பார்த்து இறக்கிவிடுங்கள். சுவையான இட்லி தயார்.

உப்மா :

சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சம்பா ரவையை சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு உப்மா நல்ல ஜீரண சத்தை அளிப்பதுடன் நல்ல ஆரோக்கியத்தையும் பெற வழிவகுக்கும். இன்று சம்பா ரவை காய்கறி உப்புமா செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

எண்ணெய் - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிது

உப்பு - தேவையான அளவு

இஞ்சி - 1/2 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

பச்சை பட்டாணி - 1/2 கப்

கேரட் - 1

சம்பா ரவை - 1/2 கப்

செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லி, கேரட், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும். சம்பா ரவையை நீரில் அலசி, நீரை முற்றிலும் வடிகட்டி தனியாக வைக்க வேண்டும். பின்னர் 2 கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் ரவையைப் போட்டு நன்கு 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதனை இறக்கி, நீரை வடிகட்டி வைக்க வேண்டும். குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, 2 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து அதில் துருவிய இஞ்சியை சேர்த்து கிளறி, பச்சை பட்டாணி மற்றும் கேரட் சேர்த்து, பிரட்டி 2 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும். பிறகு அத்துடன் சம்பா ரவையை சேர்த்து, 1 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, குக்கரை மூடி, தீயை குறைவில் வைத்து, 2 விசில் விட்டு, இறக்க வேண்டும். பின் குக்கரை திறந்து, அதன் மேல் கொத்தமல்லியை சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.

சம்பா ரவை காய்கறி உப்புமா ரெடி.

கொண்டைக் கடலை :

அதிக புரோட்டீன் நிறைந்தது. கொண்டைக் கடலையை வேக வைத்து அதில் வெள்ளரி, தக்காளி, வெங்காயம், மிளகுபொடித் தூவி கொஞ்சம் சுவைக்கு எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து உண்டால் இதைவிட சிறந்த உணவு என்ன வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் (Diabetes) அறவே தவிர்க்க வேண்டியவை:

கிழங்குகள் (நிலத்தின் அடியில் விளையும் இஞ்சி, மஞ்சள், வெங்காயம், பூண்டு, முள்ளங்கி தவிர), நெய், வெண்ணெய், பாலாடை கட்டி, பாலேடு, சர்க்கரை, வெல்லம், தேன், முந்திரி, பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகள், தேங்காய், இளநீர், குளிர்பானங்கள், சத்துமாவு, பானங்கள், பூஸ்ட், ராகிமால்ட், ஹார்லிக்ஸ், போர்ன்விடா, ஓவல்டின், உலர்ந்த பழ வகைகள், மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், சப்போட்டா, திராட்சை போன்ற இனிப்பு மிகுந்த பழங்கள், ஐஸ்கிரீம், பீட்ஸா போன்ற பேக்கரி தயாரிப்புகள், இனிப்பு சேர்த்த பிஸ்கட், ஜாம், ஜெல்லி, சாஸ், மது வகைகள், சிகரெட் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Breakfast, Diabetic diet